பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதற்குத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் வழங்கத் தயார் – ஐரோப்பிய ஒன்றியத்தின் INTER PARES!
தேவையான அறிவு மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்குத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் INTER PARES உலகளாவிய திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இலங்கைப் பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்துவதற்குத் தேவையான அறிவையும் அனுபவத்தையும் வழங்கத் தயார் – ஐரோப்பிய ஒன்றியத்தின் INTER PARES உலகளாவிய திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவிப்பு.
இந்நாட்டின் பாராளுமன்ற சட்டவாக்கச் செயற்பாடுகள், மேற்பார்வை, நிதி மற்றும் நிர்வாகம் போன்ற பணிகளை மேம்படுத்துவதற்கும், அவற்றுக்கான திறனை வலுப்படுத்துவதற்கும் தேவையான அறிவு மற்றும் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்குத் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் INTER PARES உலகளாவிய திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இலங்கைப் பாராளுமன்றத்தின் திறனை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட நான்கு நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதிநாளான கடந்த 11ஆம் திகதி பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர்கள் இக்கருத்தைத் தெரிவித்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் INTER PARES உலகளாவிய திட்டத்தின் தலைவர் கலாநிதி ஜொனதன் மர்ஃபி (Dr.Jonathan Murph) உள்ளிட்ட குழுவினர் இதில் பங்கெடுத்திருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் Inter Pares உலகளாவிய திட்டத்தின் தூதுக் குழுவினர் கடந்த 07ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இலங்கைப் பாராளுமன்றத்தின் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர்.
இவ்வாறு நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் ஊடாகப் பெற்றுக்கொண்ட தகவல்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் சில துறைகளின் ஊடாக இந்நாட்டுப் பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதற்கு தமது ஒத்துழைப்பை வழங்க எதிர்பார்த்திருப்பதாகவும் இக்குழுவினர் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக வரவுசெலவுத்திட்டத்தைக் கண்காணிப்பதைப் பலப்படுது்துவது, மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் ஊடாக ‘திறந்த பாராளுமன்ற’ எண்ணக்கருவை மேம்படுத்துவது, இயலாமையுடைய நபர்கள், பாலின சமமத்துவம், காலநிலை மாற்றம் போன்ற துறைகளில் அவர்கள் கவனம் செலுத்தியருந்தனர்.
அதன்படி, இந்தத் துறைகளை வலுப்படுத்த பல்வேறு செயலமர்வுகள் மற்றும் பரிமாற்றத் திட்டங்களை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக அவர்கள் வலியுறுத்தினர்.
இந்தத் தூதுக் குழுவினரின் விஜயத்தின் முதலாவது நாளில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோரைச் சந்தித்து கலந்துரையாடினர். செயலாளர் நாயகம் பாராளுமன்றத்தின் செயற்பாடு குறித்து முழுமையான விளக்கத்தை வழங்கினார்.
மேலும், உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன அவர்கள் பாராளுமன்ற வரவுசெலவுத்திட்ட அலுவலகம் குறித்து பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்தார்.
இந்தக் குழுவினர், தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகளையும் சந்தித்துக் கருத்துப் பரிமாறிக் கொண்டனர். இச்சந்திப்பில் பாராளுமன்றத்தின் சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா மற்றும் தொடர்பாடல் திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சட்டமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே நெருங்கிய உறவை உருவாக்குவதில் ஊடகங்கள் மற்றும் பொது சேவைகளின் பங்கு குறித்து இங்கு விளக்கமளிக்கப்பட்டது.
இதன் பின்னர், சட்டவாக்கச் செயற்பாடுகள் மற்றும் குழு முறைகள் குறித்து சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தினருடன் கலந்துரையாடல் நடைபெற்றது. சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம்.ஜயலத் பெரேரா, சபை ஆவண அலுவலகம் மற்றும் சட்டமூல அலுவலகத்தின் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். குழுக்கள் எவ்வாறு செயற்படுகின்ற என்பது தொடர்பிலும், சட்டமூலங்கள் தயாரிக்கப்பட ஆரம்பமானது முதல் சட்டமாக்கப்படுகின்றமை வரையான செயன்முறைகள் எவ்வாறு என்பது குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், அரசாங்க நிதி பற்றிய குழுவின் (CoPF) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத், இயலாமை உடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா, பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், இலங்கைக் காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத் தலைவர்களான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் (பேராசிரியர்) எல்.எம். அபேவிக்ரம ஆகியோரையும் இக்குழுவினர் சந்தித்துக்கலந்துரையாடினர். குழுக்கள் மற்றும் ஒன்றியங்களின் வகிபாகம் குறித்து அவற்றின் தலைவர்கள் விளக்கமளித்தனர்.
அத்துடன், தமக்குக் காணப்படும் சவால்கள் குறித்தும் தெரிவித்தனர். இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் சியாத் அஹமட், ஆய்வுப் பிரிவின் தலைவி அயேஷா கொடகம ஆகியோரையும் சந்தித்து அந்தப் பிரிவுகளின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.