ஓற்றுமையின்மையே தமிழரின் இயலாமை!
தமிழர்களுக்கு நீதி வேண்டி, அனைத்துலகை விசாரணைப் பொறிமுறையைக் கோரும் தமிழர் தரப்பு

தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில் ஐ.நா. நகர்ந்துவரும் சூழலில் தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை மேலும் பயனற்ற எதிர்காலத்தையே கொண்டுவரும் என்பதனை தமிழரசுக் கட்சியும் புரிய வேண்டும்.
ஜெனிவாவில் செப்டெம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுக்கு, “தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்?”
என்ற கேள்வி ஒன்று தற்போது தமிழ்த் தேசிய அரங்கில் பேசப்படுகின்ற விடயமாக மாறியிருக்கிறது. கடந்த ஒகஸ்ட் மாத இறுதியில் யாழ்ப்பாணத்திலுள்ள
விருந்தினர் விடுதியொன்றில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அழைப்பில் நடைபெற்ற சந்திப்பு மற்றும் தயாரிக்கப்பட்ட கடிதம் தொடர்பிலேயே இந்தக் கருத்து வெளிவருகிறது.
தமிழர்களுக்கு நீதி வேண்டி, அனைத்துலகை விசாரணைப் பொறிமுறையைக் கோரும் தமிழர் தரப்பு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஐ.நாவுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது.
அந்தக் கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கடிதத்தை அனுப்பும் வகையில், அதற்கான தயாரிப்பு வேலைகளுக்காக இந்தச் சந்திப்பு நடைபெற்றருந்தது. ஆனால், அந்தச் சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி சமூகமளிக்கவில்லை.
இந்த நிலையில்தான் இந்தத் தமிழ்த் தரப்பில் பிரதான, பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்? என்ற கேள்வி உருவாகியிருக்கிறது.
தமிழரசுக் கட்சி இதில் இணைந்துக் கொள்ளவில்லை என்பது உண்மையாக இருந்தாலும் இணைத்துக் கொள்ளாமல் என்ற சொற் பிரயோகம் பயன்படுத்தப்படுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் ஒருவித தீர்மானத்துடன், பிடிவாதத்துடன், தனிக்காட்டு ராஜா நிலைமையில் செயற்படுவதே தெரிகிறது.
இருந்தாலும், அவர்களால் உருவாக்கப்படும் மாயைத் தோற்றத்தை உண்மையாக்கும் செயற்பாடுகள் தமிழர் தளத்தில் நடைபெறுகிறது என்றே இந்தக்கருத்தினை அடிப்படையில் கொண்டு பார்க்க முடியும்.
அதே போன்றதொரு நிலையே விடுதலைப்புலிகளின் தலைமையின் முழுமையான பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைக் கலைத்த பெருமை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இருந்தாலும் முழுப் பழியும் கூட்டமைப்பில் இணைந்திருந்த மற்றைய கட்சிகளின் மீதே சுமத்தப்பட்டு வருகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி தாமாக விலகிக் கொள்ள முடிவெடுத்திருந்தாலும், அது தமிழரசுக் கட்சியின் தமிழ்த் தேசிய அரசியல் பிழை என்பதை யாரும் கடுமையாகச் சொல்வதற்கல்ல சாதாரணமாகக் கூறுவதற்குக் கூட தயாரில்லை.
தனிப்பட்ட ஒருவருடைய, ஒரு கட்சியினுடைய விடயங்கள் எழுந்தமானமாக, ஏகபோகத்தனத்துடன் மேற்கொள்ளப்படுவது யாராலும் கேள்விக்குட்படுத்தப்படாதிருப்பது என்வோ சரியாக இருக்கலாம். ஆனால், தமிழ் மக்களின் பொதுவான விடங்களில் எழுந்தமானமாகச் செயற்படுவது பொருத்தமானதாக இருக்காது என்பது ஒரு கட்சிக்குப் புரியாதிருக்கையில் பொதுமைப்படக் கருத்துக்கள் வெளியிடப்படுவது ஒன்றும் முதல் தடவையல்ல என்ற வகையில் திருத்த வேண்டியவர்களைத் திருத்தியாகவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழ் மக்கள் வாந்தாகவேண்டும்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா.வுக்கு எழுதப்பட்ட கடிதத்தை தயாரிப்பதற்கான ஆரம்பப்பணியை மன்னாரைச் சேர்ந்த சிவகரன் தொடங்கியிருந்தார். அதன்பின் ஒவ்வொருவராக இணைந்து முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது.
இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு மீண்டும் கிளிநொச்சியில் நடைபெற்று ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில் பிரதானமாக இனப்பிரச்சினைத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களைப் பொறுப்புக்கூற வைப்பதற்கான பொறிமுறையை ஐ.நா. மனித
உரிமைப் பேரவைக்குள் மாத்திரம் மட்டுப்படுத்திக் கொண்டிருக்காமல் பன்னாட்டு பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.
இரண்டாவதாக, போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு
பொறிமுறையை உருவாக்கினால், அதற்குக் காலவரையறை இருக்க வேண்டும் என்பதாக இருந்தது. இதனைத் தீர்மானிப்பதற்குப் பல வாதப்பிரதிவாதங்கள்
நிகழ்ந்திருந்தது.
வடக்கு, கிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து சர்வதேசத்துக்கு ஒற்றுமையாக முதன் முதலில் எழுதியக் கடிதமாக இது அமைந்திருந்தது. அந்தக் கடிதத்தினால் சாதகமான விளைவேதும் கிடைக்கவில்லை. பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்கள் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியே இருக்கிறது.
சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்புத் திறமையாகச் செயற்பட்டதா என்ற சந்தேகம் இருக்கிறது. அந்தக் கட்டமைப்பு இலங்கைக்குள் வருகைதந்து செயற்பட இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில், இந்தச் செப்டெம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கின்ற ஐ.நா. கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்த் தரப்பு மீண்டும் ஒரு கூட்டுக்கடிதத்தை அனுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது பாராட்டத்தக்கதே. யானைக்கு மணியைக் கட்டுதல் என்கிற விடயம் நடைபெறாதிருக்கையில் யாரேனும் மணியைக் கட்டியானால் பிரச்சினை என்கிற தோரணை உருவாக்கப்படுவது தவறாகும்.
எல்லோருடைய நோக்கமும் ஒன்றாக இருக்கையில் யார் மணியைக் கட்டினால் என்ன என்று சிந்திக்கின்ற நேர்மை இல்லாமலிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
1948 தொடங்கி, ஐக்கியத் தேசியக் கட்சி அரசாங்கத்தினால் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் கையாளப்பட்டிருக்கிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் கையாளப்பட்டிருக்கிறது. இவை இரண்டும் இணைந்து கையாண்டிருக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கையாண்டிருக்கிறது.
இப்போது மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தமிழர் பிரச்சினைக் கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில்தான் இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு நடைபெறவிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில் இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பு நடைபெற்றிருக்கிறது.
தமிழ் மக்கள் சர்வதேச நீதிப் பொறிமுறையைக் கோரிக் கொண்டிருக்கையில், புதிதாக ஆட்சியிலுள்ள அரசாங்கமும் உள்நாட்டுப் பொறிமுறைக்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தின் கருத்துக்களும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இல்லாதிருக்கின்ற அதேவேளை, இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத் தன்மையைப் பலப்படுத்துவதாகக் காணப்படுகிறது.
எனவே, உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்புக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அக்கட்சி கலந்து கொள்ளவில்லை. இந்தக் கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து கொள்ளாத நிலையில், அக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், நடத்திய ஊடகச் சந்திப்பில், தமது கட்சி கடிதம் ஒன்றை ஐ.நாவுக்கு அனுப்பியதாகவும், உள்நாட்டுப் பொறிமுறையைத் தாம் கோரவில்லை என்று கூறியிருக்கிறார்.
இதைப் பொறுப்புள்ள ஒரு தமிழ்த் தேசியக் கட்சியாக அவர் கூறுவதற்குக் காரணம் என்ன. கூட்டுக் கடிதத் தயாரிப்பில் கலந்து பங்குகொள்ளாதிருந்ததுடன், அவர் அதனைக் கைவிட்டிருக்கலாம்.
ஆனால், தம்முடைய அரசியலை செய்வதற்காக இதனைச் சொல்லியிருக்கிறார் என்பது மாத்திரம் வெளிப்படை. தமிழ் மக்களின் ஏகபோக அரசியல் தரப்புத் தாங்களே என விடுதலைப் புலிகள் தங்களை அறிவித்துக் கொண்டிருந்து பின்னர்த் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அதற்காக உருவாக்கிக் கொண்டனர்.
ஆனால், ஆரம்பத்தில் கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் யுத்த மௌனிப்பின் பின் ஒவ்வொன்றாக விலகிக் கொண்டன. விலக்கப்பட்டதாகக் கொள்ளலாமா என்பது இப்போதும் சந்தேகமானது. அத்துடன் விலக்கப்பட்டனவா, விலகிக் கொண்டனவா, விலகுவதற்கான சூழல் உருவாக்கப்பட்டதால் அது ஏற்பட்டதா என்பது இன்னமும் யாராலும் புரிதலுக்குட்படுத்தப்படவில்லை என்பது வேறு விடயம்.
இந்த நிலையில், ஒவ்வொரு விடயத்திற்கும் வியாக்கியானங்கள்
முன்வைக்கப்படுவது நடைபெறுகிறது.இவற்றினை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் விளங்கிக் கொள்வதும், நடைபெற்றுவரும் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கென்று செயற்படுகின்ற கட்சிகள் தாய்க் கட்சி, தந்தை கட்சி, ஏக தரப்பு என்றெல்லாம் நடந்து கொள்வது சர்வதேச தரப்புகளை அணுகுகின்ற வேளைகளிலும் தேவைதானா என்பதுவே கேள்வியாக இருக்கிறது.
தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளைப் பேசுவதற்குத் திறக்கப்பட்டிருக்கும் ஒரே
அனைத்துலக அரங்கம் ஐ.நா. என்ற வகையில், இதனைப் பலவீனமான நிலையுடன் அணுகுவதால் பயன் ஒன்று விளையுமா என்பதனை விளங்கிக் கொள்வது முக்கியமானது. ஆனால், பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு இனப்படுகொலையைத் திட்டமிட்டவகையில் நடத்தி வந்த ஒரு நாட்டில் இருந்து கொண்டு ஒற்றுமையின்மையுடன் அரசியல் நடத்துவதால் பயன் விளையுமானால் நல்லதே.
ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள, ஈர்த்துக் கொள்ளப் பரந்துபட்ட வேலைத் திட்டங்களில்லாத நிலையில், தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடிய விதத்தில் ஐ.நா. நகர்ந்துவரும் சூழலில் தமிழர் தரப்பின் ஒற்றுமையின்மை மேலும் பயனற்ற எதிர்காலத்தையே கொண்டுவரும் என்பதனை யாரும் மறந்துவிடக் கூடாது.
இது தமிழரசுக் கட்சிக்கும் புரிய வேண்டும். இல்லாதுவிடின் மக்களால் புரியவைக்கப்படுதலே நல்லது.
லக்ஸ்மன்