'என் இனிய தமிழ் மக்களே' - பாரதிராஜா பேசிய தமிழ்த் தேசியம்!
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, மத்திய அரசு வழங்கிய பத்மஶ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக பாரதிராஜா அறிவித்தார்.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கைக்கு சென்று நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பாரதிராஜா.
'என் இனிய தமிழ் மக்களே!' என்று கம்பீர குரலால் தமிழக மக்களை அழைத்த இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று பிரியாவிடை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் பொதுவெளியிலும், மேடைகளிலும் தமிழ்த் தேசியத்தை தொடர்ந்து ஆணித்தரமாக முன்னெடுத்தவர் அவர். தமிழ் மொழி, நில உரிமை, ஈழத்தமிழர் விவகாரம் என தமிழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டே இருந்தார்.
"மொழி தான் இனம்; இனம் தான் நம் அடையாளம்"
பாரதிராஜா தனது பெரும்பாலான மேடைகளில், "மொழி அழிந்தால் இனம் அழியும். இனம் அழிந்தால் நம் அடையாளம் அழியும்" என்பதை தீவிரமாக வலியுறுத்தினார். தமிழ் மொழி என்பது வெறும் தகவல் தொடர்புக்கான ஊடகம் அல்ல. அது தமிழர்களின் மூச்சு, பண்பாடு, மற்றும் உரிமை என்பதை தனது 'என் இனிய தமிழ் மக்களே' என்ற முழக்கத்தின் வழியாக வாழ்நாள் முழுவதும் பரப்பிக் கொண்டே வந்தார்.
"மண்ணின் அதிகாரம் மண்ணின் மைந்தர்களுக்கே"
தமிழகத்தின் மிக முக்கியமான விவாதப் புள்ளியாகத் திகழ்ந்த "மண்ணின் மைந்தர்கள்" என்ற கோட்பாட்டை அவர் சமரசமின்றி பேசினார். தமிழகத்தை ஆளக் கூடிய தகுதியும், உரிமையும் இங்கு பிறந்து, இந்த மண்ணின் வலியை உணர்ந்த ஒரு தமிழனுக்கு மட்டுமே உண்டு என்றும், பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தின் தலைமையை ஏற்பதை ஏற்க முடியாது என்றும் வெளிப்படையாக முழங்கினார்.
ஈழ விடுதலை போராட்டம்
"ஈழத் தமிழர்களின் போராட்டம் என்பது ஏதோ கடல் கடந்து நடக்கும் ஒரு விஷயம் அல்ல. அது நம் தொப்புள்கொடி உறவுகளின் வாழ்வுரிமைப் போராட்டம்" என்று உரக்க முழங்கியவர் பாரதிராஜா.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்த பிறகு, தமிழ்த் தேசிய உணர்வை உலகெங்கும் கொண்டு சேர்ப்பதை தனது தார்மீகக் கடமையாக மாற்றி, ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக சர்வதேச அரங்குகளை நோக்கித் தனது குரலை உயர்த்தினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழீழ கோட்பாடுகளில் உறுதியாக நிற்பதற்கு அவரது ஆசான் பாரதிராஜாவே காரணம்.
தலைவர் பிரபாகரனுடன் சந்திப்பு
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இலங்கைக்கு சென்று நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் பாரதிராஜா. 2000-களின் தொடக்கத்தில் ஈழத்திற்கு சென்ற பாரதிராஜா, அங்கு விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களை சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து பாரதிராஜா நேர்காணல்களில் பகிர்ந்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
அந்த நேர்காணலில், "ஈழத்திற்குச் சென்ற போது விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் என்னை வரவேற்று அழைத்து சென்றார். என்னை கண்டவுடன் பிரபாகரன் அனைத்து விதமான பாதுகாப்பு நடைமுறைகளையும் தளர்த்திவிட்டு, ஓடி வந்து கட்டியணைத்து அன்போடு வரவேற்றார்.
பிரபாகரனுடன் மட்டுமல்லாமல், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களான தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், கடற்புலிகள் தலைவர் சூசை ஆகிய நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து நீண்ட நேரம் பேசும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது" என்று பாரதிராஜா பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், "ஈழத் தமிழர்களின் உண்மை வாழ்வியலையும் அவர்களின் போராட்டத்தையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் "ஈழப் பிரச்சனை குறித்து ஒரு திரைப்படம் இயக்க வேண்டும்" என்று பிரபாகரன் என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். அதற்கு நானும் சம்மதம் தெரிவித்திருந்தேன்" என்றும் கூறியுள்ளார்.
