ஈழத் தமிழர்கள் சர்வதேசத்தையும் இந்தியாவையும் நம்பி பலனில்லை!
"பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நாம் கடந்து வந்த பாதை தொடர்பாக மதிப்பீடு செய்து அதற்கான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்”

நெப்போலியன் ஒரு முறை தனது அதிகாரிகளிடத்தில் பேசும் போது “அரசியல் தலைவர்களாக இருந்தாலும் சரி தேசங்களாக இருந்தாலும் சரி பத்து வருடங்களுக்கு ஒரு முறையாவது நாம் கடந்து வந்த பாதை தொடர்பாக மதிப்பீடு செய்து அதற்கான சீர்திருத்தங்களை செய்து கொள்ள வேண்டும்” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது அதனை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாக அமையும் என்று நாம் கருதுகின்றோம். ஐரோப்பா வரலாற்றில் நெப்போலியன் மறக்கமுடியாத ஒரு நாமம். நெப்போலியன் பொனபார்ட் 1769 – 1821 களில் வாழ்ந்து தனது 52 வது வயதில் இறந்தும் போனார். இந்த நெப்போலியன் கதை நமக்கு சில நூறு வருடங்களுக்கு முந்தியது ஒன்று.
அந்தக் காலகட்டத்தில் – அப்போதைய உலக செயல்பாடுகளில் இன்றைய அளவு வளர்ச்சி வேகம் அன்று இருந்திருக்காது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவல்கள்தான். எனவே மின்னல் வேகத்தில் அல்லது ஒளிவேகத்தில் மாற்றங்கள் நடந்து வருகின்ற இந்தக் காலத்தில் தனிமனிதர்களும் சமூகங்களும் இந்த உலகில் வாழும் போது அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்குத் தயாரில்லாத சமூகமும் தனிமனிதர்களும் கூட அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளப்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று என்று நாம் நம்புகின்றோம்.
நாம் தலைப்புக்கு ஏற்று கருத்துக்களை பேசுவதாக இருந்தால் சிறுபான்மை சமூகங்களுக்கு சமகால அரசியலில் புதிய அணுகுமுறைகள் தேவை – காலத்தின் கட்டாயமாகும். அரசியல் பற்றி நேரடியாக விமர்சனங்கள் பண்ணும் போது அரசியல் கட்சிகள் அதன் தலைவர்களை சுட்டிக்காட்டாது கருத்துக்களை முன்வைப்பது என்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கின்ற ஒரு வேலை. நமது பதிவுகளில் இப்படியான கருத்துக்களை மறைத்து கதைகள் சொல்வதில்லை என்பது நமது வாசகர்களுக்குத் தெரியும். எனவே எமது சாதக – பாதக விமர்சனங்களையும் வாசகர்கள் ஜீரணித்துக் கொள்வார்கள் என்றும் நாம் நம்புகின்றோம்.
இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும் என்றாலும் இன ரீதியில் சிங்களவர்கள், தமிழர், முஸ்லிம்கள், மலையகத்தார், ஏனையோர் என்று அது அமைகின்றது. மத ரீதியில் என்று வருகின்ற போது பௌத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள், இதர என்று ஒரு மிகச்சிறிய குழுவும் இங்கு வாழ்ந்து வருகின்றனர். இதனால் இன ரீதியிலும் மத ரீதியிலும் இவர்களிடையே இணக்கப்பாடுகளும் முரண்பாடுகளும் இயல்பானவை. என்னதான் நாம் அனைவரும் இலங்கையர் என்று சொல்லிக் கொண்டாலும் இந்த வேறுபாடுகளை ஒவ்வொரு தரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இதே நிலைதான். எனவே புரிந்துணர்வுகளும் விட்டுக் கொடுப்புகளும் சமூக ஒற்றுமைக்கு தேவை.
