வெருகல் பிரதேசத்தில் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை; வெற்றுக் காணிகள் விடுவிக்கப்படும்
வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டிருந்து.

வெருகல் வட்டவன் பகுதியில் விவசாயிகளின் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொல்லியல் சின்னம் பாதுகாக்கப்படும் எனவும், கல்லடியில் வெற்றுக் காணிகளாக இருக்கின்ற பகுதி எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு விடுவிக்கப்படும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் பிரதேச பிரதி அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெருகல் பிரதேசத்தின் வட்டவன் மற்றும் கல்லடி பகுதிகளில் தொல்பொருளியல் திணைக்களத்தினால் தொல்லியல் சின்னங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கை வியாழக்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டிருந்து. இது தொடர்பான கள விஜயத்தின் பின்னர் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2025.07.17 அன்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்தி குழு கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைய இன்றைய தினம் (24) பிரதேச சபை தவிசாளர் சே.கருணாநிதி, பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், உதவி பிரதேச செயலாளர் திருமதி. துசிதீபா, தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் டபில்யூ.யு.எஸ்.பெரேரா, பிரதேச சபை செயலாளர் சாந்தகுமார், குடியேற்ற உத்தியோகத்தர் ந.கஜகோகுலன், உதவி வன ஜீவராசிகள் உத்தியோகத்தர் பி.ஜெகதீஸ்வரன், அடைவு வன நிலதாரி எம்.பி.எம்.அசாருதின், தொல்பொருள் திணைக்கள வலய உத்தியோகத்தர் ஜி.கிரிஷாந்த், கிராம அலுவலர் சாள்ஸ் அன்ரனி, கிராம அலுவலர் திருமதி ஜீவராணி ஆகியோர் குறித்த கள விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
பிரதேச செயலாளரினால் குறித்த களவிஜயம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா அவர்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் தொல்பொருளியல் இடமான வட்டவன் பகுதியில் பிரதான வீதிக்கு சுமார் ஒரு கிலோமீட்டரில் பாலக்காட்டு பகுதியில் உள்ளோக்கி செல்லும்போது மலைத்துடர் காணப்படுகின்றது இம்மலை தொடரில் அண்ணளவாக 12 இடங்களில் தொல்பொருள் அடையாளங்களான புராதன எழுத்துக்களும், குகைகளும் காணப்படுபட்டதை அவதானிக்க முடிந்தது எனவும், தொல்பொருள் அடையாளப்படுத்தப்பட்ட மலைத் தொடரை சுற்றியுள்ள எல்லைப் பிரதேசங்களில் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்கும் அதேவேளை நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது தொல்லியல் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளரினால் குறித்த கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 2025.08.14ஆம் திகதி நடைபெற இருக்கின்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு முன்னதாக விசேட தொழிற்ப குழுவினர் இவ்விடத்திற்கு அழைக்கப்பட்டு அடையாளப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன்போது பிரதேச மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரியப்படுத்தப்பட்டதுடன் உத்தேசமாக மலை உச்சியில் இருந்து அண்ணளவாக 50 மீட்டர் பகுதி சுற்றளவு உடைய இடங்களையே தொல்லியல்துறை ஒதுக்கமாக எல்லைப் படுத்துவதாக தெரியப்படுத்தப்பட்டதுடன் அதற்கு அப்பால் உள்ள பிரதேசத்தில் மக்கள் வழமை போன்று நெற்செய்கையில் ஈடுபட முடியும் என தீர்மானிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று கல்லடி பகுதியில் பாசன பப்பத விகாரையை சூழ தொல்பொருள் திணைக்களத்தினால் எல்லை கற்கள் இடப்பட்டு காணப்படுகின்றது. இப்பகுதியில் பயிர்ச்செய்கை பண்ணப்படும் காணிகளும் சிறிய பற்றை காடுகளும் காணப்படுகின்றது இதில் வேளாண்மை மற்றும் மேட்டுநில பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுவரும் காணியானது சுமார் 15 தொடக்கம் 20 ஏக்கர் வரையும் காணப்படுகின்றது. தொல்பொருள் திணைக்கள எல்லைக்குள் ஒருவருக்கு காணி அளிப்பு பத்திரமும் ஒரு நபருக்கு காணி அனுமதி பத்திரமும் காணப்படுவதாக குறித்த கிராம அலுவலரினால் தெரியப்படுத்தப்பட்டது.
இப்பிரதேசத்தில் பற்றை காடுகளாக காணப்படுகின்ற தொல்பொருளியல் திணைக்களம் எல்லை கற்கள் காணப்படும் பகுதிகள் தொல்பொருளியல் தடயங்கள் காணப்படுவதால் அப்பகுதியை விடுவிக்க முடியாது என்றும் அப்பகுதிக்கு அப்பால் வெற்று காணிகளாக காணப்படுகின்றதும் எல்லை கற்கள் இடப்பட்டுள்ள காணிகளை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தீர்மானத்தினை பெற்று தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்று தற்போது இடப்பட்டுள்ள எல்லை கற்களை பிடுங்கி குறித்த பகுதியை விடுவிக்க ஆவண செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.