தமிழ் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு!
ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல் இன்றி அத்தியாவசிய செய்திகளை அறிக்கையிடுவதற்கு தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த ஊடகவியலாளர் இதற்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களில் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை இலங்கை பாதுகாப்பு தரப்பு உடனடியாக கைவிட வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு கோரியுள்ளது.
அதனூடாகவே, ஊடகவியலாளர்கள் அச்சமின்றி சுதந்திரமாக பணியாற்ற முடியும் என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழுவின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பெஹ் லிஹ் யி (Beh Lih Yi) தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களை இலக்கு வைப்பதற்கு பயங்கரவாத தடைச் சட்டம் பயன்படுத்தப்படுவதானது, ஊடக சுதந்திரத்தை மீறும் செயல் என்றும் அதிகார துஷ்பிரயோகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மனித உரிமை குழுக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஊடகச் சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்வதற்கு அரசாங்கத்துக்கு தனித்துவமான வாய்ப்பு உள்ளதாகவும் சர்வதேச அமைப்பான ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான குழு வலியுறுத்தியுள்ளது.