இளையோர் சுகநலக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடை பவனி!
தாய் சேய் நலம், உணவும் போசாக்கும், பாடசாலை சுகாதாரம், சுற்றுச்சூழல் - தொழில்முறை சுகாதாரம், ஆன்மீக உள நல சுகாதாரம் ஆகிய 5 தலைப்புக்களின் கீழ் கண்காட்சி!

தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை, யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள், தாய்மார் கழகங்கள் இணைந்து நடத்திய இளையோர் சுகநலக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நடை பவனிக்கும் என்பன வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் இன்று திங்கட் கிழமை (21) நடைபெற்றது.
தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் கவிஞர் அம்பி கலையரங்கில் மேடை நிகழ்வுகள் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பரா.நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், தங்கள் கடமைக்கு மேலதிகமாக சமூகத்துக்காக பணியாற்றுபவர்கள், கடமையை மாத்திரம் செய்பவர்கள், கடமையைக் கூட செய்யாதவர்கள் என்று மூன்று வகுதியினர் இருக்கின்றனர்.
இதில் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பரா.நந்தகுமார், முதலாவது வகைக்குள் அடங்குவார். அவர் தனது கடமைக்கும் அப்பால் சென்று இந்தச் சமூகத்தின் மேம்பாட்டுக்காக சிந்தித்து புத்தாக்கமாகச் செயற்படுகின்றார்.
அவரைப்போன்று இந்தச் சமூகத்துக்கு இப்போது அவசிய தேவையாகவுள்ள இவ்வாறான விடயங்களை ஏனையோரும் முன்னெடுக்கவேண்டும்.
தாய் சேய் நலம், உணவும் போசாக்கும், பாடசாலை சுகாதாரம், சுற்றுச்சூழல் - தொழில்முறை சுகாதாரம், ஆன்மீக உள நல சுகாதாரம் ஆகிய 5 தலைப்புக்களின் கீழ் கண்காட்சி முன்னெடுக்கப்படுகின்றது. இது இன்றைய காலத்துக்கு அவசியம் தேவை.
பாடசாலை சிறுவர்களின் எதிர்காலம் சவாலுக்குரியதாக மாறி வருகின்றது. அந்தச் சவாலை எதிர்கொள்ள இந்த விடயங்கள் உறுதுணையாக இருக்கும்.
அன்று வறுமையால்தான் போசாக்கின்மை எம்மிடத்தே தலைதூக்கியிருந்தது.
இன்று வசதிபடைத்தோரும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களின் உணவுப் பழக்கத்தை ஆக்கிரமித்திருக்கும் துரித உணவுகளால் இந்தப் பாதிப்பை எதிர்கொள்கின்றனர்.
எனவே, இன்றைய மாணவர்களுக்கு இவ்வாறான விழிப்புணர்வு கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை எதிர்காலத்தில் அவர்களிடம் விதைக்க முடியும்.
இன்றைய மாணவர்களின் மேம்பாட்டுக்காக, இளைய சமூகத்தை வழிப்படுத்துவதற்காக சுகாதாரத்துறையினர் மாத்திரமல்ல ஏனைய துறையினரும் ஒன்றிணையவேண்டும். ஏனெனில், இன்றைய பாடசாலை மாணவர்கள் மாலை நேரங்களில் விளையாடுவதென்பது குறைவு. ஒன்றில் தனியார் கல்வி நிலையம் அல்லது கைப்பேசியில் என்கின்ற நிலையிலேயே அவர்களது வாழ்க்கை இருக்கின்றது.
எனவே, இளையோரின் நலன் தொடர்பில் அதிக பொறுப்பு பெற்றோரிடமே இருக்கின்றது. பெற்றோருக்கும் ஆலோசனை வழங்கும் இவ்வாறான கண்காட்சிகள் இன்னமும் விரிவுபடுத்தப்பட வேண்டும், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் வைத்து தாய்மார் கழகங்கள் இடையில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற தாய்மார் கழகங்களுக்கான கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் வீதி விபத்துக்களில் இருந்து மீட்டெடுக்கும் விழிப்புணர்வுக்காக நடைபவனி தெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலிருந்து ஆரம்பமாகி, தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை வரையில் இடம்பெற்றது. அதன் பின்னர் அங்கு ஆளுநரால் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் கலந்துகொண்டனர்.
அவர்களுடன் யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரியின் அதிபர், வலி. வடக்கு பிரதேச செயலாளர், பிரதேச சபைத் தவிசாளர், யூனியன் கல்லூரியின் அதிபர் ஆகியோரும் பங்கேற்றனர்.