வரலாறு தொட்டு மன்னராட்சி காலம், தென்னிந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, அதற்குப் பின்னர் நாடு விடுதலை பெற்ற பின்னர் ஏறக்குறைய முப்பது வருடங்கள் நாட்டில் நடைபெற்ற ஆயுதப் போராட்டங்கள் இந்த நாட்டில் இன ரீதியான முரண்பாடுகளை உச்சத்துக்கு கொண்டு சென்றிருந்தன. அத்துடன் இன – மத ரீதியான செல்வாக்கும் சிறிதும் பெரிதுமாக நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. சுதந்திரத்துக்கு பின்னர் நாட்டில் அதிகாரத்துக்கு வந்த சில ஆட்சியாளர்கள் சிறுபான்மை சமூகங்கள் மீது தமது மேலாண்மையை செலுத்தி வந்தனர். இது ராஜபக்ஸ -கோட்டா அதிகாரத்தில் இருந்த போது உச்சம் தொட்டிருந்தது. அதே ஆணவம் அவர்களது வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தது.
ஜே.ஆர். காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார தேர்தல் முறை இன ரீதியான அரசியல் இயக்கங்களை, கட்சிகளை வலுப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக தெற்கில் இனவாதம் மேலோங்க இதுவும் ஒரு காரணமாக இருந்து வந்திருகின்றது. சிறுபான்மையினர் அரசியல் பற்றிப் பார்க்கும் முன்னர் பெரும்பான்மை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள், விருப்பு வெறுப்புக்கள், அரசியல் செயல்பாடுகள் பற்றி முதலில் பார்ப்போம்.
இன்று இந்த நாட்டில் வாழ்கின்ற இயக்கர், நாகர்களைத் தவிர அனைவரும் வந்தேறு குடிகள். அதில் எல்லோருக்கும் ஒரு பொது உடன்பாடு இருக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் விஜயன் வருகை, அதற்குப் பின்னர் மஹிந்த தேரர் வரவு, மன்னன் தேவநம்பிய தீசன் பௌத்த மதத்தை பின்பற்றியது என்பன இந்த நாட்டில் புதியதோர் அரசியல் கலாசாரத்துக்கு பிரதான காரணங்களாக அமைந்தன என்பது எமது கருத்து. அதன் பின்னர் மன்னராட்சி, நாம் முன்சொன்ன இந்தியப் படையெடுப்புக்கள், ஐரோப்பியர் ஆக்கிரமிப்பு, நாடு சுதந்திரம் என்ற அனைத்துக் காலப்பகுதிகளிலும் நாட்டில் சுதேச அரசியல் இயக்கங்களின் செல்வாக்கு மேலோங்கி வந்தது. இதில் இன – மத உணர்வுகளும் கலந்திருந்தன. இதன் பின்னணியில்தான் நாட்டில் இனக்கலவரங்களும் முறுகல் நிலைகளும் அந்தக் காலப்பகுதிகளிலும் அவ்வப்போது இருந்து வந்திருந்தன என்பதை நாம் அவதானிக்க முடிகின்றது.
நமது பண்டைய வரலாற்றுச் சுருக்கம் அப்படி இருக்க, சுதந்திரத்துக்குப் பின்னரான காலப்பகுதியை ஆராய்கின்ற போது நாட்டில் அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகளைப் பார்க்கின்ற போது ஐக்கிய தேசியக் கட்சியும் (1946) சுதந்திரக் கட்சியுமே (1951) மாறிமாறி ஏறக்குறைய 2020 வரையிலும் அதிகாரத்தில் இருந்து வந்திருக்கின்றன. சமசமாஜ கட்சி (1935), இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (1943) என்பன துவக்கத்தில் செல்வாக்குடன் இருந்தாலும் பின்னர் பலயீனமடைந்தன. இன்று அவை கட்சிப் பொருட்கள் போல ஆகிவிட்டன. ஒருமுறை சமசமாஜக் கட்சியின் என்.எம் பெரேரா கொழும்பு மேயராக பதவியில் இருந்திருக்கின்றார்.
