'ஓம்சிவோஹம்.. ஓம்சிவோஹம்'.. இளையராஜா பாடியதும் எழுந்து நின்று கைதட்டிய மோடி!
இளையராஜாவின் இசைக்கு எழுந்து நின்று கைதட்டிய மோடி!

கங்கை கொண்ட சோழபுரத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இரண்டு நாள்கள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, இன்று (ஜூலை 27) அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா மற்றும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். விழாவின் தொடக்க நிகழ்வாக கலாஷேத்ராவின் பரதநாட்டிய குழு நிகழ்ச்சியும், பாரம்பரியமிக்க ஓதுவார்கள் குழு தேவாரம் திருமுறையை ஓதும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து, பத்மபூஷன் இளையராஜா மற்றும் அவரது குழுவினரின் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலாவதாக, தான் இசையமைத்த 'நான் கடவுள்' படத்தில் இருந்து “ஓம்சிவோஹம்” பாடலை இளையராஜா பாடினார். பின்னர், “நமசிவாய வாழ்க... நாதன் தாள் வாழ்க” பாடலை பாடினார். தொடர்ந்து, இசைஞானி இளையராஜா தான் இசையமைத்த திருவாசக பாடல் மற்றும் சிவபுராண பாடல்களை பாடினார். இதைக்கேட்ட பிரதமர் மோடி எழுந்து நின்று கைதட்டினார். பின், கைகளில் தாளம்போட்டு பாடல்களை ரசித்தப்படி கேட்டு மேடையில் அமர்ந்திருந்தார்.
இந்த இசை நிகழ்ச்சியை தொடர்ந்து, மாணிக்கவாசகர் சிவபெருமாளுக்காக காத்திருந்த புராணக் கதையை நிகழ்ச்சியில் எடுத்துரைத்தார்.
முன்னதாக, கோயிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, லிங்கம் வடிவமான பிரகதீஸ்வரருக்கு தனது கைளால் அபிஷேகம் செய்து வழிபட்டார். பின்னர், பிரதமருக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.அதற்கு முன்பாக, பிரதமர் மோடியின் வருகையையொட்டி, பொன்னேரி பகுதியில் அமைக்கப்பட்ட ஹேலிபேட் தளத்திலிருந்து கங்கைகொண்ட சோழபுரம் வரை 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரதமர் மோடி ரோடு ஷோ சென்றார். அப்போது வழிநெடுங்கிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை பார்த்து, காரில் நின்றபடி மோடி கையசைத்தார். பதிலுக்கு பொதுமக்களும் மோடிக்கு வணக்கம் செலுத்தி மகிழ்ந்தனர்.