“ருவாண்டா ஒரு திறந்த சிறை”: பிரித்தானிய அரசாங்கத்தால் மாற்றப்பட்ட ஈழத்தமிழர்கள் வேதனை
.
“ருவாண்டா ஒரு திறந்த சிறை” என பிரித்தானிய அரசாங்கத்தினால் ருவாண்டாவிற்கு மாற்றப்பட்ட ஈழத் தமிழ் அகதிகள் குழுவினர் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் தாம் உள்ளிட்டவர்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
பிபிசியிடம் பேசிய குறித்த நால்வரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் டியாகோ கார்சியா தீவில் இருந்து ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்த நால்வரும் இலங்கையில் துன்புறுத்தலுக்கு ஆளாகிய நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்களின் குழுவின் ஒரு பகுதியாக இருந்துள்ளனர்.
இவர்கள் டியாகோ கார்சியா தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் அவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில், பிபிசியிடம் பேசிய அவர்கள், “நாங்கள் வெளியே செல்ல மாட்டோம்,” என்றும் “எப்போதும் அச்சத்துடனேயே இருப்பதாகவும்” தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாகவும் தாம் உள்ளிட்டவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை உடைக்க முயற்சித்த நிகழ்வுகளையும் விவரித்துள்ளனர்.
ருவாண்டாவிற்கு அனுப்பப்பட்ட தமிழர்களில் ஒருவர் தற்கொலை முயற்சியைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் செவிலியர் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தார்.
இது குறித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிபிசி செய்தி வெளியிட்டிருந்தது.
பிரித்தானியாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குடியேறிகள் விவகாரம் சூடுபிடித்துள்ளது.
இதன்படி, ருவாண்டாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் பிரித்தானியாவின் திட்டத்தை கைவிடுவதாக பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சி கூறியுள்ளது.
ருவாண்டாவில் உள்ள தமிழர்கள் தொடர்பான வழக்குகள் “ஆழமானவை” என்பதுடன் “முறையாக விசாரிக்கப்பட வேண்டும்” என்று லிபரல் டெமாக்ராட்ஸ் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பசுமைக் கட்சியின் இணைத் தலைவர் கார்லா டெனியர் ருவாண்டா திட்டத்தை “தண்டனை” மற்றும் “மனிதாபிமானமற்றது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
டியாகோ கார்சியாவில் மொத்தம் 61 புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், புகலிடம் கோருவதற்கான கடினமான சட்டப் போராட்டத்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.