Breaking News
தென்னகத்தின் / தென்னவர்களின் முதல் குடைவரை கோயில் - பிள்ளையார்பட்டி.
.
.jpg)
தென்னகத்தின் / தென்னவர்களின் முதல் குடைவரை கோயில் - பிள்ளையார்பட்டி.
பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் அமைந்துள்ளது. இந்த ஊருக்குப் போனால் இது உண்மையில் குடைவரைக் கோயிலா என்றே சந்தேகம் வரும். அவ்வாறு பிற்கால கட்டிடங்கள் குடைவரையை மறைக்கின்றன. இதில் மூன்று சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்று துதிக்கையை வலமாக மடித்து, தொந்திக் கணபதியாக அமர்ந்துள்ள கணேசனார் உருவம். இடை வரையில் வெறும் தூணாகவும் மேல்பகுதி மட்டும் உடலாகவும் காணப்படும் லிங்கோத்பவர் உருவமும் உண்டு, இவை தவிர உள்ள ஹரிஹரன் சிற்பம் மிக அழகு வாய்ந்தது. இரண்டே கரங்கள்தான். பிரித்தறிய ஒண்ணா உருவம். தலைமுடியில் ஒருபுறம் சடையும், மறுபுறம் கிரீடமும் தாங்கி நிற்கிறது. நல்ல உருண்ட, எழிலார்ந்த முகம். மிகவும் பளுவான ஆடையை அரையில் அணிந்திருப்பது போன்ற காட்சி. இருமருங்கும் அவர்களது அடியார். பெரிய திருவடி ஒன்று, மாகாளன் ஒன்று எனக்காணப்படும்.
இந்தக் கோயிலில் ஆறாம் நூற்றாண்டு வட்டெழுத்து, 'எக்காட்டூர் கோன் பெருந்தசன் என்று எழுதப்பட்டுள்ளதாக ஓவியப்பாவை என்னும் நூலில் திரு. நாகசாமி அவர்கள் குறிப்பிடுகிறார். இவ்வெழுத்தின் அமைதியால் இது மகேந்திரன் காலத்திற்கு முற்பட்டதாய் இருத்தல் வேண்டும் என கணித்துள்ளனர். அது ஏற்புடைத்தாயின் மலையைக் குடைந்து கோயில் அமைக்கும் மரபு மகேந்திரனுக்கும் முந்திய தமிழகத்தில் உண்டு எனப்பெறலாம்.
சங்க காலத்திலேயே 'குன்றை உள்வெளியாக குடைந்த கோயில்' என்னும் பொருள்பட குன்றுக் குயின்றன்ன அந்தணர் பள்ளியும் - 474' என்று, மதுரைக்காஞ்சி கூறும், 'குயிலுதல்' என்றால் 'குடைதல்' என்று பொருள். தென்னகத்தில் பல்லவர்களின் ஆட்சி இருந்ததில்லை. அதற்கான சான்றுகளும் இல்லை. மண்டகப்பட்டில் குடைவரை உருவாகுவதற்கு முன்பாகவே இக்குடைவரை இங்கிருந்திருந்தாலும் அது அப்போது அவர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம். அப்படி ஒரு வேலை தெரிந்திருந்தாலும் அவர்கள் ஆட்சிப்பகுதின் முதல் குடைவரை என்று நாம் எடுத்துக் கொண்டதாக கருதலாம்.
பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு சிறிய கல்வெட்டு பல முக்கியமான கண்டுபிடிப்புகளுக்குச் சான்றாக இருப்பது பலருக்கு தெரியாமலிருக்கலாம்.
பிள்ளையார்பட்டிக் குடைவரை மிகவும் தொன்மையானது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இக்குடைவரை கி.பி. 7 ம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் அமைக்கப்பட்டது என்றும் அதிலுள்ள இரு கருக்கு(புடைப்பு)ச் சிற்பங்கள் பல்லவ மன்னர்களின் உருவங்கள் என்றும் அறிஞர்கள் கருதி வந்தனர். இச்செய்திகளையே கம்பன் அடிப்பொடி சா.கணேசன் 1955-ல் எழுதிய 'பிள்ளையார்பட்டித் தல வரலாறு' என்ற நூலின் முதற் பதிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன் பின்னர் தொல்லியல் அறிஞர் டாக்டர் இரா.நாகசாமி இக்குடைவரைச் சிற்பங்களை மீண்டும் நுணுக்கமாக ஆராய்ந்து பல்லவ மன்னர்களின் உருவங்கள் என்று தவறாகக் கருதப்பட்டவை ஹரிஹரர், இலிங்கோத்பவர் ஆகிய மூர்த்திகளின் சிற்பங்கள் என்றும், பாண்டிய நாட்டில் பல்லவர் ஆட்சி செய்ததாக வரலாறு இல்லாமையால், இக்குடைவரைக் கோயிலைப் பாண்டிய மன்னர்களே நிர்மாணித்திருக்க வேண்டும் என்றும், சிற்ப அமைதியின் அடிப்படையில் இக்குடைவரை பல்லவ மகேந்திரவர்மன் காலத்துக்கு முந்தையது என்றும் பல அரிய உண்மைகளை முதன்முதலாக வெளிப்படுத்தினார்.
