அடாவடித்தன அரசியலின் நவீன அடையாளம் லொஹான் ரத்வத்தே!
முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது 57வது வயதில் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தனது 57வது வயதில் சுகவீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.
லொஹான் போன்ற அடாவடிப் பேர்வழிகள் வாழ்ந்திருக்கும் காலத்திலேயே தங்கள் அராஜகங்களுக்கு தண்டனை பெற வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்த போதும் , சனத் நிஷாந்த ஆகட்டும், லொஹான் ஆகட்டும்.. அமைதியாக மரணித்துப்போகின்றார்கள்.
லொஹானைப் பொறுத்தவரை கெஹலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அளுத்கமகே போன்றவர்களைப் போன்று குறைந்த பட்சம் சில மாதங்கள் வரையேனும் சிறைச்சாலை வாழ்க்கையில் கூட சிரமப்படவில்லை என்பதுதான் பொதுமக்கள் மத்தியில் வெளிப்படும் பெரும் சோகத்தின் அடிப்படையாகும்.
ராஜபக்ஷ பரம்பரை போன்று ரத்வத்தை பரம்பரையும் சுதந்திரக் கட்சி சார்ந்த அரசியல் பின்புலத்தைக் கொண்டவர்கள். ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சியின் பின்னர் சுதந்திரக் கட்சியின் யுகம் மலர்ந்து சந்திரிக்கா அதிகாரத்துக்கு வந்தபோது, அந்த ஆட்சியில் சபுமல் குமாரயா என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டு இளவரசராக வலம் வந்தவர் தான் அனுருத்தை ரத்வத்தையாகும்.
சந்திரிக்காவின் ஆட்சியில் அனுருத்த ரத்வத்தை தான் அடுத்த பிரதமர் என்று வர்ணிக்கப்பட்டார். ஏனெனில் அந்தக் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ எல்லாம் சீந்துவாரற்ற அரசியல்வாதிகளாக இருந்தனர். மங்கள சமரவீர, எஸ்.பி. திசாநாயக்க, அனுருத்த ரத்வத்தை ஆகியோர் தான் அந்த ஆட்சியின் மும்மூர்த்திகள். அதிலும் மங்களவுக்கு பிரதமர் ஆசை இருக்காத நிலையில் அதற்கான போட்டி எஸ்.பி. திசாநாயக்க மற்றும் அனுருத்த ரத்வத்தைக்கு இடையில் தான் நிலவியது.
அவ்வாறான நிலையில் தான் மஹிந்த ராஜபக்ஷ தன் குள்ளநரிப் புத்தியை பயன்படுத்தி தன் போட்டியாளர்களை சுதந்திரக் கட்சியின் அரசியல் களத்தில் இருந்து சூட்சுமமாக அகற்ற காரியமாற்றினார். தனது அரசியல் குருவான அனுர பண்டாரநாயக்கவைப் பயன்படுத்தி அனுருத்த ரத்வத்தையின் புகழை சரிப்பதில் மஹிந்த ராஜபக்ஷ சாமர்த்தியமாக காய் நகர்த்தினார். அக்காலகட்டத்தில் அனுர பண்டாரநாயக்க, சுதந்திரக் கட்சி மற்றும் சந்திரிக்காவுடன் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் சங்கமித்திருந்தார்.
அக்காலகட்டத்தில் தான் அனுருத்தை ரத்வத்தையின் செல்லப் புதல்வர்களில் ஒருவரான முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தை, கொலைச் சம்பவமொன்றில் மாட்டிக் கொண்டார்.
பப்புவா நியூ கினியாவின் பிரபல ரகர் விளையாட்டு வீரரான ஜொயல் பெரேரா என்பவர் கடந்த 1997ம் ஆண்டில் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள கார்ல்டன் இரவு விடுதியில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். லொஹான் ரத்வத்தை மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் குறித்த கொலைச் சம்பவத்தில் தொடர்பு பட்டிருந்தனர். அதிலும் லொஹான் ரத்வத்தையின் கைத்துப்பாக்கியைக் கொண்டே ஜொயெல் பெரேரா படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
ஜொயெல் பெரேராவின் படுகொலை ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் , மறுபுறத்தில் சுதந்திரக் கட்சிக்குள்ளிருந்து கொண்டே அனுருத்த ரத்வதைக்கு குழிபறிக்கக் காத்திருந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பாக அமைந்தது.
