காணாமல் ஆக்கப்பட்ட 281 நபர்களின் அறிக்கை வெளியானது - செம்மணிக்கு ஓர் திருப்புமுனையாகலாம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 95 வீதத்துக்கும் அதிகமானோர், 1996 - 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்.பிரதேசத்தில் இருந்து சீருடைத் தரப்பினரால் வலிந்து கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள்

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்து விபரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செம்மணியில் மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதற்கு ஒரு திருப்பு முனையாக அமையலாம் என்று நம்பப்படுகின்றது.
வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழுவினால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 95 வீதத்துக்கும் அதிகமானோர், 1996 - 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ்.பிரதேசத்தில் இருந்து சீருடைத் தரப்பினரால் வலிந்து கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தெரிகின்றது.
அவர்களின் முழுப் பெயர், விபரம், விலாசங்கள் உள்ளிட்ட பதிவுகளுடன் இந்த அறிக்கை உள்ளதால், அவர்களது உறவினர்களின் மரபணுக்களை இப்போது செம்மணி புதைகுழியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் மரபணுக்களோடு ஒப்பிடுவதன் மூலம், அந்த மனித எச்சங்களுக்கு உரியவர்களை அடையாளம் காணக்கூடிய வாய்ப்புக் கிட்டலாம் என்று நம்பப்படுகின்றது.
1996 - 97 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் எலும்புக்கூடுகளே இப்போது செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து அகழ்ந்து மீட்கப்படுகின்றன எனக் கருதப்படும் நிலையில், அவற்றை அடையாளம் காண்பதற்கான ஒரு திருப்புமுனையாக இந்த விசாரணை அறிக்கை விபரம் அமையும் என்று கருதப்படுகின்றது.
இந்த விசாரணை அறிக்கையின் ஒரு பிரதியைத் தம் கைவசம் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியிடச் செய்யும் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார் எனவும் தெரிகின்றது.
சுமார் 210 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை பலர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் சுருக்க விபரங்களையும் உள்ளடக்கி இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.