வவுனியா, கூமாங்குளம் பகுதி விபத்து விவகாரம்- வெளியான சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை!
,

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்தவரின் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்று அவரது வாகன சக்கரத்தில் (சில்லில்) தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்திய காரணத்தால் குறித்த நபர் சம்பவ இடத்துலேயே உயிரிழந்திருந்தார்.
இதன்போது போக்குவரத்து பொலிஸாரே குறித்த மரணத்திற்கு காரணம் என குறித்த பகுதி மக்கள் தெரிவித்து குழப்பத்தில் ஈடுபட்டதுடன், மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிஸார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அதற்கு பின்னர் நிலைமையை சுமுகமாக்கி சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்னே முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனையின் படி, மரணித்தவரின் உடலில் புதிய காயங்கள் எதுவும் இல்லை எனவும், வலது காலில் பழைய வடுக்கள் காணப்படுகின்றது எனவும், இதயத்தின் முன் புறப்பகுதியில் கடுமையான இரத்த உறைவு உருவாக்கம் காணப்படுகின்றது, எனவும் இதயத்தின் தசைப்பகுதி மற்றும் இரத்த மாதிரி கொழும்புக்கு இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மாரடைப்பு காரணமாகவே அவர் மரணமடைந்துள்ளதாகவும் சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்னே தெரிவித்துள்ளார்.