ஜொயெல் பெரேராவின் படுகொலைச் சம்பவத்தில் லொஹான் ரத்வத்தைக்கு தொடர்பிருப்பதை குறித்து கண்டனக் குரல் எழுப்பிய எதிர்க்கட்சிகள், அனுருத்த ரத்வத்தை தனது (பாதுகாப்பு ராஜாங்க) அமைச்சுப் பதவியைக் கொண்டு அதனை மூடிமறைக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டின. ஆனாலும் தன் புதல்வனுக்கு கொலைச் சம்பவத்துடன் தொடர்பிருந்தால் அது குறித்து நீதியான விசாரணை நடைபெற தான் ஒருபோதும் தடையாக இருக்கப் போவதோ, குறுக்கீடு செய்யப் போவதோ இல்லை என்று அனுருத்த ரத்வத்தை வலியுறுத்தியிருந்தார்.
ஆனாலும் லொஹானுக்குப்பதில் வேறொருவர் ஜொயெல் பெரேராவின் கொலைச் சம்பவத்தில் தண்டிக்கப்பட்டார்.லொஹான் விடுவிக்கப்பட்டார்.
அரசாங்கம் தலையிட்டு, அமைச்சர் ரத்வத்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி வேறொருவரைப் பலிகொடுத்து ஜொயெல் பெரேரா கொலை வழக்கில் இருந்து லொஹான் ரத்வத்தையை அரசாங்கம் காப்பாற்றி விட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் குரல் எழுப்பியது. குறித்த கொலைச் சம்பவத்துடன் லொஹானுக்குத் தொடர்பிருப்பதாக அவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினர்.
கொலைக் குற்றச்சாட்டில் இருந்து விடுபட்ட பின்னர் லொஹான் ரத்வத்தை சற்று அடக்கியே வாசித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சிகள் அனுருத்த ரத்வத்தை தொடர்பில் வெளிப்படுத்திய கண்டனக்குரலும் அதற்கான காரணமாகும்.
இப்படியிருக்கையில் தான் 2001ம் ஆண்டு சந்திரிக்கா அரசாங்கம் ஆட்டம் காணத் தொடங்கியிருந்தது. அதற்கிடையே சுதந்திரக் கட்சியில் தனக்குப் போட்டியாளர்களாக இருந்தவர்களை கட்சிக்குள் தனிமைப்படுத்துவது அல்லது கட்சியை விட்டும் வெளியேற்றுவது என்ற மஹிந்தவின் தந்திர வலைக்குள் சிக்கிய சுதந்திரக் கட்சியின் அப்போதைய செயலாளர் எஸ்.பி. திசாநாயக்க, அன்றைய அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலருடன் கட்சி தாவி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். அந்த வகையில் மஹிந்தவின் ஒரு போட்டியாளர் தன் அரசியல் எதிர்காலத்துக்குத் தானே குழிபறித்துக் கொண்டார்.
(எஸ்.பி. திசாநாயக்க அன்றைக்கு கட்சி மாறி இருக்காது போனால் 2004ம் ஆண்டு அவரே பெரும்பாலும் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பார். சந்திரிக்காவின் பின்னர் அவரே ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டு, ஜனாதிபதியும் ஆகியிருப்பார். இடையில் அனுரபண்டாரநாயக்க குறுக்கிட்டிருந்தாலும் குறைந்த பட்சம் பிரதமர் பதவியையேனும் கைப்பற்றியிருப்பார். ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் கயிற்றை விழுங்கி கட்சி தாவி, அவராகவே தன் அரசியல் எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொண்டார்.)
இப்படியான நிலையில் 2001ம் ஆண்டு டிசம்பர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சி அதிகாரத்தை இழக்கப் போவது தெ ள்ளத் தெளிவாக விளங்கியிருந்தது. அந்தத் தேர்தலில் எப்பாடு பட்டேனும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற வாழ்வா சாவா போராட்டமொன்றை சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் எதிர்கொண்டிருந்தனர். அனுருத்த ரத்வத்தையும் அதற்கு விதிவிலக்கல்ல..
கண்டி மாவட்டத்தில் சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அனுருத்த ரத்வத்தையும் அவரது புதல்வர் லொஹான் ரத்வத்தையும் அடாவடி, அராஜக செயற்பாடுகளை தாராளமாக முன்னெடுத்திருந்தனர். அன்றைய பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவனான தம்மிக்க அமரசிங்க பகிரங்கமாகவே கண்டி மாவட்டத்தில் நடமாடித் திரிந்து அனுருத்த ரத்வத்தையின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவளித்திருந்தான்.
