வன்முறைகளை எதிர்கொள்ளும் பெண்கள், சிறுவர்களுக்காக நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறந்து வைப்பு!
இல்லங்களுக்கு வருகை தருபவர்களுக்கு ஒரு குறுகிய காலத்தில் அவர்களுக்கான வீடுகளிலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டு!

தற்போது நாட்டில் அதிகரிக்கும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளால் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்கு தற்காலிக பாதுகாப்பை வழங்குவதற்கு நுவரெலியாவில் தற்காலிக பாதுகாப்பு இல்லம் ஒன்றினை, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் திறந்துவைத்தார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இதற்கான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (29) நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் 10 மாவட்டங்களில் பாதுகாப்பு இல்லங்கள் இயக்கப்படுகின்றன. 11ஆவது மாவட்டமாக, நுவரெலியாவில் பாதுகாப்பு இல்லம் திறக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்கிற பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் இந்த இல்லம் முக்கியமாக தேவைப்படும். காரணம், வீட்டில் ஆண்கள் அல்லது வீட்டுத் தலைவர்களின் மதுபாவனை அல்லது போதைப்பொருள் பாவனையினால் விளையும் வன்முறையினால் பெண்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்த வண்ணமுள்ளது.
அதற்கான சிறந்த தீர்வாகவே இந்த பாதுகாப்பு இல்லங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறுவப்பட்டு வருகின்றன. இது ஒவ்வொரு பிரதேசங்களில் உள்ள பொலிஸாரின் உதவியுடன் இயங்கி வருகிறது.
இந்த பாதுகாப்பு இல்லத்தினை நம்பி வருபவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கி, வைத்திய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை, உளநல ஆலோசனை வழங்கி, மருத்துவம் பெற்றுக்கொள்ளும் வசதிகளும் உள்ளது.
இதனால் வாழும் வாழ்க்கையில் ஏதும் பிரச்சினை ஏற்படும்போது உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணங்களைத் தவிர்த்து, பெண்கள் தமது பாதுகாப்புக்காக இந்த இல்லங்களுக்கு வருகைதந்து, தங்களுடைய வாழ்க்கையை வாழ்வதற்கானதாக இந்த இல்லங்கள் அமையும்.
மேலும், இல்லங்களுக்கு வருகை தருபவர்களுக்கு ஒரு குறுகிய காலத்தில் அவர்களுக்கான வீடுகளிலோ அல்லது சமூகத்திலோ ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டு, அதற்கான சட்ட நடவடிக்கையும் இல்லத்தின் ஊடாக எடுக்கப்படும். அதன் பின்னர் அவர்கள் சமூகத்தில் ஆரோக்கியமான பிரஜையாக வாழலாம் என சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராச்சி, நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக செயற்பாட்டு மையத்தின் அலுவலகர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
தற்போது திறந்துவைக்கப்பட்ட தற்காலிக பெண்களுக்கான பாதுகாப்பு இல்லத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு மற்றும் அரச சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இயக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.