டெஸ்லாவின் முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு! டிரம்ப் - மஸ்க் இடையே மீண்டும் மோதலுக்கு வழிவகுக்குமா?
முதற்கட்டமாக, டெஸ்லா தனது ஒய் மாடல் கார்களை இங்கு சந்தையில் இறக்கவிருக்கிறது.

தனது முதல் கார் ஷோரூமை மும்பையில் திறந்திருப்பதன் மூலம் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் பதித்திருக்கிறது. டெஸ்லா கார்களை இங்கு விற்பனை செய்வதோடு மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதை காண விரும்புவதாக தெரிவித்திருக்கிறார் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ்.
உலகளவில் மின்சார வாகன உற்பத்தில் முன்னிலை வகித்து வருகிறது எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம். இந்த நிறுவனத்தின் கார்களுக்கு உலக சந்தையில் வரவேற்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்சார கார் ஷோரூமை மும்பையில் திறந்திருக்கிறது.
கடந்த மாதம் மும்பையின் குர்லா பகுதியில் உள்ள லோதா லாஜிஸ்டிக்ஸ் பூங்காவில் 24,565 சதுர அடி இடத்தை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்த டெஸ்லா நிறுவனம், ஒரே மாதத்தில் அங்கு ஷோரூமை திறந்திருக்கிறது. முதற்கட்டமாக, தனது ஒய் மாடல் கார்களை இந்திய சந்தையில் இறக்க உள்ளது.
டெஸ்லா ஷோரூமை திறந்து வைத்த மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், உலகளாவிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, இங்கு தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனத்தை தொடங்க வேண்டும் எனவும், மும்பையை ஒரு பார்ட்னராக தனது பயணத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
பட்னாவிஸ் மேலும் பேசுகையில், “டெஸ்லா நிறுவனத்தின் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் உற்பத்தி மையத்தை இந்தியாவில் காண விரும்புகிறோம். டெஸ்லா நிறுவனம் இது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கும் என்று நான் நம்புகிறேன். மும்பை மீது வைத்திருக்கும் நம்பிக்கையால் டெஸ்லா தனது முதல் ஷோரூமை இங்கு திறந்திருக்கிறது.
இந்தியாவின் நிதி, வணிகம் மற்றும் பொழுதுபோக்கு தலைநகரமாக மட்டுமல்லாமல், தொழில்முனைவோர் நகரமாகவும் மும்பை விளங்குகிறது. வருங்காலத்தில் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு முக்கிய சந்தையாக இந்தியா மாறும்.
டெஸ்லாவை பொருத்தவரை, ஒரு கார் நிறுவனமாக மட்டுமல்லாமல், அதன் வடிவமைப்பு, புதுமை போன்றவற்றால் உலகளவில் விரும்பப்படுகிறது. இந்திய மக்கள் டெஸ்லாவிற்கு கட்டாயம் ஆதரவு அளிப்பார்கள்” என்று பேசினார்.
மேலும் இந்தியாவின் வணிக தலைநகராக மும்பை விளங்குவதோடு மட்டுமல்லாமல், அங்கு உயர் வருமானம் கொண்ட வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும், மின்சார வாகன உற்பத்தி, இவி சார்ஜிங் மற்றும் உட்கட்டமைப்பில் மும்பை சிறந்து விளங்குவதாகவும் கூறினார்.
எலான் மஸ்க் இந்தியாவில் டெஸ்லா ஷோரூமை நிறுவ திட்டமிட்டபோதே, அங்கு உற்பத்தி ஆலையை நிறுவினால் அது அமெரிக்காவிற்கு இழைக்கும் அநீதி என்று கூறியிருந்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் எலான் மஸ்க்கிற்கும், டிரம்பிற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் டிரம்புக்கு எதிராக புதிய கட்சியை தொடங்கினார் மஸ்க்.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் ஷோரூம் திறக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு வரிச் சலுகை கோரப்பட்டிருந்த நிலையில், மற்ற வெளிநாட்டு கார் நிறுவனங்களும் அதே சலுகையை எதிர்பார்க்கும் எனக் கூறி டெஸ்லாவின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருந்தது.
இந்நிலையில், மஸ்க் - டிரம்ப் இடையே மோதல் பெரிதாகும் பட்சத்தில் டிரம்பிற்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்த, மஸ்க் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலையை திறக்கவும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.