இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் தமிழக வீரர் ஜெகதீசன்: ரிஷப் பண்டிற்கு பதிலாக தேர்வு!
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், கோவையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டிக்கு, ரிஷப் பண்டுக்கு பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நாராயண் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் கோவையை சேர்ந்த வீரர் ஒருவர் இடம்பெறுவது முதன்முறையாகும்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் நேற்று முன்தினம் (ஜூலை 23) மான்செஸ்டரில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதல் நாள் போட்டி முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 264 ரன்கள் எடுத்திருந்தது.
இதனிடையே, இந்த ஆட்டத்தின் போது ரிஷப் பண்ட்டின் காலில் காயம் ஏற்பட்டதால், அவர் பாதியிலேயே வெளியேறினார். நேற்று நடந்த 2-வது நாள் ஆட்டத்தில் ரிஷப் பந்த் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்பட்ட நிலையில், அவர் பேட்டிங் செய்ய களமிறங்கியது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்டுக்கு பதிலாக தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த நாராயண் ஜெகதீசன் ?
ஜெகதீசன் தமிழ்நாட்டில் கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர். பிஎஸ்ஜி (PSG) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகம் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகத்தின் ரஞ்சி டிராபி அணியில் அறிமுகமாகி, முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார்.
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக விளையாடி வரும் அவர், 2016-17 ஆண்டுக்கான விஜய் ஹசாரே டிராபியில் தொடர் சதங்கள் அடைத்து, தமிழ்நாட்டிற்காக தனது லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் முதல் வீரராக உலக சாதனை படைத்தார். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியால் வாங்கப்பட்டார். ஆனால், தனது அறிமுக ஆட்டத்தை கடந்த 2020 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு அணிக்கு எதிராக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
ஜெகதீசனின் தந்தை சி.ஜெ. நாராயணும் கிரிக்கெட் வீரராக இருந்தவர். ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளராக விரும்பிய ஜெகதீசன், தந்தை மற்றும் பயிற்சியாளரின் ஆலோசனையின்படி விக்கெட்-கீப்பராக மாறினார்.