Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

"பிரான்ஸ் மக்களுக்கே பிரான்ஸ்" - பார்தெல்லாவின் கனவுகள்!

ஐரோப்பாவின் புகழ்பெற்ற 'திறந்த எல்லை' (Schengen) கொள்கைக்கும் வேட்டு வைக்கப்படலாம்.

பிரான்ஸ் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சூடுபிடித்திருக்கிறது. 29 வயதான இளம் புயல் ஜோர்டான் பார்தெல்லா, எலிசே மாளிகையை நோக்கிச் சீறிப் பாய, அவரது கையில் இருக்கும் மிக முக்கியமான ஆயுதம் ஒன்றுதான் - அது 'குடியேற்றக் கொள்கை'.
"பிரான்ஸ் மக்களுக்கே பிரான்ஸ்" என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து, பிரான்ஸை ஒரு நவீனக் கோட்டையாக மாற்றத் துடிக்கும் தேசிய முன்னணி (RN) கட்சியின் அதிரடித் திட்டங்கள், ஐரோப்பாவையே உற்று நோக்க வைத்துள்ளன. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் பிரான்ஸில் என்னவெல்லாம் மாறும்? இதோ ஒரு விரிவான பார்வை.

வரிசையில் முதல் இடம்: 'பிரெஞ்சுக்காரருக்கே!'
RN கட்சியின் ஆன்மாவே 'தேசிய முன்னுரிமை' (Priorité Nationale) தான். இதை அரசியலமைப்பிலேயே சேர்க்கத் துடிக்கிறார்கள். இதன் சாராம்சம் எளிமையானது ஆனால் வலிமையானது: "வேலை வேண்டுமா? வீடு வேண்டுமா? முதலில் பிரெஞ்சுக்காரர்களுக்குக் கொடுங்கள்!" ஒரே தகுதியுடன் ஒரு வெளிநாட்டவரும், ஒரு பிரெஞ்சு குடிமகனும் வேலைக்கு விண்ணப்பித்தால், சட்டம் பிரெஞ்சுக்காரரின் பக்கமே நிற்கும். அதேபோல, அரசாங்க வீடுகள் (Social Housing) மற்றும் சலுகைகளிலும் வெளிநாட்டவர்கள் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள்.

மண்ணில் பிறந்தால் மட்டும் போதாது!
பிரான்ஸின் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களில் ஒன்று 'மண்ணின் மைந்தன் உரிமை' (Droit du sol). அதாவது, பிரான்ஸ் மண்ணில் பிறக்கும் எந்தக் குழந்தையும் எதிர்காலத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெறலாம். ஆனால், பார்தெல்லா இந்த வரலாற்றைத் திருத்தி எழுத விரும்புகிறார். "பாரிஸில் பிறந்தாலும், உன் பெற்றோரில் ஒருவர் பிரெஞ்சுக்காரராக இல்லையென்றால், நீயும் அந்நியனே!" என்று முழங்குகிறது RN கட்சி. இதன் மூலம் தானாகக் கிடைக்கும் குடியுரிமைக்கு முற்றுப்புள்ளி வைக்கத் திட்டம் தயாராகிறது.

"ஆவணம் இல்லையா? வெளியேறு!"
ஆவணங்களின்றி வசிக்கும் மக்களுக்கு (Sans-papiers), பிரான்ஸ் இனி சொர்க்கபுரியாக இருக்காது. அவர்களைக் கண்டறிந்து உடனடியாக நாடு கடத்துவது ஒருபுறம் இருக்க, மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டு வந்த இலவச மருத்துவ உதவிக்கும் (AME) பூட்டு போடப்பட உள்ளது. "உயிர் போகும் நிலை என்றால் மட்டுமே சிகிச்சை; மற்றபடி வரிப்பணத்தில் மருத்துவம் கிடையாது" என்பதே இவர்களின் கறார் முடிவு.

குற்றம் செய்தால் 'பார்சல்' உறுதி
வெளிநாட்டவர்களுக்கு இனி 'இரட்டைத் தண்டனை' (Double Peine) காத்திருக்கிறது. பிரான்ஸில் வசிக்கும் வெளிநாட்டவர் ஒருவர் குற்றம் செய்தால்:
முதலில் பிரான்ஸ் சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
தண்டனை முடிந்ததும், சுதந்திரக் காற்று இருக்காது; விமான நிலையம்தான்! விசா ரத்து செய்யப்பட்டு, தாய் நாட்டிற்கே 'பார்சல்' செய்யப்படுவார்கள்.
மூடப்படும் எல்லைகள்
ஐரோப்பாவின் புகழ்பெற்ற 'திறந்த எல்லை' (Schengen) கொள்கைக்கும் வேட்டு வைக்கப்படலாம். பிரான்ஸின் எல்லைகளில் மீண்டும் சோதனச்சாவடிகள் முளைக்கும். அதேபோல், வெளிநாட்டில் இருக்கும் குடும்பத்தினரை அழைத்துவரும் 'குடும்ப இணைப்பு' (Family Reunification) விதிகளும் கடுமையாக்கப்பட்டு, புதியவர்கள் உள்ளே நுழைவது குதிரைக்கொம்பாக மாற்றப்படும்.

இருவேறு பிரான்ஸ்
ஜோர்டான் பார்தெல்லாவின் இந்தக் கொள்கைகள், "தங்கள் கலாச்சாரம் மற்றும் வேலைவாய்ப்பு பறிபோகிறது" என்று அஞ்சும் கிராமப்புற பிரெஞ்சு மக்களிடம் ஒரு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தியுள்ளன. அவர்களைப் பொறுத்தவரை பார்தெல்லா ஒரு மீட்பர்.
ஆனால், மறுபுறம், "சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்" என்று முழங்கிய பிரான்ஸின் ஆன்மா சிதைக்கப்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கொதிக்கின்றனர். இது ஒரு மனிதாபிமானமற்ற சர்வாதிகாரத்தின் ஆரம்பம் என்பது இடது சாரிகளின் எச்சரிக்கை.
பிரான்ஸ் தனது கதவுகளை இறுக்கமாக மூடப்போகிறதா அல்லது அனைவரையும் அரவணைக்கப் போகிறதா? 2027 தேர்தல் களம் தான் இதற்கான விடையை எழுதும்!

- சிவா சின்னப்பொடி