அநுர அரசு செம்மணி விடயத்தை சர்வதேச மயப் படுத்த யாதொரு தடையும் விதிக்காது என்று நம்பியவர்களின் வாயில் மண்!
"600 பேர் வரையில் செம்மணியில் புதைக்கப் பட்டுள்ளார்கள்" - (Approver) சோமவன்ச ராஜபக்க்ஷ!

நேற்று வரை இலங்கை ராணுவப் புலனாய்வுத் துறையுடன் நின்ற, அருண் சித்தார்த்தின் மனைவி புதிதாக ஒரு புரளியைக் கிளப்புகிறார்.
ஒரு விடயம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக பேசக்கூடாது! என்று சொல்லித் தந்த எனது ஆசான்களும், வரலாற்றில் வாழ்ந்த தத்துவ மேதைகளும் என்னை மன்னிப்பார்களாக!
செம்மணிக்கு அருகில் 'சிந்துப் பாத்தி' மயானத்தில்; மேற்படி மயானத்திற்கு சுற்று மதில் அமைப்பதற்குத் தோண்டப் போக கிருஷாந்தி வழக்கின் 'பிறழ் சாட்சியான'(Approver) சோமவன்ச ராஜபக்க்ஷ தனது,
வழக்கு முடிவில் கூறியது போல 600 உடலங்கள் புதைக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை நிரூபிக்கும் வகையில் இப்போது மறுபடியும் எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் படத் தொடங்கியதும்,
அந்த விடயம் யாருக்கு ஆச்சரியமோ இல்லையோ எனக்கு ஆச்சரியமோ அதிர்ச்சியோ இல்லை.
காரணம் அந்தப் படைச் சிப்பாய் தனக்கு மரண தண்டனை கிடைக்கப் போகிறது என்றவுடன் "600 பேர் வரையில் செம்மணியில் புதைக்கப் பட்டுள்ளார்கள்"
என்று போகிற போக்கில் சும்மா 'பகிடிக்கு' சொல்லவில்லை என்பதை அப்போதிருந்தே ஊகித்துக் கொண்டவன் நான்.
காரணம் யாழ்ப்பாணத்தை இராணுவம் 1995 அக்டோபரில் கைப்பற்றிய பிறகு இயக்கத்துக்கு ஒரு துரும்பு எடுத்துக் கொடுத்தாலும் கடத்துவார்கள்,
கொல்வார்கள் என்பது உலகறிந்த உண்மை தானே? இதில் 600 பேர் என்ற எண்ணிக்கையைக் கேட்டு மலைப்பது எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை.
என்னைக் கேட்டால் 600 பேர் வரையில் என்று அவன் குறைத்துத் தான் சொல்லி இருக்கிறான்.
ஆனால் அநுர அரசில் இந்தப் புதைகுழிகள் தோண்டப் படும் போது "இறைவா! பகவானே! கடந்த 75 வருடங்களாக இலங்கையை மாறி மாறி ஆண்ட கட்சிகள் இப்போது ஆட்சியில் இல்லை.
ஆகவே இந்த அநியாயத்துக்கு ஒரு தீர்வு கிடைக்கப் போகிறது! என்று மன நிம்மதி மற்றும் ஆறுதல் அடைந்து விட்டேன்.
ஆனால் "அங்க தான் இருக்குது Twist" என்று தமிழ்ப் படங்களில் சொல்வது போல அதற்குப் பிறகு நடந்த சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றன.
(1) "துணுக்காயில் 4000 பேரை இயக்கம் கொலை செய்து புதைத்தது என்றும் அங்கும் தோண்ட வேண்டும்! என்று நேற்று வரை இலங்கை ராணுவப் புலனாய்வுத் துறையுடன் நின்ற,
(இப்போது என்ன மாதிரி என்று தெரியவில்லை) அருண் சித்தார்த்தின் மனைவி புதிதாக ஒரு புரளியைக் கிளப்புகிறார்.
(2) செம்மணி 'சிந்துப் பாத்தி' புதைகுழிகள் பற்றி போலீசுக்கு தகவல் கொடுத்த, அதன் பின்னர் அகழ்வுகளுக்கு காரணமாயிருந்தவர்களின் வீட்டுக்கு அருகாமையில்
மர்ம நபர்களின் நடமாட்டம் மற்றும் மர்ம வாகன நடமாட்டம் நடந்து சம்பந்தப் பட்டவர்களை மறைமுகமாக அச்சுறுத்துகிறது" என்ற செய்தி படித்தேன்.
அநுர அரசில் இத்தகைய 'மறைமுக மிரட்டல்' எல்லாம் இருக்காது என்று நம்பிய என் நம்பிக்கையில்(Written by R.S.Lingathasan) மண் விழுந்து விட்டது.
