லலித், குகன் உள்ளிட்ட யுத்தத்திற்கு பின் காணாமல்போனவர்கள் தொடர்பான விசாரணைகள் மீண்டும் ஆரம்பம் – அமைச்சர் ஆனந்த விஜேபால
2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்கள்!

அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ், குகன் முருகானந்தன், உட்பட யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேர வேளையில், தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் கேள்விகளை முன்வைத்த ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக, தற்போதைய ஜனாதிபதியின் நியமனத்தை அடுத்து ஏழு குற்றச் செயல்கள் தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசாரணைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை ஜனாதிபதி அறிவித்தார் என்பதை அறிவீர்களா?.
2011 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் பிரதேசத்தில் காணாமலாக்கப்பட்ட லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகிய இரண்டு அரசியல் செயற்பாட்டாளர்களின் காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் இன்றளவிலான முன்னேற்றம் யாது? என்றும், இலங்கையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல் நிலை முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற ஆயினும் இற்றைவரையில் தீர்க்கப்படாத ஏதேனுமொரு காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றிய விசாரணைகள் இன்றளவில் நிறைவடைந்துள்ளதா? என்றும் மற்றும் மேற்படி காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய விசாரணைகள் தாமதமாக்கப்பட்டமைக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக அமைந்துள்ளனவா? என்றும் கேட்டார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, 2011 டிசம்பர் 9ஆம் திகதி இடம்பெற்ற லலித் குமார்,குகன் முருகானந்தம் காணாமல் போன சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் 2011 டிசம்பர் 11ஆம் திகதி விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் 17 சந்தர்ப்பங்களில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலதிக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். எனினும் இறுதியாக 2014 ஒக்டோபர் 10ஆம் திகதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கை தொடர்ந்தும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிறுத்துவதற்கு நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் இல்லாமையினால் பதில் பொலிஸ்மா அதிபரால் 2025 ஜூன் 3ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இது தொடர்பான தேவையான உத்தரவுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி குற்றவியல் விசாரணை மற்றும் நிதி விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்து இந்த விசாரணைகள் தொடர்பில் சகல ஆவணங்களையும் முன்வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அந்த திணைக்களத்தால் மனித கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணை பிரிவினால் தற்போது விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற நான்கு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினாலும், 6 சம்பவங்கள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் பிரிவினாலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது டன் இந்த காணாமல் போன சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றார்.