தம்மிக்க அமரசிங்கவும், லொஹான் ரத்வத்தையும் கூட்டிணைந்து எதிர்க்கட்சி ஆதரவாளர்களை மட்டுமன்றி அரசியல்வாதிகளையும் அச்சுறுத்தும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர். பாதுகாப்புப் படைகளில் முக்கிய விஐபிக்களின் பாதுகாப்புக்கு அமர்த்தப்பட்டுள்ள சிப்பாய்கள், விசேட அதிரடிப்படையின் முக்கிய நடவடிக்கைப் பிரிவு , ராணுவத்தின் முக்கிய பிரிவான கமாண்டோ படைப்பிரிவு என்பவற்றின் தெரிவு செய்யப்பட்ட சிப்பாய்கள் ஆகியோருக்கு மாத்திரமே வழங்கப்படும் மினி ஊஷி எனப்படும் குறுந்துப்பாக்கி , தனது தந்தையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி லொஹான் ரத்வத்தையின் மூலம் பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவன் தம்மிக அமரசிங்கவுக்கு வழங்கப்பட்டிருந்தது.
பாதாள உலகக்கும்பல் ஒன்றுக்கு அதிநவீன ஆயுதங்களை அரசியல்வாதியொருவர் வழங்கிய முதலாவது சந்தர்ப்பமாகவும் அதனைக் குறிப்பிடலாம்.
சந்திரிக்கா அதிகாரத்துக்கு வருவதற்கு மாத்திரமன்றி , அவரது ஆட்சியை அசைத்துப் பார்க்கும் அஸ்திரமாகவும் மாறிப் போயிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் ரவூப் ஹக்கீமை தங்களது முக்கிய எதிரியாக அனுருத்த ரத்வத்தை தரப்பு கருதிச் செயற்பட்டது.
அதன் காரணமாக ஹக்கீமின் வாக்குகளை கொள்ளையடிக்கவும் அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். வாக்களிப்பு தினத்தில் அதனைத் தடுக்க முயன்ற உடத்தலவின்னை முஸ்லிம் வாலிபர்கள் பத்துப் பேரை மிகக் கொடூரமான முறையில் கொன்றொழித்திருந்தார்கள். அவர்களுடன் சென்றவர்களில் காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லக் கூட விடாமல் அராஜகம் செய்தார்கள்
2001ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அனுருத்த ரத்வத்தையும் அவரது புதல்வர்களும் ஆடிய அராஜக ஆட்டம் காரணமாக கண்டி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. அந்தளவுக்கு கண்டி மாவட்ட வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் பணிகள் ஒரு போர்க்களத்தை ஒத்த தன்மையில் அமைந்திருந்தன.
உடத்தலவின்னை படுகொலைச் சம்பவத்தில் அனுருத்த ரத்வத்தை மற்றும் அவரது புதல்வர்களான லொஹான் ரத்வத்தை மற்றும் சானுக ரத்வத்தை ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். அதன் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
உடத்தலவின்னை படுகொலையுடன் அனுருத்த ரத்வத்தையின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அரசியல் வாழ்வும் அடியோடு ஸ்தம்பித்துப் போனது. அனுருத்தையின் பிரதமர் கனவு பகல் கனவாகவே முடிந்து போனது.
அனுருத்தையின் வீழ்ச்சியுடன் சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவின் எழுச்சி ஆரம்பமானது. கடைசியில் பிரதமர் பதவிக்கு கனவு கண்டவர்கள் எல்லாம் ஒதுக்கப்பட்டுப் போக எங்கோ ஒருமூலையில் கிடந்த மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரக் கட்சியின் வீழ்ச்சியின் பின் எதிர்க்கட்சித் தலைவராகி, அதன் வழி பிரதமராகி, கடைசியில் ஜனாதிபதிப் பதவியை இலகுவாக கைப்பற்றிக் கொண்டிருந்தார்.
அதற்கிடைப்பட்ட காலத்தில் ரகர் விளையாட்டின் ஊடாக மஹிந்தவின் புதல்வர்களுடன் அனுருத்த ரத்வத்தையின் புதல்வர்களும் நெருங்கிய நட்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதன் காரணமாக 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரத்வத்தையின் புதல்வர்கள் மஹிந்தவுக்கு ஆதரவளித்து அவரின் வெற்றிக்காக பாடுபட்டனர்.
மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் 2007ம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, உடத்தலவின்னை படுகொலை வழக்கில் இருந்து அனுருத்த ரத்வத்தை மற்றும் அவரது புதல்வர்களை விடுதலை செய்திருந்தார்.
அதன்பின் சிறிது காலத்தில் அனுருத்த ரத்வத்தை நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தார். பின்வந்த 2010ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அனுருத்தவின் புதல்வர் லொஹான் ரத்வத்தை அரசியலுக்கு வந்து, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானார்.
