மேதகு- ஈழத்தமிழர்களின் அடையாளம்!
வன்முறை எமது வாழ்வல்ல நாமாகவே விரும்பி இந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை.

எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal). இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனிதனாக நின்று ஒரு இளைஞன் “இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி.” என்று வரலாறு ஒன்றை எழுதிச் சென்றிருக்கிறான்.
வன்முறை எமது வாழ்வல்ல நாமாகவே விரும்பி இந்த ஆயுதத்தை கையில் எடுக்கவில்லை. சிங்கள ஆட்சியாளர்கள் உண்மையான பெளத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதம் தூக்கி இருக்க மாட்டோம்.(If the Sinhala rulers had been real Buddhists we would not have taken up arms). அவர்களை போன்று எமக்குமான சம உரிமையை வழங்கி இருந்தால் நாம் இந்த பாதைக்கு வந்திரிருக்க மாட்டோம் என்று கூறி தனி ஒரு மனிதனாக நின்று திருப்பி அடித்தால் தான் எம் மக்களுக்கான உரிமையை அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு மூன்று படைகளை கட்டி சம பலமாக நின்று தமிழன் அடையாளத்தை உலகறியச் செய்தவன்.
ஒரு காலத்தில் உலகம் எம்மை பார்த்ததும் அதேவேளை எம்மை பேச்சு வார்த்தைக்கு அழைத்ததும் எமக்குள் இருந்த இந்த படை வலுச் சமநிலையாகும். போராட்டம் என்பது பூக்களின் மேல் நடப்பது இல்லை. முள்ளும் கல்லுமாக எத்தனையோ தடைகளை தாண்டி நடக்க வேண்டும். இதில் சரிகளோடும் பிழைகளோடும் துரோகங்களோடும் கடந்து போவதென்பதும் உலக பூகோள அரசியலின் மாற்றங்களோடும் அவர் அவர் நலன் சார்ந்த மாற்றங்களுடன் பயணித்து எமது இலக்கை அடைவதென்பதும் இலகுவானதல்ல.
எல்லா விடுதலைப் போராட்டங்களும் சரியோடும் பிழைகளோடுமே நகர்ந்திருக்கின்றன. எல்லா கைகளுமே தூய்மையான கைகள் இல்லை பாலைஸ்தீன விடுதலை வீரன் யாசிர் அரபாத்தின் கையிலும் கியூபா விடுதலை வீரன் பிடல் காஸ்ரோ கையிலும் சேகுவேரா கைலும் இருந்ததெல்லாம் துப்பாக்கி தான் இவர்கள் எல்லோருமே சரிகளோடு பிழைகளோடும் தான் தம் இனத்தின் போராட்டத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் நினைவு கூரப் பட வேண்டும். இன்று இவர்கள் போற்றத் தக்க தலைவர்களாக அந்த மக்களால் நினைவு கூரப் படுகிறார்கள் என்றுமே மறக்க முடியாத தலைவர்களாக மதிப்பளிக்கப் படுகிறார்கள் அவர்கள் இன்று இல்லை என்றாலும் அவர்கள் காட்டிய பாதையில் இருந்து போராடுகிறார்கள் இதில் வெற்றியும் அடைந்திருக்கிறார்கள்.
உலகின் எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஆதிக்க சக்திகளின் பூகோள அரசியல் நலனுக்கு ஏற்பவும் புதிய உலக ஒழுங்கின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே அந்த போராட்டத்தின் தோல்வியும் வெற்றியும் தங்கி இருக்கும். பூகோள அரசியல் என்பது ஒரு சதுரங்க பலகை போலவே Geo Politics is like a chessboard, அதிகாரம் மிக்க நாடுகள் தங்கள் சுயநலத்தின் அடிப்படையில் இந்த ஆட்டத்தை ஆடுகின்றன. இன்று சர்வதேசத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளும் அதையொட்டிய போர்களும் இந்த நலன்களொடு தான் நகர்கின்றன. நீதி, தர்மம், அறம், மனிதாபிமானம், எல்லாம் இன்று இருக்கும் உலக ஒழுங்கில் ஒன்றுமே இல்லை. ஆதிக்க வலு மிக்க சக்திகள் அவர் அவர் பூகோள அரசியல் சுயநலன் சார்ந்து அங்கீகரிப்பதோ அழிப்பதோ அவர் கைகளில் தான் இருக்கிறது இதில் தமிழர் போராட்டமும் சிக்குண்டு பயங்கரவாதத்துக் எதிரான யுத்தமென கூறி ஒரு இனத்தின் விடுதலை போராட்டம் பெரும் பூகோள அரசியலில் சுய நலன் சார்ந்தவர்களால் எம் கண்ணை குத்தி அளிக்கப்பட்ட வரலாற்றோடு இது மெளனிக்கப் பட்டது.
வரலாறுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் நடந்த வரலாறுகளை யாரும் மறைக்கவோ அல்லது அந்த மக்களிடம் இருந்து அந்த நினைவுகள் பிரிக்கவோ முடியாது. தன் இனத்தின் விடுதலைக்காக நின்ற இடத்திலேயே நின்று போராடியவன் எங்குமே சென்று ஒளித்து இருக்க மாட்டான் இது அவனுக்கான அடையாளம் இல்லை அந்த வகையில் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதிய மேதகு என்ற வீரனின் வரலாற்றை யாராலும் மறைக்க முடியாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால் யார் ஒருவன் ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக போராடி சென்றானோ அவன் வாழ்வும் வரலாறும் அந்த மக்களால் நினைவு கூரப்பட வேண்டும். தன் நலனும் சுயநலன் உடன் கூடியவர்கள் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள் இவர்களை தவிர்த்து ஈழத்து மக்கள் யதார்த்தத்துடன் கூடிய அறிவு பூர்வமான சிந்தனையுடன் கூடிய முடிவுகளை எடுக்க வேண்டும் இதில் நம்பிக்கையோடு அவன் காட்டிய பாதையில் எல்லோரும் ஒற்றுமையாக பயணிப்பதே அந்தத் தலைவனுக்கு நாம் நன்றியோடும் நினைவோடும் செய்யும் கடமையாகும்.
பா.உதயன்