இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்தும் - இராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள்,
மீன்பிடி தடை காலம் முடிந்த 55 நாட்களில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் விசைப்படகு கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், நாளை (11) முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். இதனை இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் இன்று (10) நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
மீன்பிடி தடை காலம் முடிந்த 55 நாட்களில், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 61 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓகஸ்ட் 13ஆம் திகதி தங்கச்சிமடத்தில் ஆர்ப்பாட்டம், ஓகஸ்ட் 15ஆம் திகதி இந்திய சுதந்திர தினத்தன்று உணவு தவிர்ப்பு போராட்டம், மற்றும் ஓகஸ்ட் 19ஆம் திகதி தொடருந்து விளக்கமறியல் போராட்டம் ஆகியவற்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகள் இன்றி தொழிலில் ஈடுபடுவதற்கு இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இந்தப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் மூலம் இந்தக் கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.