ஒரு முன்னாள் ஜனாதிபதி நீதியின் பிரகாரம் கைது!
நீதிமன்ற காவல் உத்தரவின் பேரில் கை விலங்கிடப்பட்டு பேருந்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இலங்கை வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதி நீதியின் பிரகாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதாவது மிஸ்டர் கிளீன் என்று பலராலும் அன்பாக அழைக்கப்பட்ட அல்லது பாராட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நீதிமன்ற காவல் உத்தரவின் பேரில் கை விலங்கிடப்பட்டு சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரது உடல் நிலையை கவனத்தில் கொண்டு சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதிகள் சம்மந்தமான சட்ட ஆவணம் சொல்கிறது அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி குற்ற கோவையின் பிரகாரம் கைது செய்ய முடியாது என்று.
ஆனால் ஜனாதிபதி பதவி இல்லாத காலத்தில் சட்டம் அதைத்தடுக்கும் எந்த வியாக்கியானத்தையும் முன்னிறுத்தவில்லை.
ஆகவே முன்னாள் ஜனாதிபதி மிஸ்டர் கிளீன் சட்ட விரோதமாக கைது செய்யப்படவில்லை. இருந்தாலும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு என்று அழைத்ததில் தற்போதைய அரசின் சூழ்ச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமை வார இறுதி நாள் என்பதால் நீதிமன்றம் சில முடிவுகளை பிற்போடலாம், அவசரப்படலாம் என்ற பலகாரணங்கள் உண்டு. மறுநாள் சனி ஞாயிறு வருவதால் பிணை கோரி விண்ணப்பித்தும் பலன் கிடைக்காது. இது தெரிந்தும் மிஸ்டர் கிளீன் குற்ற விசாரணைப்பிரிவினர் கொடுத்த நாளை மாற்றாமல் சென்றது தான் ஒரு முன்னாள் ஜனாதிபதி அதனால் தன்னை கைது செய்யமுடியாது என்ற நம்பிக்கை அடிப்படையில்.
அத்துடன் விசாரணை முடிந்து வெளியே வந்ததும் நாளை மறு நாள் அவர் நேபாளம், பிரித்தானிய போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டு இருந்தார். அது சரி இலங்கையில் அதிக வருமானம் கொண்ட ஒருவர்தான் மிஸ்டர் கிளீன். அவருக்கு என்று ஏராளம் சொத்துகள் உண்டு. பாசிக்குடா பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் பல மிஸ்டர் கிளீனுக்கு சொந்தமானது. அரசாங்க பணத்தில் தனிப்பட்ட பயணம் போனார் என்றும் அதனால் அரசுக்கு 15 மில்லியன் நட்டம் ஏற்பட்டது என்று கைது நடந்துள்ளது. அப்படி பார்க்கப்போனால் பெரும் ஊழல் பெருச்சாளிகள் வெளியே சுதந்திரமாக வலம் வருகிறார்கள்தானே என்று நாங்கள் யோசிக்கலாம்.
அண்மை நாட்களாக மீண்டும் இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம், பிரதமர் மற்றும் ஜனாதிபதி தரப்புக்குள் உட்பூசல் என்று பேச்சு அடிபடுகிறது. இதன் பின்னணியில் அயல் நாட்டு தலையீடு இல்லாமல் இல்லை. கடந்த மாதம் மிஸ்டர் ரணில் விக்கிரமசிங்க உட்பட பல அரச எதிர்த்தரப்பு ஆளுமைகளை அழைத்த அயல்நாட்டு தூதுவர் ஒருவர் மந்திர ஆலோசனை நடத்தியதையும் எப்படி ஆட்சி கவிழ்ப்பு ஒன்றை செய்ய முடியும் என்பதையும் மறுபக்கம் மிலிந்த மொரகொட முன்னை நாள் ஜனாதிபதி சந்திரிக்கா இணைந்த திட்டங்களை அரச புலனாய்வு மோப்பம் பிடித்திருந்தது.
இதன் பின்னணியில் தான் அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஒரு மக்கள் சந்திப்பில் பட்டும் படாமல் சொல்லி இருந்தார் சில செயலாளர்களிடம் விசாரணை முடிந்து உள்ளது. அதன் அடிப்படையில் சில கைதுகள் சட்டம் மூலமாக நடைபெறும் என்று. உண்மையில் மிஸ்டர் கிளீன் அயல்நாட்டு தூதரகத்தில் ஆட்சி கவிழ்ப்பு பற்றி ஆலோசனை செய்ததன் விளைவாகவே இந்த கைது நடைபெற்றதன் நோக்கம். யாராக இருந்தாலும் அரசுக்கு எதிராக செயற்பட்டால் கைதுகள் இடம்பெறும் என்பதை ஏனையவர்களுக்கு சொல்லாமல் சொல்லப்பட்டுள்ளது.
பெரும் குற்றவாளிகளான முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, மகிந்தராஜபக்ச, கோட்டபாய, சந்திரிக்கா, போன்றோருக்கு மறைமுகமாக சொல்லப்பட்ட செய்திதான் முன்னாள் ஜனாதிபதி மிஸ்டர் ரணிவிக்கிரமசிங்க கைது. இராஜதந்திர ரீதியாக இவரது கைது அதிர்வலைகளை ஏற்ப்படுத்தினாலும் ஏனைய நாடுகள் வாய்திறந்து கதைக்கமுடியாது. காரணம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சிறப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் நீதிமன்றம் தடுத்து வைத்தல் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை மீறி மற்ற நாடுகள் கதைப்பது ஒரு நாட்டின் சட்டத்துக்குள் மூக்கை நுழைப்பதாகும்.
இந்த கைது மூலம் இலங்கை மக்களுக்கு சொல்லப்பட்ட செய்தி சட்டத்தின் முன் யாவரும் சமன். எதிர்வரும் நாட்களில் இன்னும் பல உயர் மட்ட கைதுகள் நடைபெறப்போகின்றன. நீங்கள் ஆர்ப்பாட்டம் என்று கிளம்பி உங்கள் நாட்களை சிறையில் கழிக்காமல் வெளியே இருந்து மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே. அதை மட்டும் வேடிக்கை பாருங்கள் என்ற செய்தி சொல்லப்பட்டுள்ளது.