இங்குள்ள கல்வெட்டு 1936 ல் மத்திய தொல்லெழுத்தியல் துறையினரால் முதன்முதலாகப் படியெடுக்கப்பட்டு பின்வருமாறு வாசிக்கப்பட்டுள்ளது : ( தேசிவிநாயகப் பிள்ளையார் குடவரை வாயிற்படிக்கு மேற்கே தாழ்வார அறைக்குத் தெற்கில் மேல்புறச் சுவரில் உள்ளது )
ஈக்காட்டூரு- க் கொற்றூரு (ஐஞ்) சன்
இக்கல்வெட்டு பழமையான வட்டெழுத்துகளில் உள்ளது என்றும் கி.பி. 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். இந்த வாசிப்பின் அடிப்படையில் ஈக்காட்டூர் என்பது தொண்டை மண்டலத்தில் ஈக்காட்டுக் கோட்டம் என்ற பகுதியில் இருந்திருக்கலாம் என்று சா. கணேசன் தம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் இவற்றை ஆய்வு செய்த திரு. ஐராவதம் மகாதேவன் அவர்கள் இதனை,
எருகாட்டூரு - க் கோன் பெரு பரணன்
என்று படித்து, எழுத்தமைதியிலிருந்து இக்கல்வெட்டு பல்லவ மகேந்திரவர்மன் காலத்துக்கும் முந்தையது என்றும் சுமார் கி.பி. 5 ம் நூற்றாண்டின் இறுதியில் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிடுகிறார். அதற்குப் பிறகு திரு. நாகசாமி அவர்கள் பிள்ளையார்பட்டிக்கு மீண்டும் சென்று அக்கல்வெட்டை நேரில் பார்வையிட்ட பின்னர் அதன் வாசகத்தைப் பின்வருமாறு திருத்தியமைத்தார் :
எருகாட்டூரு - க் கோன் பெருந் தசன்
எருக்காட்டூர் என்ற ஊரின் தலைவனாகிய பெருந்தச்சன் இக்குடைவரைக் கோயிலை எழுப்பிய சிற்பியாக இருக்கலாம் என்றும் இக்கல்வெட்டு சுமார் 6 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் கல்வெட்டியல் என்ற நூலில் (1972) அவருடைய கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பின்னர் இறுதியாக திரு. ஐராவதம் மகாதேவன் மற்றும் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகளும் இணைந்து நடத்திய கள ஆய்வில் இறுதியாக
எக் காட்டூரு- க் கோன் பெருந் தசன்
என்று படித்தனர். இதில் எக்காட்டூர் என்ற ஊரின் தலைவன் பெருந்தச்சன் என்பது கல்வெட்டின் பொருளாகும்.
• எருக்காட்டூர் :
எக்காட்டூர் என்பது எருக்காட்டூர் என்ற பழைய பெயரின் மரூஉ ஆகும். சங்க காலத்திலேயே இவ்வூர் இருந்தது என்பது எருக்காட்டூர் தாயங் கண்ணனார் என்ற புலவரின் பெயரிலிருந்து அறிகிறோம். புறநானூற்றைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா ஐயரவர்கள் எருக்காட்டூர் என்பது தஞ்சை மாவட்டத்தில் திருவாரூருக்குத் தென் மேற்கில் உள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அண்மைக் காலத்தில் மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பிராந்தியங்களில் கிடைத்துள்ள தமிழி, வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் இப்பெயர் பலமுறை காணப்படுவதால் இவ்வூர் பாண்டிய நாட்டில்தான் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இது பிள்ளையார்பட்டியின் பழைய பெயரா என்று உறுதியாகக் கூற முடியவில்லை. ஆயினும் எருக்காட்டூரைச் சேர்ந்த பெருந்தச்சன் பிள்ளையார்பட்டிக் குடைவரைக் கோயிலை எழுப்பியவன் என்ற வரலாற்று உண்மையை இக்கல்வெட்டிலிருந்து தெரிந்துக் கொள்ள முடிகிறது. சங்க காலத்தில் தாயங்கண்ணனார் என்ற புலவரை ஈந்த எருக்காட்டூர், சங்கம் மருவிய காலத்தில் தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயிலை நிர்மாணித்த சிற்பியையும் தந்துள்ளது என்ற பெருமைக்கும் உரித்தாகிறது.
