நல்லூர் மகோற்சவம் ஆரம்பம் – பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு!
ஆலய வெளிவீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மஹோற்சவ திருவிழா தொடர்ந்து 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.
மகோற்சவ திருவிழாக்களில் மஞ்ச திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 07ஆம் திகதியும் , மாம்பழ திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட்19ஆம் திகதியும் , சப்பரத் திருவிழா எதிர்வரும் 20ஆம் திதியும், தேர்த் திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதியும் , தீர்த்த திருவிழா ஓகஸ்ட் 22ஆம் திகதி காலை இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவம் நிறைவுபெறும்.
நல்லூர் கந்தசுவாமி கோயில் மஹோற்சவத்தை முன்னிட்டு யாழ் மாநகர சபையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களின் படி, எதிர்வரும் ஓகஸ்ட் 24ஆம் திகதி வரையில் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும். நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆலய வெளிவீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது.
உற்சவ காலங்களில் ஆலய சூழலில் பக்தி கீதங்களை மாத்திரமே ஒலிபரப்பு செய்யமுடியும்.உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுளின் உருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது.
உற்சவ காலத்தில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்தல், வானூர்தியை பயன்படுத்தி பூ சொரிதல் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகளை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.உற்சவ காலங்களில் ஆலய வெளிச் சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.
நல்லூரான் வளைவில் சேவல் கொடி!
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை , செம்மணி பகுதியில் உள்ள நல்லூரான் வளைவிலும் , கைலாச பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள நல்லூரான் தெற்கு வாசல் வளைவிலும் சேவல் கொடி நாட்டப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை வைரவர் உற்சவம் நடைபெற்றது. மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வைரவர் வெளி வீதியுலா வந்ததுடன் , வெளிவீதி பிரகாரத்தில் சேவல் கொடிகள் பொருத்தப்பட்டன.