கூட்டணிகள் அமைத்து மேற்படி இடதுசாரிகள் செல்வாக்கான அமைச்சுகளை வகித்திருக்கின்றார்கள். அதேநேரம் வடக்கில் சில தமிழ் அரசியல் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. அவை இன்று முன்பு போல செல்வாக்குடன் இன்று இல்லை. 1981 கள் வரைக்கும் இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றிருக்கவில்லை. என்றாலும் அவர்களின் பல சிவில் இயக்கங்கள் பெரும்பாலும் கொழும்பை மையப்படுத்தி செயல்பட்டு வந்திருக்கின்றன.
உதாரணமாக பதியுதீன் மஹ்மூத் அவர்களின் இஸ்லாமிய சோஸலிச முன்னணி டாக்டர் கலீல் போன்றவர்களின் முஸ்லிம் லீக்கை கூறலாம். ஆனால் அவை நாட்டில் அதிகாரத்தில் இருக்கின்ற பிரதான கட்சிகளுக்கு துணைபோகின்ற இயக்கங்களாக செயல்பட்டு வந்திருக்கின்றன. ஜே.ஆர். ஜெயவர்தன செயல்பாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவு ஏற்படுத்திக் கொண்டமை, முஸ்லிம்களை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகள் என்று செடிகொடி என்று பேசி அவர்களைப் பண்படுத்தி வந்தமை.
இதனால், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் (1981) அந்த சமூகத்தில் செல்வாக்குடன் மக்கள் மத்தியில் அங்கீகாரம் பெற ஜே.ஆர். துணைபுரிந்திருக்கின்றார். மு.கா. தலைவர் அஸ்ரபுக்குப் பின்னர் இன்று வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசவாத உணர்வுடைய கட்சிகள் பிறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இது தனிப்பட்ட நபர்களின் அரசியல் இருப்பை மையமாகக் கொண்ட இயக்கங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே அவற்றை தேசிய அளவில் முஸ்லிம்களின் நலன்களை மையமாக வைத்து செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் என்று சொல்ல முடியாது.
பிரதான அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள், வெட்டுக் கொத்துக்கள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த பண்டாரநாயக்க புதுக் கட்சி துவங்கி பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று அண்மைக்காலம் வரை நமது அரசியலில் செல்வாக்குடன் செயல்பட்டு வந்தது. சந்திரிக்காவுக்குப் பின்னர் குறிப்பாக மைத்திரி காலத்தில் சுதந்திரக் கட்சி பல கூறுகளாக பிளந்து நிற்கின்றது. அதிலிருந்து மஹிந்த தலைமையிலன மொட்டுக் கட்சி உருவாகியது. சஜித் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தியும் பிற்பட்ட காலப்பகுதிகளில் செல்வாக்கான அரசியல் கட்சிகளாக வளர்ந்திருக்கின்றன. ஆனால் குறுகிய காலத்திற்குள்ளேயே மஹிந்த தலைமையிலான மொட்டு வாடிப்போயிருப்பதை நமது அரசியல் களத்தில் பார்க்க முடிகின்றது.
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களை சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தன்பக்கம் இழுத்துக் கொண்டது. இதற்கு ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுதான் காரணமாக அமைந்தது. இதுவரை நாட்டில் மிகப் பெரும் அரசியல் கட்சியாக இருந்த ஐ.தே.க. தலைமையிலான ரணிலின் கட்சி ஆதரவாளர்களினால் நிராகரிக்கப்பட்டது. இன்று ரணில் அரசியலில் மிகவும் பலயீனமான மனிதராக இருந்தாலும் களத்தில் தனது ஆட்டத்தை அவர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மலையக அரசியலை எடுத்துக் கொண்டால் சுதந்திரத்துக்குப் பின்னர் மிகவும் செல்வாக்கான அரசியல் கட்சிகளை வைத்திருந்தவர்கள் என்று பார்க்கும் போது, சௌமியமூர்த்தி தொண்டமான், (1939) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் ஏ.அசிஸ் (இலங்கை இந்திய காங்கிரஸ் 1939) போன்றவர்களின் அரசியல் கட்சிகளைக் குறிப்பிட முடியும். இன்று மலையகத்தில் மலைக்கு மலை தோட்டத்துக்குத் தோட்டம் கட்சிகள் என்று அரசியல் இயக்கங்கள் முளைத்திருப்பதைப் பார்க்க முடியும்.
