1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்!
ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது.

கறுப்பு ஜூலை வன்செயல்களுக்குப் பிறகு 42 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கான தமிழர்களின் வாழ்வைச் சிதறடித்த அந்த வன்செயல்களின் நிழலிலேயே தொடர்ந்தும் இலங்கை வாழ்ந்துகொண்டிருக்கிறது.
வீடுகள் எரிக்கப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலம் செய்யப்பட்டன, அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. தலைநகர் கொழும்பில் தொடங்கி நாடுபூராவும் அந்த கலவரங்களும் வன்செயல்களும் பரவின. நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தார்கள்.
ஆனால், அந்தக் கொடிய வன்செயல்களுக்காக இன்னமும் பொறுப்புக் கூறப்படவில்லை. உத்தியோகபூர்வ நீதி கிடைக்கவில்லை. மீண்டும் அத்தகைய வன்செயல்கள் மூளாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தேசிய சமாதானப் பேரவை கறுப்பு ஜூலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தவும் மாத்திரமல்ல, முதலில் கடந்த காலத்துக்கு முகங்கொடுத்து பிரச்சினைக்கான காரணிகளை கையாளக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காணாவிட்டால், நிலைபேறான நல்லிணக்கத்தை ஒருபோதும் காணமுடியாது என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவும் கறுப்பு ஜூலையின் வருடாந்தத்தை நினைவுகூருகிறது.
1983 ஜூலை நிகழ்வுகள் ஒன்றும் தன்னியல்பானவை அல்ல. வன்முறையாக மாறிய நீண்டகாலமாக புரையோடிப்போன இனநெருக்கடியின் விளைவானதே அது. வடக்கில் வளர்ந்துகொண்டிருந்த தமிழ்த் தீவிரவாதத்தின் பின்னணியில், 13 படைவீரர்களை பலியெடுத்த விடுதலைப் புலிகளின் தாக்குதல் ஒன்றைத் தொடர்ந்தே தெற்கில் கலவரங்கள் மூண்டன. அரசியல் சூழ்ச்சி, அரசின் செயலின்மை மற்றும் தண்டனையின்மைக் கலாசாரம் (Culture of impunity) ஆகியவற்றின் விளைவானதே தெற்கின் வன்முறை எதிர்வினை. இந்த உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் வரை, குணப்படுத்தலை தொடங்க முடியாது.
1983 கறுப்பு ஜூலை வன்செயல்களுக்கு யார் பொறுப்பு, எத்தனை பேர் இறந்தார்கள், ஏன் அரசு தவறியது என்ற பதிலளிக்கப்படாத கேள்விகள் நாட்டை தொடர்ந்தும் தொந்தரவு செய்து கொண்டிருக்கின்றன. 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், 1995ஆம் ஆண்டில் இருந்து செம்மணியில் கண்டுபிடிக்கப்படும் மனிதப் பதைகுழிகள் மற்றும் நீதி தாமதிக்கப்பட்ட, மறுக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட ஏனைய பல சம்பவங்கள் உட்பட அண்மைய தேசிய அனர்த்தங்கள் பலவற்றில் இந்த தீர்வு காணப்படாத உண்மைகள் எதிரொலிக்கின்றன.
காலம் கடந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், 1983 ஜூலையில் நடந்தவற்றை தெரிந்து வைத்திருப்போர் மிகச் சிலராகவே இருப்பர். ஆனால், கடந்த காலத்தை நாம் தெரிந்துகொள்ளாவிட்டால், பிரச்சினையின் மூலவேர்க் காரணிகளை கையாளக்கூடிய சமாதான எதிர்காலம் ஒன்றுக்கான பயனுறுதியுடைய அத்திவாரத்தை போடமுடியாது.
இத்தகைய பின்புலத்தில், அரசாங்கத்தின் உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு 1983 ஜூலை நிகழ்வுகளை முழுமையாக ஆராயவேண்டிய தேவையையும் அதன் ஆணையில் உள்ளடக்கவேண்டியது அவசியமாகும்.
நீதி மற்றும் பரஸ்பர மதிப்பின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை எதிர்காலச் சந்ததி பொறுப்பேற்க வேண்டுமானால், நடந்தவை பற்றிய உண்மையையும் அதற்கான காரணங்களையும் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
தீர்வு காணப்படாமல் இருக்கும் இனநெருக்கடியின் விளைவாக உயிரிழந்த சகலரையும் முழு நாடும் நினைவுகூருவதற்கும் அத்தகைய வன்முறைகள் மீண்டும் ஒருபோதும் நிகழாதிருப்பதற்கு உறுதிபூணுவதற்குமான ஒரு தினமாக ஜூலை 23 பிரகடனம் செய்யப்பட வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை யோசனை முன்வைக்கிறது.
இனம், மதம், சாதி மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு அப்பால் சகல சமூகங்களையும் அரவணைத்துப் பாதுகாக்கக்கூடிய அதிகாரப் பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட நீதியான அரசியல் முறைமை ஒன்றின் ஊடாக சுபீட்சமும் அபிவிருத்தியும் நிறைந்த நாடொன்றை கட்டியெழுப்புவதில் இன்றைய தலைமுறையினரிடமும் அரசாங்கத் தலைமைத்துவத்திடமும் இருக்க பற்றுறுதிக்கான ஒரு குறிகாட்டியாக அந்த யோசனை அமையும்.