இணையத்தில் 'ஜனநாயகன்' வெளியானது ஒட்டுமொத்த சினிமாவே அச்சப்பட வேண்டிய விஷயம் - கார்த்திக் சுப்புராஜ்
எந்த படமாக இருந்தாலும், வெளியீட்டிற்கு முன்போ அல்லது வெளியீட்டிற்குப் பிறகோ திருட்டுத்தனமாக வெளியாவதை தவிர்க்க வேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கேட்டுக் கொண்டார்.
’ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் வெளியானது ஒட்டு மொத்த சினிமாவே அச்சப்பட வேண்டிய விஷயம் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார். சோமீதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா, சனந்த் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’நீளிரா’. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ராணா டகுபதி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள நீளிரா திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. இலங்கை உள்நாட்டு போரை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள நீளிரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் இலங்கை வவுனியா பகுதியில் நீளிரா திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ’ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் கசிந்தது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ஜனநாயகன் திரைப்படத்தை திருட்டுத்தனமாக வெளியிட்டது மிகவும் தவறான, கேவலமான செயல். அதோடு இது ஒரு கிரிமினல் நடவடிக்கை. எந்தப் படமாக இருந்தாலும் சரி, வெளியீட்டிற்கு முன்போ அல்லது வெளியீட்டிற்குப் பிறகோ திருட்டுத்தனமாக வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். ஒட்டுமொத்தத் திரையுலகமும் இதை தான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது.
குறிப்பாக, விஜய் போன்ற ஒரு பெரிய நட்சத்திரத்தின் பெரிய பட்ஜெட் படத்திற்கு இப்படி நடப்பது என்பது ஒட்டுமொத்த சினிமாவே அச்சப்பட வேண்டிய விஷயமாகும். இதனை திரையுலகமும், ரசிகர்களும் இணைந்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்” என கேட்டுக் கொண்டார். விஜய் நடித்துள்ள ’ஜனநாயகன்’ திரைப்படம் நேற்று இணையதளத்தில் கசிந்தது. இது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும் ஜனநாயகன் படக் காட்சிகளை இணையதளத்தில் பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படத்தை தயாரித்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜனநாயகன் படத்தை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா உள்ளிட்ட முக்கிய திரைப் பிரபலங்கள் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் ‘ஜனநாயகன்’. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ’ஜனநாயகன்’ திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் தற்போது வரை வெளியாகாமல் உள்ளது.


