24 பேரின் மரணத்துக்கும் முதல்வர் மன்னிப்பு கேட்பாரா? ஆர்ப்பாட்டத்தில் கர்ஜித்த விஜய்!
திமுக ஆட்சியில் காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்துக்கும் முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்தினரிடமும் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த அரசியல் கட்சிகளை சேர்ந்த நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் இல்லத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரடியாக சென்று அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, நிதி உதவி வழங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில் திருப்புவனம் காவல் நிலைய லாக்அப் மரணத்தை கண்டித்தும், கொலைக்கு நீதி வேண்டியும் இன்று சென்னையில் அவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விஜய் பேசியதாவது, " திருப்புவனம் அஜித்குமார் ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர். அவர் காவல் நிலையத்தில் மரணமடைந்ததற்கு முதல்வர் ஸ்டாலின் sorry சொன்னார். அதில் தவறில்லை, ஆனால் அதோடு சேர்ந்த திமுக ஆட்சியில் 24 பேர் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் கும்பத்தினரிடம் நீங்கள் ஏன் sorry சொல்லவில்லை? அவர்களிடமும் sorry சொல்லி விடுங்கள். உங்களால் sorry மட்டும் தான் சொல்ல முடியும். அதையாவது செய்துவிடுங்கள்.
முந்தைய ஆட்சியில் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் வழக்கை சிபிஐ-க்கு மாற்றிய போது, நீங்கள் எதிர்க்கட்சி தலைவராக கண்டித்தீர்கள். தமிழக காவல்துறைக்கு திறமையில்லையா? யாரை ஏமாற்ற சிபிஐக்கு மாற்றுகிறீர்கள்? என அப்போதைய ஆட்சியாளர்களை பார்த்து விமர்சனம் செய்தீர்கள். ஆனால், இப்போது உங்கள் ஆட்சியில் நடக்கும் காவல்துறை படுகொலைகளை மாநில போலீசாரை விசாரிக்க விடாமல் நீங்கள் ஏன் சிபிஐக்கு மாற்றீனர்கள்? இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? நிச்சயம் இருக்காது.
உங்களிடம் இருப்பது எல்லாம் sorry- மா மட்டும் தான். திராவிட மாடல் அரசு தற்போது sorry- மா அரசாக மாறியுள்ளது. இதுவரை காவல் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் உயிரிழந்த 24 பேரின் குடும்பத்துக்கும் முதல்வர் நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து குற்ற சம்பவங்களுக்கும் நீதிமன்றம் தலையிட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றால், நீங்கள் ஏன் ஆட்சியில் இருக்கிறீர்கள்"? என்றும் கேள்வி எழுப்பினார்.