• குடைவரை பாண்டியரின் பணியே :
அடுத்தபடியாக இக்கல்வெட்டு இக்குடைவரையின் தொன்மையை உறுதி செய்கிறது. வட்டெழுத்தின் தொடக்க நிலையில் உள்ள இக் கல்வெட்டின் எழுத்தமைதியிலிருந்து இது சுமார் கி.பி. 6-ம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்று சொல்ல முடியும். பாண்டிய மன்னன் சேந்தனின் வைகைப் படுகை கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லெழுத்தியல் மூதறிஞர் கே.ஜி.கிருஷ்ணன் அது கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது என்று நிறுவியுள்ளார். அக்கல்வெட்டுடன் ஒப்பிடும் போது, பிள்ளையார்பட்டிக் கல்வெட்டு குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டாவது முந்தையதாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வர வேண்டியுள்ளது. ஆகவே கி.பி. 6 ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் பாண்டிய மன்னரால் எழுப்பப்பட்ட தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் பிள்ளையார்பட்டியாகும்.
இறுதியாக தமிழ் எழுத்தியலில் இக்கல்வெட்டு அளித்துள்ள ஒரு முக்கியமான சான்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். கல்வெட்டு பொறித்த அரைத்தூணை நன்றாகக் கழுவித் துடைத்துப் பார்த்தபோது அதுவரை யாருமே பார்த்திராத புள்ளிகள் புலப்பட்டுள்ளன. எகர எழுத்தின் உட்புறத்திலும் மற்ற ஆறு மெய்யெழுத்துகளின் மேலும் இடப்பட்டுள்ள புள்ளிகள் பளிச்சென்று தென்பட்டதாக கூறுகிறார் ஐராவதம் மகாதேவன் அவர்கள்.
மெய்யின் இயற்கை புள்ளியோடு நிலையல்
எகர ஒகரத் தியற்கையுமற்றே என்று தொல்காப்பிய சூத்திரம் கூறியிருப்பினும் பழைய கல்வெட்டுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் புள்ளிகள் பெரும்பாலும் இடப்படவில்லை. பிள்ளையார்பட்டிக் கல்வெட்டில் புள்ளிகளைக் கண்ட பிறகு மேலும் கள ஆய்வு நடத்தி சித்தன்னவாசல், திருநாதர்குன்றம், பறையன்பட்டு போன்ற இடங்களில் உள்ள அதே காலத்திய கல்வெட்டுகளிலும் மெய்யெழுத்துகளின் மீதும் எகர ஒகரத்துடனும் புள்ளிகள் இடப்பட்டுள்ளதை எங்கள் அவர்கள் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
திருக்கோயில் கல்வெட்டுக்களில் இவ்வூரின் பெயர் கேரள சிங்கள வளநாட்டு கீழ்குண்டாற்று திருவீங்கைக்குடி என்றுள்ளது. இங்குள்ள சுவாமியின் பெயர் கேரள சிங்கள வளநாட்டு கீழ்குண்டாற்று திருவீங்கைக்குடி மகாதேவர் என்று அழைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கல்குன்றத்தைக் குடைந்து முற்காலப் பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஒரு கோயிலை தோற்றுவித்தனர். நுழைவுப்பகுதிக்கு எதிரே குடைவரை சுவரின் வலது பக்கத்தில் செதுக்கு உருவமாக தோற்றுவிக்கப் பெற்றவர்தாம் கற்பக விநாயகர் ஆவார். அவர்தம் பழம் பெயரோ கல்குன்றத்து ஈங்கைக்குடி தேசிவிநாயகர் என்பதாகும். இன்று அக்குடைவரையின் பிரதான தெய்வமாக விநாயகப்பெருமான் திகழ்ந்தாலும் அக்கோயிலின் மூலவர் லிங்கப் பெருமானேயாவார். இக் குடைவரைக் கோயில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது, திருவீங்கைக்குடி மகாதேவர் கிழக்கு நோக்கி அமைந்துள்ளார். நான்கு சதுரத் தூண்களும், கீழ்ப்புறம் இரண்டு அரைத்தூண்களும் விளங்க முன்மண்டபம் திகழ்கின்றது.