" 'மண்வாசனை திரைப்படம் வெளியானபோது மதுரையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்போதே உங்களைச் சந்திக்க முயற்சித்தேன். பின்னொரு முறை வீரமணி அண்ணனிடம் சொல்லி சந்திக்க முயற்சித்தேன். முடியாமல் போய்விட்டது. நான் உங்கள் ரசிகன். நீங்கள் வருகிறீர்கள் என்றதும் உங்களிடம் பேசுவதற்காக நீங்கள் இயக்கிய ‘கண்களால் கைது செய்’ திரைப்படம் வரை அத்தனையும் பார்த்தேன் என்றார் பிரபாகரன்' " என்று பாரதிராஜா அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும், தமிழீழ விடுதலைக்காக முத்துகுமார் உயிர் தியாகம் செய்தபோது, இனி வெளியாகும் தமிழ் திரைப்படங்களில் 'கரும்புலி முத்துக்குமாருக்கு சமர்ப்பணம்' என்ற வாசகத்தை இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற முக்கியமான கருத்தை பாரதிராஜா முன்வைத்தார்.
தமிழர் உரிமைப் போராட்டங்கள்
நெய்வேலி போராட்டக் களம் போன்ற இடங்களில் பாரதிராஜா பேசிய தமிழ் தேசியம் என்பது மிகத் தீர்க்கமானது. "எங்கள் விவசாயிகளின் நிலங்களை வறட்சியாக்கி தண்ணீர் விட மறுக்கும் அண்டை மாநிலங்களுக்கு, எங்கள் தமிழ் மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியால் உற்பத்தியாகும் மின்சாரம் எதற்கு?" என்று கேள்வி எழுப்பி, தமிழர்களின் வளங்கள் தமிழர்களுக்கே முதலில் பயன்பட வேண்டும் என்ற முழக்கத்தை முன் வைத்தவர் பாரதிராஜா.
தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை
இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் 2018-ல் தொடங்கப்பட்ட ஒரு சமூக, அரசியல் அமைப்பே 'தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை'. தமிழர்களின் கலை, பண்பாடு, மொழி மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளை பாதுகாப்பதே முதன்மையான நோக்கம் என்று இந்த அமைப்பு அறிவித்திருந்தது. இந்த அமைப்பில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், தங்கர்பச்சான், கௌதமன், சேரன் மற்றும் நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட தமிழ்த் தேசியச் சிந்தனையுடைய முன்னணித் திரையுலகினர் ஒருங்கிணைந்தனர்.
சாதி, மதம் மற்றும் கட்சி எல்லைகளை கடந்து, "தமிழன்" என்ற ஒற்றை அடையாளத்தின்கீழ் ஒட்டு மொத்தத் தமிழர்களும் தங்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டும் என்று தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை முழங்கியது. தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் விவசாய பாதிப்புகளுக்கு எதிராக இந்த இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் முக்கியமானது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம். இந்த போராட்டத்தில் திரையுலகினரையும் பொதுமக்களையும் பெருமளவு திரட்டி பங்கேற்க வைத்தது தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை.
2018-ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தமிழகமே போராடிக் கொண்டிருந்தபோது, சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதற்கு எதிராக இந்த அமைப்பு தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தது. மேலும், தமிழ் மொழியின் மீதான பிற மொழி ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. கீழடி அகழ்வாராய்ச்சி, ஜல்லிக்கட்டு போன்ற தமிழர்களின் வரலாற்று அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சிகளுக்கு பாரதிராஜா தொடங்கிய தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை ஆதரவளித்தது.
பத்மஶ்ரீ விருதை திருப்பி அளித்தவர்
பாரதிராஜாவின் கலைத்திறமையை, விருதுகளாலும் பாராட்டுகளாலும் ஒரு போதும் கௌரவிக்க முடியாது. அவர் தனக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ விருதை திருப்பி வழங்கி இருக்கிறார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டு போரின் போது, தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதனை தடுக்க அப்போதைய மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக கூறிய திரையுலகினர் கண்டன போராட்டங்களை முன்னெடுத்தனர். அந்த போராட்டத்தின் நிறைவில், தனது எதிர்ப்பை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் விதமாக, தனக்கு 2004-ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கிய 'பத்மஶ்ரீ' விருதை திருப்பி அளிப்பதாக பாரதிராஜா அறிவித்தார்.
