சிறிலங்கா ஆழ ஊடுருவும் படையணியில் கருணா குழு, இனியபாரதியும், பிள்ளையானும் ஒரு பெரும் வகிபாகத்தைக் கொண்டிருந்தார்கள்!
புலிகள் யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத பலம் பொருந்திய ஒரு இராணுவமாக வளர்ந்த போது அமெரிக்காவின் பார்வை புலிகள் மீது விழுகிறது.

சிறிலங்கா இன அழிப்பு பேரினவாத அரசின் ஆழ ஊடுருவும் படையணியில் கருணா குழு - குறிப்பாக தற்போது அனுரா அரசினால் கைதுசெய்யப்பட்டுள்ள இனியபாரதியும், பிள்ளையானும் ஒரு பெரும் வகிபாகத்தைக் கொண்டிருந்தார்கள்.
இந்தக் கைதுகளின் பின்னால் பெரும் புலனாய்வுச் சதி வலைப் பின்னல்கள் உள்ளன.
புலிகள் யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத பலம் பொருந்திய ஒரு இராணுவமாக வளர்ந்த போது அமெரிக்காவின் பார்வை புலிகள் மீது விழுகிறது.
அரச, ஆயுத தளபாட, பொருண்மிய , நிதி, படைத்துறை பயிற்சி என்ற தளத்திலிருந்து ஒரு படி மேலே போய் நேரடியாக 1996 இல் சிங்களப் படையில் ஒரு கொலைப் படையை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியது அமெரிக்கா.
விளைவாக உருவாகியதே சிங்கள இராணுவத்தில் ஆழ ஊடுருவித் தாக்கும் படையணி (LRRP – Long Range Reconnaissance Patrol).
1996இல் சிங்களப் படையின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த (Special Force) கேர்னல் ராஜ் விஜேசிறி என்பவர் தலைமையில் இது உருவாக்கப்பட்டது.
ஆனால் அந்தப் படையணிக்கு அப்போது வைக்கப்பட்ட பெயர் 'மஹாசொன் பலகாய'. தமிழில் சொன்னால் அரக்கர் படை அல்லது பேய் படை.
புலிகள் மரபுப் படையணியாக வளர்ந்து விட்டதால் புலிகளின் பாணியில் தாக்குவதுதான் சரியானதென்று முடிவெடுத்தே இந்தப் படையணி அமெரிக்காவால் உருவாக்கப்பட்டது.
ஆனால் துணிச்சலும் தைரியமுமற்ற சிங்களப் படையிலிருந்து இந்த அணியை உருவாக்குவது அமெரிக்காவிற்குப் பெரும் சிரமமாக இருந்தது. அதனால் ஆரம்பத்தில் மேற்குலக அரசு சாராத கூலிப் படைகளக் களத்தில் இறக்கினார்கள்.
இது சிங்களப் படைகளுக்கு ஓரளவு துணிச்சலைக் கொடுத்தது.
பிற்பாடு கருணாவின் வரலாற்று துரோகத்தால் கருணா குழுவும் ஆழ ஊடுருவும் படையணியின் அங்கமாகிய போது முழு துணிச்சலுடன் ஊடுருவி தாக்கினார்கள்.
இதில் இனியபாரதியுடன் கருணா குழுவைச் சேர்ந்த ஜெயம், மார்க்கன், சின்னத்தம்பி, ஜீவேந்திரன், ரஞ்சன், இளங்கீதன், வீரா முக்கிய பங்காற்றினார்கள்.
ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் இவர்கள் பங்குபற்றியிருந்ததால் வன்னிநிலத்தின் ஒவ்வொரு அங்குலமும் இவர்களுக்கு அத்துப்படி என்பதால் இன அழிப்புப் படைகளுக்குக் கூடுதல் துணிச்சல்.
சொந்த இனத்தைக் கொலை செய்கிறோம் என்ற அற உணர்வு கிஞ்சித்தும் இல்லாமல் வரலாற்று துரோகத்தைப் புரிந்தவர்கள் தற்போது வரிசையாகக் 'களி' தின்னப் போகிறார்கள். இதன் பின்னால் உள்ள ஏமாற்றுவித்தையை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்.
ஆனால் இதனால் எமக்கு எந்தப் பலனும் இல்லை என்பதுதான் துயரம்.