கறுப்பு ஜூலை- 42 ஆவது நினைவு தினம் இன்று!
இதற்கு முன்னர் இருதடவைகள் தமிழினப் படுகொலைகள் நடைபெற்றிருந்தாலும் இதுவே இன வன்மம் கொண்ட பெரும் தமிழின அழிப்பின் தொடக்கமாகும்.

1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23ஆம் திகதி முதல் சில வார காலத்திற்கு இலங்கையின் பல பகுதிகளில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. இதனையே கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இன்றும் இலங்கையர்கள் அடையாளப்படுத்தி வருகின்றனர்.
திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஆரம்பமாக இந்த கறுப்பு ஜுலை வன்முறை பார்க்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான வணிக நிலையங்கள், வீடுகள், சொத்துகள் என அனைத்தையும் அழிக்கும் செயல்பாடாக இந்த வன்முறை சம்பவம் பதிவாகியிருந்தது.
ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று தமிழர்களைத் தேடித் தேடி தாக்குதல் நடத்தியது மாத்திரம் அன்றி,தமிழர்கள் இந்த வன்முறைகளில் கொலையும் செய்யப்பட்டார்கள்.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவை தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், 1983ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் ராணுவத்தினர் பயணித்த வாகனமொன்றின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் ஜுலை 23ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவ சிப்பாய்கள் உயிரிழந்திருந்ததாகக் கூறப்பட்டது.
உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் தென் பகுதியிலுள்ள சிங்கள மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.
கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முற்றுகைத் தாக்குதலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 13 ராணுவத்தினர் முதலில் உயிரிழந்ததுடன், பின்னர் காயமடைந்த இரண்டு ராணுவத்தினர் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருந்தது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான தகவல்கள் மறுநாள் வெளியாகிய நிலையில், தென் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த ராணுவ சிப்பாய்களின் சடலங்களை கொழும்பு – பொரள்ளை மயானத்தில் நல்லடக்கம் செய்ய அரசாங்கம் தீர்மானித்த நிலையில், பொரள்ளை பகுதிக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வருகை தந்திருந்தனர்.
இந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்த வந்துவிட்டதாக புரளி பரவி, இது யே,ஆர். யெயவர்த்தனாவால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட வன்முறை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.
கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாகவும் பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர்.
1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
இலங்கையில் தமது சொத்துகளை, சொந்தங்களை இழந்த பலர் இன்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் இன அழிப்புக்கு இந்த வன்முறை முதன்முதலில் வித்திடிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இருதடவைகள் தமிழினப் படுகொலைகள் நடைபெற்றிருந்தாலும் இதுவே இன வன்மம் கொண்ட பெரும் தமிழின அழிப்பின் தொடக்கமாகும்.