அனுர வெளிநாடுகளுக்கு செல்லும் விஜயம் வெறும் சுற்றுப்பயணம்; நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை! எதிர்க்கட்சி விசனம்!
மாலைதீவு செல்ல முன் ஜேர்மனுக்கு விஜயம் செய்திருந்தார். அதனால் எமக்கு கிடைத்த நன்மை என்ன?

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உட்பட அரசாங்கத்தின் அமைச்சர்களின் வெளிநாட்டு விஜயங்கள் பிரயோசனமற்றவையாகவே உள்ளன என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வெளிநாடுகளுக்கு செல்லும் விஜயம் வெறும் சுற்றுப்பயணம் ஆகும். அவர் நாடு நாடாக சென்று கொண்டிருக்கின்றார்.
இதனை விடுத்து அவரது வெளிநாட்டு பயணங்களால் நாட்டுக்கு எந்த ஒரு நன்மையும் இல்லை. மாலைதீவு செல்ல முன் ஜேர்மனுக்கு விஜயம் செய்திருந்தார். அதனால் எமக்கு கிடைத்த நன்மை என்ன? ஜேர்மனுடன் எட்டப்பட்ட இணக்கப்பாடுகள் என்ன?
அமெரிக்காவுக்கு சென்றிருந்தால் வரி தொடர்பில் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்து தீர்வு காண்பதற்காக சென்றிருக்கின்றார்கள் என்று என்னலாம்.
எனவேதான் இவற்றை சாதாரண சுற்றுப் பயணம் என்று கூறுகின்றோம். இதற்கு செலவிடுவது யார்?
ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என நாம் கூறவில்லை. ஆனால் அந்த ஒவ்வொரு விஜயத்தின் மூலமும் நாட்டுக்கு ஏதாவது நன்மை கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்துகின்றோம். என்றார்.