இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ''Team Bison'' அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம்!
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும்,
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ''Team Bison'' அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride - Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' மற்றும் 'ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி' ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், உள்ளூர் துவிச்சக்கரவண்டிப் பயண அணியினரும் இணைந்து கொள்ளவுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து இந்த அணியினர் இன்று (02.04.2026) வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்குக் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடையவுள்ளனர். அதனைத் தொடர்ந்து, நாளை வெள்ளிக்கிழமை (03.04.2026) காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கிய தமது துவிச்சக்கரவண்டிப் பயணத்தை ஆரம்பிக்கவுள்ள இவர்கள், அன்றையதினம் மதியம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நாளைமறுதினம் (04) சனிக்கிழமை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


