பனை சார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்.
ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி பனை வாரம்!

வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டின் கீழ் ஆண்டுதோறும் ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியானது பனை வாரமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பனை வளம் பெருகும் வகையிலும் பனை சார் உற்பத்தி பொருட்களின் பலாபலன்களை வெளிப்படுத்தும் வகையிலும் அப்பொருட்களுக்கு உறுதியான சந்தைப்படுத்தலை ஏற்படுத்தி கொடுக்கும் வகையிலும் பனம் விதைகள் நடுதல், பனை சார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், பனை சார் பொருட்களை உற்பத்தி செய்தல் தொடர்பான போட்டிகள், பாடசாலை மாணவர்களிடையே ஓவிய போட்டிகள், தாலம் சஞ்சிகை வெளியீடு, மற்றும் கலை நிகழ்வுகள் என்றவாறு வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் பனை வாரம் கொண்டாடப்படவுள்ளது.
அந்தவகையில் நாளை 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் 26ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், நல்லூர், முத்திரைச்சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் பூங்காவில் பனை சார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வானது 'எங்கள் வாழ்வியலில் பனை' என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ளது.
தொடர்ச்சியாக ஜூலை 27ஆம் திகதி வவுனியா மாவட்டத்தின் நெடுங்கேணி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திலும் ஜூலை 28ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்திலும் பனம் விதைகளை நடும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.