அன்று தொடக்கம் லொஹான் குடும்பத்திற்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கும் இடையில் ஒரு இறுக்கமான பிணைப்பு ஏற்படுகின்றது.
2015ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வியை அடுத்து மஹிந்த மற்றும் அவரது குடும்பத்தின் பாதுகாவலன் போன்று லொஹான் செயற்படத் தொடங்கினார்.
லொஹான் ரத்வத்தையின் புதல்வியொருவருக்கும் மஹிந்தவின் இளைய மகன் யோஷித்தவுக்கும் இடையில் காதல் காதல் தொடர்பொன்று நிலவியதாக அக்காலகட்டத்தில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. ஆனால் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. அதன் பின்னர் லொஹான் குடும்பம், ராஜபக்ஷ குடும்பத்தை விட்டும் சற்று ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டது. லொஹான் குடும்பத்துடன் ராஜபக்ஷ குடும்பம் திருமண பந்தத்தில் இணைந்திருந்தால் அது ரத்வத்தை-ராஜபக்ஷ குடும்பத்தின் வரலாற்றுத் திருப்புமுனை மிக்க இணைப்பாக இருந்திருக்கும்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் லொஹான் ரத்வத்தை மீண்டும் பேசுபொருளாகத் தொடங்கினார். கோட்டாவின் அரசாங்கத்தில் அவருக்கு சிறைச்சாலைகள் விவகார ராஜாங்க அமைச்சுப் பதவி கிடைத்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஜெயெல் பெரேரா படுகொலை மற்றும் உடத்தலவின்னை படுகொலைகள் மக்கள் மனங்களில் இருந்து மறந்து போயிருந்தது.
ஆனால் லொஹானின் செயற்பாடுகள் அவரது கடந்த காலத்தை மீண்டும் கிளற வைத்தன என்றால் அது மிகையாகாது.
பௌத்தர்களின் முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான ருவன்வெலிசாய மகாவிகாரையில் அதிகாலை வேளை குடிவெறியுடன் நுழைந்து அதிகார வெறியில் அவர் போட்ட ஆட்டம் ஊடகங்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
அதுவும் போதாதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் இலஙகைக்கு எதிரான பிரேரணை கலந்துரையாடப்பட்ட அதே காலகட்டத்தில் , அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த லொஹான் ரத்வத்தே, அங்கு தடுத்து வைக்கப்ட்டிருந்த அப்பாவித்தமிழ் அரசியல் கைதியொருவரை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்து அச்சுறுத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட சர்வதேச அழுத்தம் காரணமாக அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சுப் பதவியை ராஜினாமாச் செய்யுமாறு லொஹான் ரத்வத்தையிடம் கேட்டுக் கொண்டார். வேறு வழியின்றி அவரும் ராஜினாமாச் செய்ய , பல்வேறு தரப்பின் அழுத்தங்கள் காரணமாக கோட்டாபயவும் அந்த ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவர் சிறைச்சாலைகள் விவகார ராஜாங்க அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தான் தனது கள்ளக் காதலியின் ஆசைக்காக நள்ளிரவு நேரத்தில் குடிவெறியுடன் ஆயுதங்கள் சகிதம் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து கள்ளக் காதலியின் ஆசைக்காக தூக்குமேடையை காட்டுவதற்காக கூட்டிச் சென்றிருந்தார்.
அதே போன்று முன்னாள் அரசியல்வாதி குமார் பொன்னம்பலம் படுகொலை, வெலிகம W15 ஹோட்டல் மீதான துப்பாக்கிச் சூடு என்பவற்றிலும் லொஹான் ரத்வத்தைக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட போதும் அவற்றை நிரூபிக்க முடியவில்லை.
இப்படியாக பல்வேறு குற்றச் செயல்களின் குற்றவாளியாக சிறைச்சாலைக்குள் அடைபட்டு அணுஅணுவாக நொந்து இறந்திருக்க வேண்டிய ஒருவர் மருத்துவமனைக் கட்டிலில் சொகுசாக உயிரிழந்திருப்பது உண்மையில் கவலைக்குரிய விடயமே.
ஆனாலும் லொஹானின் சாவுடன் ரத்வத்தை குடும்பத்தின் அரசியல் சகாப்தம் முடிந்துவிட்டது.
இனி எஞ்சியிருப்பது ராஜபக்ஷ குடும்பத்தின் அரசியல் சாம்ராஜ்ஜியத்துக்குச் சாவு மணி அடிப்பது மட்டுமே. அதுவும் நம் வாழ்நாளிலேயே காணக்கிடைக்கும் என்று நம்பலாம்.
ஊர்குருவி