நல்லூர் கந்தனின் வருடாந்திர மகோற்சவம் இன்று ஆரம்பம்!
கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவம் இன்று (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
நல்லூர் கந்தன் ஆலய மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழாக்கள் இடம்பெறும்.
மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.
இந்தநிலையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் முதல் நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதித் தடை ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னரே திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதி மூடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களில் மாற்று வீதிகள் ஊடாகவே பயணிக்க முடியும் என யாழ் மாநகர சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும்.
நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.