பரமக்குடி டூ பாராளுமன்றம்.. ரஜினியிடம் வாழ்த்து பெற்ற கமல்ஹாசன்!
சினிமா உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நடிகர் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகி முதல்முறையாக நாடாளுமன்றம் செல்லவுள்ளது அவரது கட்சியினருக்கு புதிய உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்கவுள்ள நடிகர் கமல்ஹாசன் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், வரும் ஜூலை 25ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளார். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள திமுக வழக்கறிஞர் வில்சன், தொமுச தலைவர் சண்முகம், எம்.எம். அப்துல்லா, திமுக கூட்டணி சார்பில் தேர்வான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதிமுகவின் சந்திரசேகர் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
பதவிக்காலம் நிறைவடையும் இந்த 6 இடங்களுக்கான தேர்தல், கடந்த ஜூன் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், திமுக சார்பில் ஏற்கனவே மாநிலங்களவை எம்.பியாக உள்ள மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோரும், அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகியோரும் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வாகியுள்ள கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரும் ஜூலை 25ஆம் தேதி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்க உள்ளனர். எம்.பியாக பதவியேற்கவுள்ளதை அடுத்து, முக்கிய நபர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தார். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினை சில நாட்களுக்கு முன்பு சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அந்த வகையில், இன்று போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்ற அவர், தான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட சான்றிதழை அவரிடம் காட்டி வாழ்த்து பெற்றார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் செல்லும் உலக நாயகன்:
சினிமா உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நடிகர் கமல்ஹாசன், மாநிலங்களவை உறுப்பினராகி முதல்முறையாக நாடாளுமன்றம் செல்லவுள்ளார். இது, அவரது கட்சியினருக்கு புது உத்வேகத்தை தந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் எவ்வாறு செயல்பட போகிறார்? அவரது முதல் நாடாளுமன்ற பேச்சு எப்படி இருக்கும்? என எதிர்பார்ப்பு இருந்துள்ளது.