விமான விபத்தில் புதிய திருப்பம்: பைலட் குரல் பதிவில் வெளியான 'ஷாக்' தகவல்!
காக்பிட் குரல் பதிவுகளில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம் என்ஜின் எரிபொருள் சுவிட்சை ஏன் ஆஃப் செய்தீர்கள்? என்று கேட்க, அதற்கு மற்றொரு விமானி நான் ஆஃப் செய்யவில்லை என்று பதில் கூறுவது பதிவாகியுள்ளது.

அகமதாபாத் விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கையில், விமான விபத்து தொடர்பாக பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் 12ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா ஏ171 போயிங் டிரீம் லைனர் 787-8 ரக விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் மற்றும் விமானம் விழுந்து நொறுங்கிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்கள் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB), 15 பக்க முதற்கட்ட அறிக்கையை இன்று (ஜூலை 12) வெளியிட்டிருக்கிறது. அதில் விமானிகளுக்கிடையேயான கடைசி உரையாடல், விபத்துக்கான காரணம், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த பல முக்கிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
* விமானமானது ஜூன் 12ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்டு அதிகபட்சமாக 180 Knots IAS என்ற வான் வேகத்தை எட்டியது. அந்த வேகத்தை எட்டிய உடனே என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-விற்கு செல்லக்கூடிய எரிபொருள் சுவிட்சுகள், ‘RUN’லிருந்து ‘CUTOFF’ நிலைக்கு ஒன்றன்பின் ஒன்றாக வெறும் ஒரு விநாடி வித்தியாசத்தில் மாறியுள்ளன.
* அந்த விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் பயணித்துள்ளனர். அதில் 15 பேர் பிசினஸ் வகுப்பிலும், 2 குழந்தைகள் உட்பட 215 பேர் எக்கானமி வகுப்பிலும் பயணித்தனர்.
* புறப்பட்டுச் சென்ற விமானத்தில் 54,200 கிலோகிராம் எரிபொருள் இருந்தது. விமானம் பறக்கும்போது அதன் மொத்த எடை 2,13,401 கிலோகிராம். இது அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்ளான அளவுதான். அதேநேரம் விமானத்தில் ஆபத்தான எந்தவொரு பொருளும் கொண்டுசெல்லப் படவில்லை.
* விமானமானது இந்திய நேரப்படி சரியாக 13:08:39 (08:08:39 UTC) மணிக்கு புறப்பட்டது. என்ஜினின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளானது ஒரு விநாடி இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக ஆஃப் ஆனது. ஆனால் அவை மீண்டும் ஆன் செய்யப்பட்டன.
* காக்பிட் குரல் பதிவுகளில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம் (என்ஜின் எரிபொருள் சுவிட்ச்) ஏன் ஆஃப் செய்தீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு மற்ற விமானி நான் ஆஃப் செய்யவில்லை என்று பதில் கூறியுள்ளார்.
* இந்திய நேரப்படி, 13:09:05 (08:09:05 UTC) மணிக்கு, ஒரு விமானி ‘மே டே மே டே மே டே’ என்று அழைப்பு விடுத்துள்ளார். விமான போக்குவரத்து கட்டுபாட்டாளர் அழைப்பை ஏற்று விசாரித்துள்ளார். ஆனால் மறுமுனையிலிருந்து அதன்பிறகு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் விமான நிலையத்திற்கு வெளியே விமானம் விழுந்து நொறுங்கியதை அவர் பார்த்திருக்கிறார்.
* விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வரத் தொடங்கியபோது, முதலில் ராணுவ மருத்துவப் படை வளாகத்திற்குள் இருந்த மரங்கள் மற்றும் எரியூட்டும் புகைபோக்கி மீது மோதி, பின்னர் வடகிழக்கு திசையில் அமைந்திருந்த சுவரின்மீது மோதியது. முதலில் மோதிய மரத்திற்கும் சுவருக்குமான இடைவெளி 293 அடி.
* விபத்து ஏற்பட்ட விமானம் உட்பட 6 விமானங்களின் தரவுகளை சேர்த்து மொத்தம் 49 மணிநேர தரவுகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அதில் விபத்து சம்பவம் அடங்கிய 2 மணிநேர ஆடியோ மீட்கப்பட்டு, அதிலிருந்து முதற்கட்ட விவரங்கள் பெறப்பட்டுள்ளன.
* சம்பவம் நடந்த இடத்தின் ட்ரோன் போட்டோக்கள் / வீடியோக்கள் எடுக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. சேதமடைந்த பாகங்கள் விமான நிலையத்திற்கு அருகேயுள்ள பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
* இரண்டு என்ஜின்களும் மீட்கப்பட்டு விமான நிலையத்தில் தனியாக ஒரு இடத்தில் மாட்டி வைக்கப்பட்டுள்ளன.
* விமானத்தில் பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவை, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தில் (DGCA) பரிசோதிக்கப்பட்டது. அந்த சோதனையில் எரிபொருளில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது.
* விமானம் மற்றும் என்ஜின்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் எச்சரிக்கை சேவை அறிவிப்புகள் முறையாக பின்பற்றப்பட்டிருக்கின்றன.
* இதுவரை நடைபெற்றுள்ள விசாரணையின்படி, B787-8 மற்றும்/அல்லது GE GEnx-1B என்ஜின் ஆபரேட்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதற்கு பரிந்துரைக்கப்படவில்லை. ஆரம்பகட்ட தரவுகளின் அடிப்படையில் கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
* விமான பங்குதாரர்களிடமிருந்து பெறப்படும் கூடுதல் சான்றுகள் மற்றும் தகவல்களை வைத்து விசாரணைக்குழு மேலும் ஆய்வு செய்யவுள்ளது.
* விமான விபத்து குறித்து, நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்ய, அனுபவம் வாய்ந்த விமானிகள், பொறியாளர்கள், விமான மருத்துவ நிபுணர், விமான உளவியலாளர் மற்றும் விமானப் பதிவு நிபுணர்கள் ஆகியோர் விசாரணைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.