முன்மண்டபத்தினை அடுத்து நீண்ட குடைவரையும் அதன் மேற்குப்பகுதியில் கஜப்பிருஷ்ட அமைப்பில் கிழக்கு நோக்கி அமைந்த கருவறையும் உள்ளன. கருவறை சதுரம் அல்லது செவ்வக அமைப்பில் இல்லாமல் உட்புறம் குழைவு பெற்ற அரைவட்ட அமைப்பில் திகழ்வதே கஜபிருஷ்டமாகும். இது படுத்த நிலையில் திகழும் யானை ஒன்றின் பின்னுடல் போன்றதாகும். இக்கருவறையின் நடுவே மலையைக்குடையும்போதே அமைக்கப்பெற்ற ( பிரதிட்டை செய்யப்பெறாத ) லிங்கத்திருமேனி இடம் பெற்றுள்ளது. இம்மூர்த்தியைத்தான் இவ்வாலயத்துக் கல்வெட்டுக்கள் 'திருவீங்கைக்குடி மகாதேவர்' எனக் குறிப்பிடுகின்றன.
கோமார பன்மரான திருபுவன சக்கரவர்த்திகள் எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியன் கல்வெட்டில் தற்போது மூலவராக உள்ள விநாயகரின் பெயர் தேசி விநாயகர் பிள்ளையார் என்று குறிக்கப்பட்டுள்ளது. இவர், இடக்கரத்தை இடுப்பில் ஊன்றியவாறு வலக்கரத்தில் சிவலிங்கம் ஒன்றினை இப்பிள்ளையார் ஏந்தியுள்ளார். கால்களை மடித்து அமர்ந்த நிலையில் காணப்பெறும் இப்பெருமான் இடுப்பில் உதரபந்தத்தை (ஒருவகை ஆடை) தரித்துள்ளார்.
லிங்கப்பெருமான் திகழும் கருவறைக்கு வெளியே குடைவரை சுவரில் ஒருபுறம் ஹரிஹரர், கருடன் அதிகார நந்தி ஆகியோருடன் நின்ற கோலத்தில் உள்ள திருமேனியும், மறுபுறம் லிங்கோத்பவர் திருமேனியும் இடம் பெற்றுள்ளன. கி.பி.1225 ம் காலகட்டத்தில் இக்குடைவரைக் கோயிலுக்கு வெளியே அதனுடன் இணைத்து மருதங்குடி நாயனார் திருக்கோயில் என்ற மற்றொரு சிவாலயத்தை பாண்டிய அரசர்கள் எடுத்துள்ளனர். குறுநிலத்தலைவனான காங்கேயன் என்பான் கணபதியார்க்கு தன் பெயரில் காங்கேயன் சந்தி என்ற சிறப்புப் பூசைக்கு ஏற்பாடு செய்தான் என்பதை ஒரு கல்வெட்டு விவரிக்கின்றது.
ஈங்கைக்குடி மகாதேவர் திருக்கோயில் என்ற பெயரில் சிவாலயமாக இக்கோயில் திகழ்ந்தபோதும் கணபதிப் பெருமானுக்கு திருமேனி எடுக்கப்பெற்ற முதற்கோயில் என்பதால் இங்கு விநாயகர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தரப்பெறுவதும் தற்போதும் தொடர்கின்றன.
பிள்ளையார்பட்டிக்கு பிறகு சேந்தன் என்ற பாண்டிப் பெருமன்னன் தோற்றுவித்த 'மலையடிக் குறிச்சி' கோயில் உள்ளது. இதற்குப் பிறகு பல குடைவரைக் கோயில்கள் தோன்றியுள்ளன. அவற்றில் சிறப்பிடம் வகிப்பவை 'திருகோகர்ணம்'. திருமெய்யம், குடுமியாமலை, குன்றக்குடி, திருமலை, ஆனைமலை, அரிட்டாபட்டி, பரங்குன்றம், மலையடிப்பட்டி, பிரான்மலை போன்ற பல இடங்களில் உள்ள கோயில்களைக் குறிக்கலாம்.
மூதறிஞர்கள் ஆய்வுகளின் அடிப்படையில் இக்குடைவரையானது கி. பி. 6 - 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததும், தமிழகத்தின் முதல் குடைவரை கோயில் இதுவே என்றும் கருதப்படுகிறது.
• தகவல்கள் - ஓவியப்பாவை, தலவரலாறு, Varalaru.Com, குங்குமம், திருக்கோயில் கல்வெட்டுகள் .
• படங்கள் - தலவரலாறு நூல்.
நன்றி. இராமநாதபுரம் மாவட்ட வரலாற்று ஆர்வலர் சி. அபிஷேக் .