தோட்ட நிர்வாகங்களின் தலையீடு மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களும் இழப்பீடுகளும் முழுமையாக கிடைக்காமல் இருப்பது பெரும் கவலை!
சிங்கள மொழி படிவங்களில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கையெழுத்துகளை பெற்றுச் சென்றுள்ள கிராம சேவையாளர்!
நாடு முழுவதும் இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டு வரும் நிலையில், அரசாங்கம் பல்வேறு நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி, பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள்கட்டியெழுப்ப முயற்சி செய்து வருகிறது. எனினும், அந்த நிவாரணங்கள் பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம அலுவலர்கள் ஊடாக முறையாக வழங்கப்பட வேண்டிய நிலையில், சில அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அக்கரப்பத்தனை, வேவர்லி தோட்டத்தில் 18.12.2025 அன்று மேற்கொள்ளப்பட்ட பார்வையின் போது, வேவர்லி தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்த 11 குடும்பங்களைச் சேர்ந்த 48 பேரை சந்திக்க முடிந்தது. இவர்கள் கடந்த 28.11.2025 அன்று ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள். ஆரம்பத்தில் 27 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேர் தங்கவைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளநீர் வடிந்த பின்னர் கிராம சேவையாளரின் அறிவுறுத்தலின் பேரில் பெரும்பாலானோர் தங்களது வீடுகளுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர்.
வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் ரூ.25,000 நிவாரணத்திற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதும், இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். அதேவேளை, உணவுப் பொருட்களுக்கான கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், சிறுவர்களுடன் தங்கியிருக்கும் குடும்பங்கள் உணவு பற்றாக்குறையால் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மலசல கூட வசதிகள் இல்லாததால் தொழிலுக்குச் செல்லும் பெரியவர்களும், பாடசாலைக்குச் செல்லும் 19 பிள்ளைகளும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர்.
அனர்த்த காலங்களில் நிவாரணங்களை விரைவாக வழங்கும் நோக்கில், அதிகாரிகள் நேரடியாக உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்காக பிரதேச செயலாளர்களுக்கு ரூ.50 மில்லியன் வரை நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு முகாம்களில் இருந்து வெளியேறி சுயமாக சமைக்கக்கூடிய நிலையில் உள்ள குடும்பங்களுக்கு வாராந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படுகின்றன. 2025 நவம்பர் 30 அன்று அறிவிக்கப்பட்ட திருத்தங்களின்படி, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்திற்கான வாராந்த உதவி ரூ.3,600 இலிருந்து ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும், இவ்வாறான அறிவிப்புகள் இருந்த போதும், வேவர்லி தோட்டத்தில் தங்கியுள்ள மக்களுக்கு இந்த நிவாரணங்கள் முறையாக கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 28.11.2025 அன்று மட்டும் கிராம சேவையாளர் 50 கிலோ அரிசி மற்றும் சில உலர் உணவுப் பொருட்களை வழங்கியதாகவும், அதன் பின்னர் அரசாங்கத்தின் மூலம் எந்தவிதமான உணவுப் பொருட்களும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். தனிநபர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கிய உதவிகளையே இதுவரை நம்பி வாழ்ந்ததாகவும், தற்போது அந்த உதவிகளும் குறைந்து வருவதாகவும் கூறினர். இதுவரை இழப்பீட்டிற்கான எந்தவிதமான படிவங்களும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், தன்னார்வ அமைப்புகள் வழங்கிய உதவிகளுக்கான பணத்தை பிரதேச செயலகத்திலிருந்து பெற்றுக்கொண்டதாக கிராம சேவையாளர் கூறியிருந்த நிலையில், அந்த அமைப்பின் பிரதிநிதியுடன் மேற்கொண்ட தொலைபேசி விசாரணையில், எந்தவிதமான பணமும் பெறப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
இதற்கிடையில், 23.12.2025 அன்று குறித்த இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர், மக்கள் தங்கியிருந்த தொழிற்சாலைக் கட்டிடத்தை விட்டு வெளியேறி தங்களது வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும், கிறிஸ்மஸ் கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளதால் வேறு இடத்தில் தங்குமாறு தோட்ட நிர்வாகம் அறிவித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை எழுத்து மூலமாக அறிவிக்குமாறு கேட்டபோதும், அதற்கான எந்த ஆவணமும் வழங்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் 23.12.2025 அன்று வருகை தந்த கிராம சேவையாளர், திகதி கூட குறிப்பிடப்படாத சிங்கள மொழி படிவங்களில் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து கையெழுத்துகளை பெற்றுச் சென்றுள்ளார் என்றும், அங்கிருந்த மக்களுக்கு சிங்கள மொழி வாசிக்கத் தெரியாத நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வேவர்லி தோட்ட மக்கள் பிரதேச செயலாளருக்கு எழுத்து மூல முறையீடு செய்துள்ளதுடன், ஜனாதிபதி செயலகம், உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றுக்கும் புகார் அளித்துள்ளனர்.
மலையகத்தின் பல பகுதிகளிலும் இதே போன்ற நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் நிவாரணங்களை வழங்கி நாட்டை விரைவாக மீள்கட்டியெழுப்ப முயற்சித்து வரும் நிலையில், சில அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை, தோட்ட நிர்வாகங்களின் தலையீடு மற்றும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களும் இழப்பீடுகளும் முழுமையாக கிடைக்காமல் இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என வேவர்லி தோட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.