இப்போது சர்வதேசத்தையும் இந்தியாவையும் தொடர்ந்தும் நம்பி இருப்பதில் எந்தப் பயன்களும் இல்லை என்ற நமது வாதத்துக்குள் நுழைவோம். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1944ல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் மூலம் ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை ஜீ.ஜீ. பென்னம்பலம் முன்வைத்தார். பின்னர் 1949 ல் தந்தை செல்வா தலைமையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆரம்பமானது. இவை இரண்டும் ஏதோ வகையில் வடக்கு, கிழக்கில் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்பாப்பிள்ளைஅமிர்தலிங்கம் வரையிலான காலப்பகுதி தமிழரசுக் கட்சி வீரியத்துடன் செயல்பட்டு வந்திருக்கின்றன. அதேபோல ஜீ.ஜீ. பொன்னம்பலம் துவங்கிய தமிழ் காங்கிரஸ் இன்று ஒரு பிராந்தியக் கட்சி என்ற அளவுக்கு போய் நிற்கின்றது.
அத்துடன் விக்னேஸ்வரன் ஒரு கட்சி வைத்திருக்கின்றார். பார் அனுமதிப்பத்திரத்துடன் அவர் மீது இருந்த இமேஜ் கெட்டுப்போய் நிற்கின்றது. டக்ளஸ் மற்றும் முன்னாள் போராளிகள் குழுக்களின் பேரில் பல அரசியல் கட்சிகள் வடக்கு கிழக்கில் செயல்பட்டு வருகின்றன. கிழக்கிலும் அம்மான் மற்றும் பிள்ளையானின் அரசியல் செய்பாடுகளும் காணப்படுகின்றன. அதேநேரம் அனுரவுடன் சேர்ந்து அனைவருக்கும் விமோசனம் என்ற கருத்தும் இப்போது அங்கு பலமாக இருந்து வருகின்றது. இதுபோல தமது இருப்புக்கான ஒரு அரசியல் செயல்பாடுகள்தான் பொதுவாக இப்போது வடக்கு, கிழக்கில் காணப்படுகின்றன.
எனவே, வடக்கு, கிழக்கில் செயல்படுகின்ற அரசியல் இயக்கங்கள் இன்று அவற்றின் தனிப்பட்ட இருப்புக்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு விமோசனங்களைப் பெற்றுத் தரப்போவதில்லைஎன்பதனை வடக்கு, கிழக்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்கள் நலன்களைவிட இவர்கள் தமது அரசியல் இருப்புக்குத்தான் முன்னுரிமை கொடுத்து போராடி வருகின்றார்கள். அத்துடன் இன்று தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற இலங்கை தமிழரசுக் கட்சி சம்பந்தன் காலத்தில் பதவியில் இருக்கின்ற அரசுக்கு விசுவாசமான ஒரு முகவர் அணியாகத்தான் இயங்கி வந்திருக்கின்றது.
