கொழும்பில் நடைபெற்ற செம்மணி நூல் வெளியீட்டு நிகழ்வு!
.

கொழும்பில் நடைபெற்ற செம்மணி நூல் வெளியீட்டு நிகழ்வில், பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ், “உடல்களை புதைக்கலாம், ஆனால் உண்மைகளை ஒருபோதும் புதைக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
புதைக்கப்படாத எலும்புக்கூடுகளும் ஆன்மாக்களும் உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் ஆன போதிலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என அவர் கவலை தெரிவித்தார். தமது உறவினர்களைத் தேடி, விசாரணைகள் மற்றும் சாட்சி பதிவுகளுக்காக அலைந்து, மக்கள் களைப்படைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது, யாரால் நடத்தப்பட்டது, அவர்களின் பெயர், பதவி உள்ளிட்ட விவரங்களை அறிந்துள்ளதாகவும் ரணிதா தெரிவித்தார். இறுதி யுத்தத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தவர்கள், சோதனைச் சாவடிகளில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட இலட்சக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கான புள்ளிவிவரங்கள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பதிவாகியுள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகள் மிகவும் தாமதமாக முன்னெடுக்கப்படுவதாகவும், நீதிமன்ற நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக இழுபறியில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாதிக்கப்பட்டவர்கள் 16 ஆண்டுகளாக நீதிக்காக பரிதவிப்பதாகவும், சுயாதீன விசாரணைகள் மூலம் விரைவாக நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் வலியுறுத்தினார்.