அதிமுகவை மீட்க முடியாத பழனிசாமி தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
திருவாரூர் மாவட்டத்தில் ரூ.80 கோடியில் நெல் சேமிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுகவை மீட்க முடியாதவர் தமிழ்நாட்டை மீட்பேன் என்று கூறிகிறார் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.
திருவாரூர் மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை வருகை தந்தார். தொடர்ந்து, திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியில் இருந்து ரோடு-ஷோவாக சென்று மக்களை சந்தித்து, அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, ரயில்வே மேம்பாலம் அருகே நிறுவப்பட்டுள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டை 5 முறை ஆண்ட திருவாரூரை சேர்ந்த கருணாநிதியின் மகனாக மட்டுமல்ல, அவரது கொள்கை வாரிசாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். திருவாரூர் என்றாலே அனைவரது மனதிலும் திருவாரூர் தேரும், கருணாநிதியும் தான் தோன்றுவார்கள்.
திருக்குவளையில் பிறந்த கருணாநிதி தான், தனது அறிவால் ஆற்றலால் நிர்வாகத்தால் தலை சிறந்த தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறார். பூமிப் பந்தில் வாழும் தமிழர்கள் எல்லாம் தமிழனத் தலைவர் என போற்றக் கூடிய அளவுக்கு உயர்ந்து இன்றைக்கும் நம் அனைவருக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்.
மற்ற மாவட்டங்களில் நான் பேசும் போது, உங்களின் ஒருவன் என்று தான் பேசுவேன். ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் உள்ளவர்கள் தான் எங்களில் ஒருவன் என என்னை அரவணைக்கின்றனர்.