பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூர்து மாதா திருத்தலம்.
லூர்துவின் உண்மையான அற்புதம், அதன் நீரூற்றில் மட்டுமல்ல; அந்தப் புனித மண்ணில் மனிதநேயமும், மரியாதையும், ஆழ்ந்த பக்தியும் ஒருங்கே கலந்து வெளிப்படும் இந்த ஒப்பற்ற ஒழுங்கில்தான் இருக்கிறது.

உலகப் புகழ்பெற்ற லூர்து மாதா திருத்தலம், பிரான்சின் தென்மேற்குப் பகுதியில் உள்ள லூர்து என்னும் நகரில் அமைந்துள்ளது.
1858-ஆம் ஆண்டு, பிப்ரவரி 11-ஆம் நாள் முதல் ஜூலை 16-ஆம் தேதி வரை, புனித பெர்னதெத் சுபீரு என்ற 14 வயது சிறுமிக்கு அன்னை மரியா 18 முறை காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. இந்தக் காட்சியின்போது, மரியன்னை தன்னை "நாமே அமலோற்பவ அன்னை" (I am the Immaculate Conception) என்று வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்தக் காட்சியளிப்பின்போது, பெர்னதெத் அன்னை மரியாவின் வழிகாட்டுதலின்படி ஒரு நீரூற்றைத் தோண்டினார். அந்த ஊற்று நீரில் இருந்து குணமளிக்கும் அற்புதங்கள் நிகழ்ந்ததாகப் பரவிய செய்தியை அடுத்து, லூர்து நகர் உலகின் மிக முக்கியமான கத்தோலிக்கத் திருத்தலங்களில் ஒன்றாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும், மில்லியன் கணக்கான திருப்பயணிகள், குறிப்பாக நோயுற்றோர், இந்தத் திருத்தலத்திற்கு வருகை தந்து, அன்னை மரியாவின் பரிந்துரையால் குணமடைய வேண்டிக்கொள்கின்றனர்.
இந்தத் திருத்தலத்தில் பல ஆலயங்கள் உள்ளன. அவற்றுள் மாசபியேல் குகை (காட்சியளித்த இடம்), அமலோற்பவ அன்னை பேராலயம், மற்றும் ஜெபமாலை பேராலயம் ஆகியவை முக்கியமானவை. அங்கே, மக்கள் வெள்ளம் ஒரு மாபெரும் நதியைப் போல பாய்ந்து வந்தாலும், அதன் ஓட்டத்தில் ஆர்ப்பாட்டம் இல்லை; மாறாக, ஆழ்ந்த நிசப்தத்தின் சங்கீதம் மட்டுமே கேட்கிறது. லட்சக்கணக்கான இதயங்கள் ஒரே நம்பிக்கையுடன் துடித்தாலும், அங்கே முண்டியடிக்கும் கரங்கள் இல்லை; அடுத்தவருக்காக வழிவிடும் அன்பின் கரங்களே இருக்கின்றன.
கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, இரவின் மெல்லிய குளிரில் நகரும் பவனியின்போது, ஒவ்வொரு முகத்திலும் தெரியும் பக்திப் பரவசம், மொழிகளையும் நாடுகளையும் கடந்த ஒரு தெய்வீக மொழியைப் பேசுகிறது. நோயுற்ற சக்கர நாற்காலியைத் தள்ளும் தொண்டரின் முகத்தில் தெரிவது வேலைக்காரனின் களைப்பல்ல, மாறாக தன் உறவுக்குச் சேவை செய்யும் ஒருவரின் பரிவும் புன்னகையுமே. அன்னை மரியா காட்சியளித்த அந்தப் புனித குகையின் முன், ஆயிரக்கணக்கானோர் அமைதியாக ஜெபிக்கும் காட்சி, அந்தப்பிரதேசம் தெவீகக உணர்வால் நிரம்பியுள்ளது போன்ற உணர்வைத் தருகிறது.
அங்கே அதிகாரத்தின் அதட்டல் இல்லை; வழிகாட்டும் பண்பின் மென்மை மட்டுமே உண்டு. குப்பைகளைக் காண முடியவில்லை, ஏனெனில் ஒவ்வொருவரும் அந்தப் புனித பூமியைத் தங்கள் இதயத்தைப் போல் தூய்மையாகப் பேணுகிறார்கள். "எனக்கு முதலில்" என்ற சுயநலக் குரல் அங்கே எழுவதே இல்லை. "நாம் அனைவரும் அன்னையின் பிள்ளைகள்" என்ற அமைதியான ஒருமைப்பாடே அனைவரையும் ஆட்கொள்கிறது.
லூர்துவின் உண்மையான அற்புதம், அதன் நீரூற்றில் மட்டுமல்ல; அந்தப் புனித மண்ணில் மனிதநேயமும், மரியாதையும், ஆழ்ந்த பக்தியும் ஒருங்கே கலந்து வெளிப்படும் இந்த ஒப்பற்ற ஒழுங்கில்தான் இருக்கிறது.
சிவா சின்னப்பொடி