தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள்! ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருக்கும் அரசு- ரஜீவ்காந்
ஒரு நாட்டிலே மக்கள் வாழ்கின்ற இடத்திலே இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது.சிவில் செயற்பாடுகளிற்குள் இராணுவம் தலையிடக்கூடாது.
.png)
தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்
செய்தியாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
முத்தையன் கட்டு குளத்திலே இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் அங்கிருந்த ஊர்மக்கள், அந்த இளைஞனின் உறவினர்களின் தகவலின்படி அவர்கள் இராணுவத்தினரால் முத்தையன்கட்டு பிரதேசத்தில் இருக்கின்ற இராணுவமுகாமிற்கு சில விடயங்களிற்காக அழைக்கப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர்கள் அந்த இராணுவமுகாமில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டு,அங்கு சென்ற ஐவரில் நால்வர் தப்பியோடிவந்த பொழுது,ஒருவர் அன்று மாலையிலிருந்து காணாமல்போயிருந்தார்.
அன்று முழுவதும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அன்று முழுவதும் அவர் கிடைக்காத காரணத்தினால் அடுத்த நாள் காலைவரை காத்திருந்தார்கள்.
அடுத்த நாள் காலையிலே முத்தையன் குளத்திலே அவர் சடலமாக மிதந்துகொண்டிருந்தார், அந்த சடலத்தின் முகத்தில் பலத்த காயங்கள்,இரத்தம் காணப்பட்டது.
இதன் பிற்பாடு இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் எதற்காக எடுக்க சென்றார்கள்? பொருளை எடுக்க சென்றார்களா?விற்க சென்றார்களா? இராணுவத்தினருடன் நட்பாக இருந்தார்களா? இதெல்லாம் அவசியமில்லை.
இங்கு இருக்கின்ற பிரதான பிரச்சினை, ஒரு நாட்டிலே மக்கள் வாழ்கின்ற இடத்திலே இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது.சிவில் செயற்பாடுகளிற்குள் இராணுவம் தலையிடக்கூடாது.
எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இராணுவம் ஆயுதபூர்வமான ஒரு அமைப்பு,நாட்டின் எல்லை பிரச்சினை,நாட்டில் ஏற்படுகின்ற அசாதாரண பிரச்சினைகளின் போது பயன்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஆயுத அமைப்பே இராணுவம்.
இந்த இராணுவத்தை மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகளவில் கொண்டதாக இன்று வடக்குகிழக்கு காணப்படுகின்றது.
இராணுவத்துடன் ஏற்கனவே எங்களிற்கு பலத்த பிரச்சினைகள் உள்ளன,இராணுவத்திற்கு எதிராக நீதி கோரி போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன, இந்த போராட்டம் எவற்றிற்கும் நீதி வழங்காத நிலையில் வடக்குகிழக்கில் அதிகளவில் இராணுவமுகாம்களை வைத்திருக்கின்றார்கள்.
எதற்காக இந்த இராணுவ முகாம்களை வைத்திருக்கின்றார்கள் என்ற கேள்வி எமக்குள்ளது.
ஏன் என்றால் இந்த இராணுவமுகாம்களால் தான் பிரச்சினைகள்.
இராணுவமுகாம் இருந்திருக்காவிட்டால் இன்று இந்த இளைஞர் உயிரிழந்திருக்கமாட்டார். இன்று அந்த குடும்;பத்திற்கு உழைத்துக்கொடுத்துக்கொண்டிருந்த ஒருவர் இல்லை.
ஒன்பது மாத குழந்தை தந்தையற்றதாக போயுள்ளது. என்ன காரணம் தேவையற்ற விதமாக இராணுவத்தினரை இந்த பிரதேசங்களில் வைத்திருப்பதுதான் பிரச்சினை.
வடக்குகிழக்கிலிருந்து இராணுவத்தை படிப்படியாக அகற்றுவோம் என தெரிவித்தவர்கள் கூட இன்று அதனை செய்கின்றார்கள் இல்லை என்ற குற்றச்சாட்டினை நான் முன்வைக்கின்றேன்.
தெற்கிலே 77 சூட்டுசம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, வடக்குகிழக்கிலே அவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. எதற்காக இவ்வளவு இராணுவத்தை அங்கு குவித்துவைத்துக்கொண்டிருக்கின்றார்கள்?
இன்று தென்பகுதியில் எல்லா இடங்களிலும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
12000க்கும் மேற்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்திலே வாழ்கின்றனர்.ஆனால் அவர்களில் ஒருவர் கூட கடந்த 15 வருடங்களில் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை.
தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவம் குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது, இராணுவத்தினரால் இடம்பெறும் சிக்கல் என்பது அதிகரித்துக்கொண்டிருக்கின்றது.
இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றார்கள், ஹோட்டல் விடுதி சாப்பாட்டுக்கடை நடத்துகின்றார்கள்,மக்கள் செல்கின்ற இடமெல்லாம் ஆயுதத்துடன் திரிகின்றார்கள்,வீடு கட்டி கொடுக்கின்றார்கள், பிரதம அதிதிகளாக செல்கின்றார்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுகின்றார்கள்,எந்தவொரு நாட்டிலும் இது இடம்பெறாது.
ஜனநாயகபூர்வமான இடத்திலே இராணுவத்தின் இடம் எந்தளவிற்கு இருக்கவேண்டும் என்பதை முதலில் நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே முத்தையன்கட்டிலே உயிரிழந்த கபில்ராஜிற்கு நீதிவேண்டும் என்ற ஒரு கோரிக்கையும்,இராணுவ குவிப்பு, இராணுவமயமாக்கல் என்பது நிறுத்தப்படவேண்டும் இராணுவத்தினர் அகற்றப்படவேண்டும் என்ற அரசியல் கோரிக்கையையும் நாங்கள் இன்று முன்வைக்கின்றோம்.