ஜனாதிபதி தேர்தலில் பிராச்சார நடவடிக்கைகளை ஆரம்பிக்காத வேட்பாளர்கள்
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 19 வேட்பாளர்கள் இதுவரை எவ்வித பிரசார நடவடிக்கைகளையும் ஆரம்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட நடத்தவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர் ஒருவருக்கு வாக்குச் சீட்டு அச்சடித்தல் உள்ளிட்ட தேவைகளுக்கான தேர்தல்கள் ஆணைக்குழு சுமார் ஒரு கோடி அல்லது ஒன்றரை கோடி ரூபாவை செலவிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பிரசாரம் செய்யாமை சிக்கலான நிலை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களில் ஒருவர் சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.
இதுவரை பிரசாரத்தில் ஈடுபடாத வேட்பாளர்களில் சுமார் பத்து (10) வேட்பாளர்கள் சுயேச்சையாக போட்டியிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்களில் சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் பயன்படுத்துவது குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மிகவும் நல்ல விடயம் எனவும் மேலும், தேர்தலில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.