இதுவரை எடுக்காத ஆக்ஷன் அவதாரம்: சூர்யாவின் அனல் தெறிக்கும் ’கருப்பு’!
நீண்டநாட்களாக சூர்யாவிடம் இருந்து ஆக்சன் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த திரைப்படம் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்பதை டீசர் காட்டுகிறது.

நடிகர் சூர்யாவின் 50-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் சூர்யா. இவரது 'சிங்கம்', 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்றை பெற்றன. அதன் பிறகு, சூர்யாவின் நடிப்பில் வெளியான 'எதற்கும் துணிந்தவன்', 'கங்குவா' போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. எனினும், கார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றது. இருந்தபோதிலும், சிங்கம், ஆறு, ஏழாம் அறிவு போல மிகப்பெரிய ஹிட், தற்போது வரை சூர்யாவுக்கு அமையவில்லை.
இந்நிலையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் சூர்யா நடித்து வந்தார். தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியாகி மிரட்டியுள்ளது. இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார் சூர்யா. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், ஆவேசமான வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருக்கிறார். ‘என் பேரு சரவணன், எனக்கு இன்னொரு பேரு இருக்கு’ என வசனத்துடன் சூர்யா அதகளமாக அறிமுகமாகிறார். டீசரின் ஆரம்பத்தில் காட்டப்படும் 'கருப்பு' பற்றிய அறிமுகக் காட்சியே அனல் தெறிப்பதாக உள்ளது.
டீசரில் உள்ள பல சீன்களும், ஷார்ப்பான எடிட்டிங்கும் இயக்குநர் ஹரியின் திரைப்படங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆக்சன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார் சூர்யா. நீண்டநாட்களாக சூர்யாவிடம் இருந்து ஆக்சன் படத்தை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த திரைப்படம் பெரிய ட்ரீட்டாக இருக்கும் என்பதை டீசர் காட்டுகிறது.
இத் திரைப்படத்தில் பல வருடங்களுக்கு பிறகு சூர்யா - த்ரிஷா ஜோடி இணைந்துள்ளது. இந்திரன்ஸ், நட்டி, அனகா மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். தற்போது கோலிவுட்டில் டிரெண்டிங்காக இருக்கும் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், இத் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கருப்பு திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் என தெரிகிறது.