தமிழீழ ஆதரவு
இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின் போது, தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட காலகட்டத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அந்நாட்டு அரசிற்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு நிலவியது. 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறை தமிழில் திரைப்படமாக எடுக்க கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முயற்சியும் நடந்தது. '800' என பெயரிடப்பட்ட அந்த திரைப்படத்தில் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று பகிரங்கமாக கடிதம் எழுதினார் பாரதிராஜா. அதன் பிறகு அந்த படத்தில் நடிக்கும் முடிவை கைவிட்டார் விஜய் சேதுபதி.
பழந்தமிழர் பண்பாட்டை சித்தரித்தவர்- வைகோ புகழாரம்
பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, "நான் ஈழ உணர்வு கொண்ட மாமனிதன் பாரதிராஜாவின் பரம ரசிகன்" என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், "திரையுலகின் ஈடிலா பேரொளி அணைந்துவிட்டாலும், அவர் தமிழ் இனத்திற்குச் செய்த சேவைகளை எப்போதும் மறக்க முடியாது. அவர் உயிருடன் இல்லை என்றாலும், அவரது கம்பீரமான குரலில் ஒலித்த 'என் உயிரினும் இனிய தமிழ் மக்களே' என்ற வார்த்தை தமிழ் உலகிலும், திரையுலகிலும் என்றென்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்" என்றார்.
தொடர்ந்து பேசிய வைகோ, "தமிழ் கலை உலகிற்கு கிராமத்து மண்வாசனை, அந்த மண்ணின் வீரம், சுயமரியாதை மற்றும் தமிழர்களின் தொன்மையான பண்பாட்டைத் திரையில் கொண்டு வந்து புதியதொரு உலகத்தை படைத்தவர் பாரதிராஜா" என்று புகழாரம் சூட்டினார்.
தமிழ் திரைப்பட அடையாள மீட்பு
தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்ற வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தியவர் பாரதிராஜா. அவர் பேசிய தமிழ்த் தேசியம் பற்றி, அவருடைய உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்திய அமைச்சர் வன்னி அரசு குறிப்பிட்டார். அமைச்சர் வன்னி அரசு பேசும் போது, "தமிழ் திரையுலகில் புதிய திசைவழி போக்கை உருவாக்கியவர் பாரதிராஜா. தென்னிந்திய நடிகர் சங்கத்தை "தமிழ்நாடு நடிகர் சங்கம்" என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியவர். தமிழ்நாடு என்ற அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்றும் விரும்பியவர்.
தமிழ் தேசியத்தை முன்னெடுத்தவர். தமிழ் ஈழ விடுதலையிலும் அக்கறை கொண்டவர். தனது படைப்புகளில், சாதிய கட்டமைப்புகளை உடைத்தவர். புதிய வார்ப்புகள் படத்தில் சமூக மாற்றத்தை பேசியவர். வேதம் புதிது திரைப்படத்தை இன்று எடுத்தால் வெளியிட முடியுமா? என்பது சந்தேகம் தான். 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், ஈழத்தமிழர் விடுதலைக்காக உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குமாரின் தியாகத்தைப் போற்றும் வகையில், இனி வெளியாகும் தமிழ்த் திரைப்படங்களின் தொடக்கத்தில், "இத்திரைப்படம் கரும்புலி முத்துக்குமாருக்கு சமர்ப்பணம்" என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என்று திரையுலகினரை பாரதிராஜா கேட்டுக் கொண்டார்.
பாரதிராஜாவின் இந்த முன்மொழிவை ஏற்றுக் கொண்டு, அப்போது வெளியான ஒரு சில தமிழ்த் திரைப்படங்களில் முத்துக்குமாருக்குச் சமர்ப்பணம் செய்யும் அந்த வாசகங்கள் தொடக்கத்தில் இடம்பெற்றன. தமிழ் திரைப்படங்களில் தமிழர் உரிமை, தமிழ்நாட்டின் அடையாளம், தமிழ் நிலத்தின் உணர்வை வெளிப்படுத்தியவர்" என்று வன்னி அரசு புகழாரம் சூட்டினார்.


