சர்வதேச மாணவர்கள் குறைந்ததால் பல பாடப்பிரிவுகளை மூடும் கனேடிய கல்லூரி!
ஆசிரியர்கள் உட்பட சுமார் 35 ஊழியர்கள் பணியிழக்கும் நிலை உருவாகியுள்ளது.

கனேடிய மாகாணமொன்றில், புலம்பெயர்தல் கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்ற ஆண்டு, வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தது நினைவிருக்கலாம்.
கனடாவின் Prince Edward Island மாகாணத்தில் புலம்பெயர் கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் தங்கள் எதிர்காலமே கேள்விக்குறியானதால், அந்த கொள்கை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்திய மாணவர்கள் உட்பல வெளிநாட்டு மாணவர்கள் பலர் 2024ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் திகதி முதல் உண்ணாவிரதம் இருந்துவந்தார்கள்.
ஆனால், அந்த விடயம் அப்படியே மறக்கப்பட்டு போனது. என்றாலும், மாணவர்களை அலைக்கழித்ததன் விளைவை அந்த மாகாணத்திலுள்ள கல்லூரிகள் அனுபவிக்கத் துவங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
ஆம், Prince Edward Island மாகாணத்திலேயே பிரபலமான, பெரிய கல்லூரியான Holland கல்லூரி, சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பல பாடப்பிரிவுகளை மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளது.
800 வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலைமை மாறி, 2026ஆம் ஆண்டில், வெறும் 140 வெளிநாட்டு மாணவர்கள் மட்டுமே கல்லூரியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 83 சதவிகித குறைவு ஆகும்.
அதனால், ஆசிரியர்கள் உட்பட சுமார் 35 ஊழியர்கள் பணியிழக்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, வேறு வழியில்லாமல், அந்தக் கல்லூரியில் செயல்பட்டுவந்த எட்டு பாடப்பிரிவுகள் நீக்கப்பட உள்ளன.