உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன!
நகரங்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி, "எங்கள் ஊர் கிறிஸ்துமஸ் மரம் தான் சிறந்தது" என்று நிரூபிக்கப் போட்டி போடுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் நகரங்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தி, "எங்கள் ஊர் கிறிஸ்துமஸ் மரம் தான் சிறந்தது" என்று நிரூபிக்கப் போட்டி போடுவது வழக்கம்.
அந்த வகையில், சுற்றுலாத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த 'சிவிடாடிஸ்' (Civitatis) நிறுவனம், இந்த ஆண்டு உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சிறந்த -10 கிறிஸ்துமஸ் மரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ், பிரேசில் முதல் இத்தாலி வரை ஜொலிக்கும் அந்த மரங்களைப் பற்றிய சுவாரஸ்யத் தொகுப்பு.
1. பாரிஸ், பிரான்ஸ்: சிவப்பு நாடாவில் சுற்றிய பரிசு
பிரான்ஸ் என்றாலே அழகுதான். பாரிஸில் உள்ள புகழ்பெற்ற 'கேலரிஸ் லஃபாயெட்' (Galeries Lafayette) வணிக வளாகத்தில், இந்த ஆண்டு 16 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்ட மரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இது 560 கிலோ எடையுள்ள சிவப்பு ரிப்பன்களால் (Ribbons) முழுமையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. தூரத்திலிருந்து பார்க்கும்போது, கிறிஸ்துமஸ் தாத்தா கொண்டு வந்த ஒரு ராட்சத பரிசுப் பெட்டியைப் போலவே இது காட்சியளிக்கிறது!
2. ரியோ டி ஜெனிரோ, பிரேசில்: நீரில் மிதக்கும் அதிசயம்
ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ரியோ நகருக்கு மீண்டும் அந்தப் பிரம்மாண்டம் திரும்பியுள்ளது! இங்குள்ள ஏரியில் மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் (Floating Christmas Tree) அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 80 மீட்டர் உயரமுள்ள இந்த உலோகக் கோபுரம், எல்.இ.டி (LED) விளக்குகளால் ஜொலிக்கும்போது, தண்ணீரில் அதன் பிம்பம் தெரிவது கண்கொள்ளாக் காட்சி.
3. குப்பியோ, இத்தாலி: மலையே மரமானால்?
இதுதான் இந்தப் பட்டியலிலேயே மிகவும் வித்தியாசமானது. இங்கே ஒரு மரத்தை நட்டு அலங்கரிக்கவில்லை; மாறாக, ஒரு மலையையே மரமாக மாற்றியிருக்கிறார்கள்! குப்பியோ நகரில் உள்ள 'இஞ்சினோ' மலையின் சரிவில் நூற்றுக்கணக்கான விளக்குகளைப் பொருத்தி, 750 மீட்டர் உயரத்திற்கு ஒரு கிறிஸ்துமஸ் மரம் போன்ற வடிவத்தை உருவாக்கியுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக இந்த வழக்கம் தொடர்கிறது.
4. நியூயார்க், அமெரிக்கா: வைர நட்சத்திரம்
நியூயார்க்கின் ராக்பெல்லர் சென்டரில் (Rockefeller Center) வைக்கப்பட்டுள்ள மரம் உலகப் புகழ் பெற்றது. 20 மீட்டர் உயரமுள்ள இந்த மரத்தின் உச்சியில், சாதாரண நட்சத்திரம் இல்லை; விலையுயர்ந்த ஸ்வரோவ்ஸ்கி (Swarovski) படிகங்களால் செய்யப்பட்ட 3 மீட்டர் நட்சத்திரம் ஜொலிக்கிறது.
5. வில்னியஸ், லிதுவேனியா: உலோக அழகி
லிதுவேனியாவின் தலைநகரான வில்னியஸில், 20 மீட்டர் உயரமுள்ள உலோகத்திலான கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டுள்ளது. மரம் மட்டுமல்ல, நகரெங்கும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வண்ண விளக்குகள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டுள்ளன.
6. ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்: கிறிஸ்துமஸ் தலைநகரம்
இந்தப் பட்டியலில் இரண்டு முறை இடம் பிடித்த ஒரே நாடு பிரான்ஸ்! பாரிஸைத் தொடர்ந்து, ஸ்ட்ராஸ்பர்க் நகரின் 'பிளேஸ் க்ளெபர்' (Place Kléber) சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மரம், ஐரோப்பாவின் மிகப் பழமையான சந்தையின் அழகைக் கூட்டுகிறது.
மற்ற முக்கிய இடங்கள்.
ப்ராக் (செக் குடியரசு): 24 மீட்டர் உயர மரத்தைச் சுற்றி இசை நிகழ்ச்சிகள் களைகட்டுகின்றன.
மெக்சிகோ சிட்டி (மெக்சிகோ): நகர சதுக்கத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுடன், அரசு அலுவலகங்களின் விளக்கு அலங்காரமும் சேர்ந்து ஜொலிக்கிறது.
புடாபெஸ்ட் (ஹங்கேரி): தேவாலயத்தின் மீது 3D லேசர் விளக்குகள் பாய்ச்சப்பட, அதன் முன்னே இந்த மரம் கம்பீரமாக நிற்கிறது.
மாட்ரிட் (ஸ்பெயின்): இயற்கையான மரம் இல்லை என்றாலும், இங்குள்ள செயற்கை மரம் மற்றும் 200 தெருக்களில் ஒளிரும் விளக்குகள் விழாக் கோலத்தை உருவாக்குகின்றன.
பரிசுகள் ஒருபுறம் இருக்கட்டும்; இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை, கண்களுக்கு விருந்து படைக்கும் வண்ண விளக்குகளின் திருவிழாவாக மாறியிருக்கிறது!


