திருக்கோவில் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை : இனியபாரதி, தவசீலன் ஆகிய இருவர் சிஜடியினரால் கைது!
2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம்!

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அம்பாறை மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் திருக்கோவில் வைத்தும் அவரது சகாவான சசீதரன் தவசீலன் மட்டு சந்திவெளியில் வைத்தும் இருவரையும் கொழும்பில் இருந்து வந்த குற்றபுலனாய்வு பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி சார்பில் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்று திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளராக பதவியேற்றார்.
இந்த நிலையில் கடந்த 2007-6-28 ம் திகதி விநாயகபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து திருக்கோவிலுள்ள பிரதேச சபையை நோக்கி பிரயாணித்த போது அவரை விநாயகபுரம் கோரக்களப்பு வீதியில் வைத்து இனம் தெரியாத துப்பாக்கி தாரிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரது மனைவியார் படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார் இந்த விசாரணை கடந்தகால அரசாங்கத்தினால் கிடப்பில் இருந்து வந்துள்ளது.
இதனையடுத்து இந்து முறைப்பாடு தொடர்பாக அவரது மனைவியர் சிஜடி யினரிடம் முறைப்பாடு தெரிவித்ததையடுத்து அவர்கள் விசாரணையினை மேற்கொண்டுவந்த நிலையில் இதனுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இனிய பாரதியை சம்பவதினமான ஞாயிற்றுக்கிழமை (06) திருக்கோவில் அவரது வீட்டில் வைத்து கைது செய்ததுடன் அவருடைய சகாவான மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த சசீதரன் தவசீலன் சந்திவெளியில் அவரது வீட்டில் வைத்து சிஜடி மற்றும் விசேட அதிரடிப்படையின் இணைந்து கைது செய்து கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த 2005 தொடக்கம் 2009 வரை காலப்பகுதியில் திருக்கோவில் மற்றம் விநாயகபுரம் பகுதியில் பலர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக காணாமல் போன உறவுகள் இனியபாரதி மீது குற்றம் சாட்டிவருவதுடன் அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.