பலதும் பத்தும். 25,07,2025 - கறுப்பு யூலை 1983
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : பாராளுமன்றில் உறுதியளித்த பிரதமர்!

"கறுப்பு யூலை 1983" நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
இதன்போது ஈழத்தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும், போலி சகோதரத்துவ நாள் வேண்டாம் - உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் வேண்டும், 1983 கறுப்பு யூலை ஸ்ரீலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பே! உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளுள் கட்டப்பட்டிருந்தது.
தமிழ்த் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நினைவேந்தலில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி க.சுகாஸ், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
மானிப்பாய் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியை ஒரு காடைத்தனமான கட்சி என்று தெரிவித்தல்!
மானிப்பாய் பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தியை ஒரு காடைத்தனமான கட்சி என்று தெரிவித்ததால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மானிப்பாய் பிரதேச சபையின் இரண்டாவது அமர்வு தவிசாளர் ஜெசீதன் தலைமையில் நேற்று ஆரம்பமானது. அதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் லே.ரமணன் ஜே.வி.பி காடைத்தனமான கட்சி என்று தெரிவித்தார். அதனால் கொதித்தெழுந்த ஜே.வி.பியின் விகிதாசார உறுப்பினரான வினோத் தனு, குறித்த வார்த்தை பிரயோகித்துக்கு எதிராக கூச்சலிட்டு சண்டையிட்டார்.
இதன்போது சபையில் சச்சரவு ஏற்பட்டு அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில் பலத்த முயற்சிக்கு பின்னர் தவிசாளர் சபையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
கனடாவில் இருந்து குருநகர் சென்றவர் மரணம் – வீட்டில் சடலமாக மீட்பு!
கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற குருநகர் பகுதியை சேர்ந்த 63 வயதான நபர் ஒருவர் நேற்றைய (24.07.25) தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
குறித்த நபரின் மூன்று பிள்ளைகளும் மனைவியும் கனடாவில் உள்ளனர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கனடாவில் இருந்து அவரது மச்சான் முறையானவருடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த வேளை நேற்று உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் அவரது வீட்டுக்கு சென்ற மச்சான் அவர் சடலமாக இருப்பதை அவதானித்த நிலையில் யாழ்ப்பாணம் காவற்துறையினருக்கு தகவல் வழங்கினார்.
அவரது சடலமானது மீட்கப்பட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
சாட்சிகளை யாழ்ப்பாணம் காவற்துறையினருக்கு நெறிப்படுத்தினர்.
தெஹிவளையில் துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக்கொலை!
தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகே கடந்த ஜூலை 18 ஆம் திகதி 11 மணியளவில் நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர், இன்று (25.07.25) அதிகாலை விசேட அதிரடிப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இன்று அதிகாலை 4:30 மணியளவில், கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை காவற்துறை விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதற்கு பதிலடியாக, விசேட அதிரடிப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் காயமடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சந்தேகநபரின் உடல் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் : பாராளுமன்றில் உறுதியளித்த பிரதமர்
2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டவர்களில், தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் யாரேனும் இருந்தால், அவர்களுக்கு எதிராகவும் சட்டம் தவறாமல் நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
இன்று (25) பாராளுமன்றத்தில், பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளிக்கும் போது, பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.