71வது தேசிய திரைப்பட விருதுகள்: விருதுகளை அள்ளிய ’பார்க்கிங்’ திரைப்படம்; ஷாருக்கானுக்கு தேசிய விருது!
தமிழில் 'பார்க்கிங்' திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது.

பார்க்கிங் திரைப்படம் தேசிய விருதை வென்றுள்ளது.
71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேசிய திரைப்பட விருதுகள் கடந்த 1954ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சினிமாவில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் தேசிய விருதுகள் Feature film, Non feature Film, Film writing என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.
பார்க்கிங் படத்திற்கு தேசிய விருது
2023ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஹரீஷ் கல்யாண் நடித்த 'பார்க்கிங்' திரைப்படம் சிறந்த தமிழ் திரைப்படம், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் தேசிய விருது வென்றுள்ளது. பார்க்கிங் படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். கார் பார்க்கிங் விவகாரத்தில் ஹரீஷ் கல்யாண், எம்.எஸ்.பாஸ்கர் இடையே ஏற்படும் அகங்கார சண்டையை மையப்படுத்தி பார்க்கிங் படம் உருவாக்கப்பட்டது. பார்க்கிங் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் சிலம்பரசன் நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார். மேலும் பார்க்கிங் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ்.பாஸ்கர் வென்றுள்ளார்.
ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது: 'வாத்தி' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜிவி பிரகாஷ் வென்றுள்ளார். வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை ’சூரரை போற்று’ படத்திற்காக பெற்றார். ஹிந்தியில் அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரபல நடிகர் ஷாருக்கான் வென்றுள்ளார்.
non feature films என்ற பிரிவில் little wings என்ற திரைப்படத்திற்காக ஒளிப்பதிவாளர்கள் சரவணமுத்து சௌந்தர பாண்டி மற்றும் பாண்டி மீனாட்சி சுமன் தேசிய விருது வென்றுள்ளனர். கடந்த முறை பொன்னியின் செல்வன் பாகம் 1, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களுக்கும், ஏ.ஆர்.ரகுமான், நடன இயக்குநர் சதீஷ் ஆகியோரும் தேசிய விருது பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.