(3) இதற்கிடையில் 'டக்கர் அண்ணை' ஒரு பேட்டியில் "ஸ்ரீதர் தியேட்டர் சுற்றுப் புறங்களையும் தோண்டுங்கள்; ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கிறேன்! என்று சொல்லி தன்னால் முடிந்த அளவு திசை திருப்புகிறார்.
(4) இறுதி யுத்தம் தொடங்க முன்னர் 2007 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையார் வந்த போது
மஹிந்த அரசு தனது அத்தனை தந்திரங்களையும் பாவித்து "காணாமற் போனவர்களின் உறவினர்களை அவரைச் சந்திக்க விடாமல் செய்து விட்டது.
அது போல இல்லாமல் அநுர அரசில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் சுதந்திரமாக செம்மணிக்கு வந்ததும் இல்லாமல் அங்கு நின்ற மக்களைச் சந்தித்ததுடன்
அவர்களின் மனக் குமுறல்களைக் கேட்டறிந்ததுடன் அங்கு ஏற்றப் பட்டிருந்த "அணையா விளக்கிற்கு" மலர் தூவி அஞ்சலி செய்தார்,
என்ற செய்தி மனதிற்கு சிறிது ஆறுதல் அளித்தது. அடப் பாவிகளா! அந்த மன ஆறுதல் எனக்கு இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை.
காரணம் அவர்(ஐ.நான்.மனித உரிமை ஆணையாளர்) இலங்கைப் பாராளுமன்றத்தில் என்ன பேசினார் என்பதும், பாராளுமன்றத்தில் யார் யார் அவருடன் பேசினார்கள் என்ற விடயமும்
வெளியே வரக் கூடாது என்று, இப்போதைய பாராளுமன்ற சபாநாயகர் தடை விதித்துள்ளாராம். கிழிஞ்சிது லம்பாடி லுங்கி!
அநுர அரசு செம்மணி விடயத்தை சர்வதேச மயப் படுத்த யாதொரு தடையும் விதிக்காது என்று நம்பிய என் போன்றவர்களின் வாயில் மண்!
(5) போதாக்குறைக்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் தலைவர் வாழ்ந்த இடமாகக் கருதப் படும் நிலக்கீழ் பாதுகாப்பு அறைகள் இருக்கும் இடத்தில் இலங்கைக் காவல்துறை அகழ்வு ஆராய்ச்சிகளை ஆரம்பித்து உள்ளதாம்.
தங்கம் மற்றும் ஆயுதங்களைத் தேடி இப்போது தான் தோண்ட வேண்டுமா? இந்தத் தோண்டும் நடவடிக்கையில் இலங்கை அரச புலனாய்வுத் துறையின் ஆசீர்வாதமும் அதன் கரங்களும் இல்லாமல் இருக்கும் என்று நாங்கள் எப்படி நம்புவது?
ஆகவே 'செம்மணி'அகழ்வுக்கு 'மறுத்தானாக'(எதிராக/ சிறு வயதில் 'கிட்டிப் புள்' விளையாடியவர்களுக்கு 'மறுத்தான்' என்றால் என்னவென்று தெரியும்.)
இப்படியான விடயங்களை அநுர அரசு முடுக்கி விடுகிறது என்று முடிந்த முடிவாக உணர்ந்து கொள்ள பெரிய 'ராக்கெட் விஞ்ஞானம்' படித்திருக்கத் தேவையில்லை.
Last but not least சொல்ல மறந்து விட்டேன் "செம்மணிப் புதைகுழிகளில் இருந்து எடுக்கப் படுவது யுத்த காலத்தில் கொல்லப் பட்ட படையினரது எலும்புக் கூடுகள்" என்று ஒரு பிக்குவும் தென்பகுதி அரசியல்வாதி ஒருவரும் கூறினார்களாம்.
கேட்டியளோ கதையை? இவர்களா செம்மணி விடயத்தை சர்வதேச மயப்படுத்தவும், அதற்கு நீதி கிடைக்கவும் விடப் போகிறார்கள்?
அதனால் தான் சொல்கிறேன். சோமவன்ச ராஜபக்க்ஷ சொன்னது போல 600 எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப் பட்டாலும் நடப்பது முன்னாள் கம்யூனிஸ்ட் தோழர்களின் ஆட்சியாக இருந்தாலும்
பாதிக்கப் பட்ட இனத்திற்கும், கண்டெடுக்கப் படும் உடலங்களுடன் தொடர்பு பட்ட குடும்பங்களுக்கும் சந்திரிகா, மஹிந்த ஆட்சியில் கொன்று புதைக்கப் பட்ட அப்பாவி மக்களின் உயிர்களுக்கும்
ஒரு நீதியும் கிடைக்கப் போவதில்லை. இந்த ஆட்சியில் ஏதேதோ நடந்து விடும் என்ற மாயையில் இருந்து வெளியே வருவோம்!
பகிர்வு-மிகுந்த ஏமாற்றத்துடன்: இரா.சொ.லிங்கதாசன். டென்மார்க்