நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு நேரம் வாக்கிங் போக வேண்டும்? ஆய்வு சொல்வது என்ன?
உணவிற்குப் பின் வெறும் 2 நிமிடங்கள் நடப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக NIH இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டால், வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவைக் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். இருப்பினும், சில வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். இதற்கு உதவும் ஒரு செயல் தான் நடைப்பயிற்சி. அதன்படி, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நடக்க வேண்டும்? மற்றும் பின்பற்ற வேண்டிய வழிகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். வாரம் முழுவதும் இல்லாவிட்டாலும், வாரத்தில் குறைந்தது 5 நாட்கள், ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள பரிந்துரைக்கின்றனர். அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் இதழில் வெளியான ஆய்வில், வழக்கமான ஏரோபிக் உடற்பயிற்சி இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாக தெரியவந்துள்ளது.

உடலில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே, யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கின்றனர். அனைவருக்கும் உடல் செயல்பாடு தேவை. இதன் விளைவாக, இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
நேரத்தை பிரித்து பயன்படுத்தவும்: நடைப்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் அல்லது ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடக்க முடியாதவர்கள் தங்கள் நேரத்தைப் பிரித்து பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒவ்வொரு முறை நடக்கும் போது தொடர்ந்து 10 நிமிடங்கள் நடப்பதை உறுதிசெய்ய வேண்டும். காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவிற்குப் பிறகு குறைந்தது பத்து நிமிடங்கள் நடப்பது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மேலும், உணவு எளிதில் ஜீரணமாகும். அதன்படி, உணவிற்கு பின் 10 நிமிடம் நடைபயிற்சி செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.

உணவிற்குப் பின் வெறும் 2 நிமிடங்கள் நடப்பது இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதாக NIH இதழில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதலாக, மணிக்கு மூன்று முதல் நான்கு மைல்கள் மிதமான வேகத்தில் நடப்பது இன்சுலின் அளவை அதிகரித்து இதயப் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த உதவுவதும் தெரியவந்துள்ளது.
முன்னெச்சரிக்கை: நடப்பதற்கு முன் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த வரிசையில், மூட்டுகளில் அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, மேடு பள்ளம் இல்லாத சமமான பாதையில் நடக்க வேண்டும். படிகட்டுகளில் ஏறி இறங்குவதை தவிர்க்க வேண்டும். வானிலை சாதகமாக இருக்கும்போது காலையிலோ அல்லது மாலையிலோ நடைபயிற்சிக்கு சிறப்பு நேரத்தை ஒதுக்குவது நல்லது.
நடைபயிற்சியின் கூடுதல் நன்மைகள்:
தசைகளை வலுப்படுத்துகிறது: தினசரி நடைபயிற்சி செய்வது தசைகளை வலுப்படுத்தி உடல் எடையை குறைக்கவும் உடல் அமைப்பை மாற்றவும் உதவுகிறது. குறிப்பாக, முதுகு கூன் வளையாமல் இருக்கும்.

- எடை இழப்பு: ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடப்பது எடை குறைக்க உதவும் என்கின்றனர் மருத்துவர்கள். நடைபயிற்சி கலோரிகளை எரித்து எடை குறைக்க உதவுகிறது, மேலும் இது கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
- பளபளப்பான சருமம்: நடைபயிற்சி இரத்த ஓட்டத்தை அதிகரித்து சருமத்திற்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதன் விளைவாக, இது முகத்தில் உள்ள மந்தநிலையை நீக்கி, இயற்கையான பளபளப்பை அளிக்கிறது.