அதனால்தான் ஆட்சியாளர்களை நம்பி இவர்கள் தமிழர்களின் அரசியல் விமோசனம் பற்றி அவ்வப்போது இன்று – நாளை எனக் காலகெடுக்களை கொடுத்து தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்றனர். இதில் சுமந்திரன் பங்கு அளப்பரியது என்பதுதான் நமது கணிப்பு. இன்று உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பின்னர் தமது கட்சி மீண்டும் மக்கள் மனதை வென்றுவிட்டதாக இவர்கள் கதை விட்டாலும் மாகாண சபைத் தேர்தல் வருமாக இருந்தால் யதார்த்தத்தை நமக்கு புரிந்து கொள்ள முடியும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வரும் ஒரு இயல்புநிலை தான் இது என்பதும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் போராட்ட காலத்தில் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் கடும் சேதாரங்கள் நிகழ்ந்தாலும் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் அரசியல் தலைமையை தமிழ் மக்கள் வரலாற்றில் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். பல தசாப்தங்கள் பிரபாகரன் தலைமையில் அங்கு ஒரு அரசு இயங்கி வந்திருப்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். தெற்கில் பிரபாகரன் பயங்கரவாதி என்றாலும் வடக்கு, கிழக்கில் மட்டுமல்ல, தமிழ் உலகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. என்னதான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த என்.பி.பி. அரசு அதிகாரத்தில் இருந்தாலும் அதற்கு எதிரான விமர்சனங்கள் இருப்பது போலதான் பிரபாகரன் பற்றிய மதிப்பீடும்.
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் என்று வந்து அதில் தமிழர் பிரதிநிதித்துவம் என்பதனை விட தமிழ் மக்களுக்கு அடிப்படைத் தேவை ஒரு அரசியல் தீர்வு. இது விடயத்தில் மேற்சொன்ன தேர்தல்களோ அதில் தமிழர்களுக்கு வரும் பிரதிநிதித்துவமோ சமூகத்தின் விமோசனத்துக்கு காரணிகளாக அமையப்போவதில்லை. அதேநேரம், சர்வதேசமும் இந்தியாவும் ஈழத்தமிழர்களை இன்று கைவிட்டு விட்டது. இதற்குக் காரணம் வடக்கு, கிழக்கில் அரசியல் செயல்பாடுகள் – போராட்டங்கள் பலயீனப்பட்டதே காரணம். இப்போது செம்மணி விவகாரம் பேசு பொருளாக இருந்தாலும் அது பற்றி ஒட்டுமொத்த தமிழர்கள் மத்தியில் ஒன்றுபட்ட கருத்து இல்லை.
இப்போது இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் தேர்தல் பற்றி பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எங்காவது ஒரு இடத்தில் ஈழத்தமிழர் விவகாரம் ஒரு பேசுபொருளாக அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றார்களா என்பதை சிந்தித்துப் பாருங்கள். சர்வதேசமும் இப்போது ஈழத்தமிழர் விவகாரத்தை ஒரு தலைப்பாக எடுத்துக் கொள்வதே கிடையாது. அது கிடப்பில் போடப்பட்ட கோவைகளாகத்தான் இருந்து வருகின்றன. எனவே நாம் முகவுரையில் சொல்லி இருப்பது போல நெப்போலியன் உபதேசத்தை கட்டாயமாக இன்று ஈழத் தமிழர்கள் பரிசீலித்துப் பார்க்க வேண்டும்.
எனவே, வடக்கு, கிழக்கில் இன்று இயங்கி வருகின்ற அரசியல் கட்சிகளும் அவற்றின் மக்கள் பிரதிநிதிகளும் தமிழர் விமோசனங்களைப் பெற்றுத்தர முடியாது நிலையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் செல்லாக் காசுகள் என்பதனைப் புரிந்து புதிய வியூகங்களுடன் ஒரு பலமான அரசியல் இயக்கம் தமிழர்களுக்கு தேவை. முஸ்லிம் மற்றும் மலையக தனித்துவ அரசியல் இயக்கங்களின் நிலையும் இதுதான். இவர்கள் சமூகத்தை விற்று தன்னல அரசியல் செய்கின்றார்கள் என்ற ஒரு வலுவான குற்றச்சாட்டும் அந்த சமூகங்களின் மத்தியில் நிலவி வருகின்றன.
நஜீப் பின் கபூர்