டெல்லியில் இருந்து கொண்டே அமித் ஷாவும், மோடியும் தமிழ்நாட்டை ஆள நினைக்கின்றனர் - ராகுல் காந்தி
நாட்டின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்குமான பாதையை பாஜக தடுத்துவிட்டது. சமூகநீதி, பெண்கள் பாதுகாப்பு என்றால் என்ன என்பதை தமிழ்நாடு மக்கள் நாட்டிற்கே எடுத்துக் காட்டியிருக்கின்றனர் என்று ராகுல் காந்தி கூறினார்.
டெல்லியில் இருந்து கொண்டே அமித் ஷாவும், மோடியும் தமிழ்நாட்டை ஆள நினைக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழக மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என ராகுல் காந்தி தெரிவித்தார். தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார்.
என் சொந்த ஊர் உணர்வை தமிழ்நாடு தருகிறது
பொன்னேரியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற ராகுல்காந்தி, காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு வருவதையும், இங்கு உரையாற்றுவதையும் நான் எப்போதும் மரியாதைக்குரிய விஷயமாக பார்க்கிறேன். இயற்கையாகவே காலப்போக்கில் தமிழ்நாட்டுடனான எனது உறவு வளர்ந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் எனக்கு அன்பு அதிகரித்துக் கொண்டே போவதற்கான காரணம் குறித்து நான் சிந்தித்ததுண்டு. எனது சொந்த ஊரான ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் போது எப்படி உணர்கிறேனோ? அதே போன்ற உணர்வை தமிழ்நாடு எனக்கு கொடுக்கிறது.
ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும் தமிழ்நாட்டையும், தமிழ் மொழியையும், தமிழ் கலாச்சாரத்தையும் தாக்க முயற்சிக்கும் போதெல்லாம் நான் என்னை தமிழனாகவே உணர்ந்திருக்கிறேன். உதாரணத்திற்கு, நேற்றைய தினத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து, அது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா என்று கூறினார்கள். ஆனால் 2023-லேயே அந்த மசோதாவை கொண்டு வந்து விட்டார்கள். இந்த முறை பெண்களுக்கான மசோதா என்பதற்கு பின்னால், தொகுதி மறுவரையறையை மறைத்து வைத்திருந்தார்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதே அவர்கள் திட்டம். தென் மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களை பலவீனப்படுத்துவதே அவர்கள் எண்ணம். ஆனால், அவர்கள் முயற்சியை நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நேற்று முறியடித்தோம். இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒன்றியம். ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனது மொழி, கலாச்சாரத்தை பாதுகாக்கும் உரிமை உண்டு.
‘ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி, ஒரே மக்கள்’ என்று பிரதமர் சொல்லும் போதெல்லாம் இந்திய அரசியலமைப்பையே அவர் தாக்குதலுக்கு உள்ளாக்குகிறார். பண்டைய காலங்களில் பல்வேறு படைகளை வைத்து தாக்கி போர்களை நடத்தினார்கள். ஆனால் பாஜக, படைகளே இல்லாமல் அதையே தான் செய்கிறது. தமிழ் மொழி, வரலாறு, கலச்சாரம் போன்றவற்றை பாஜக அழிக்க நினைக்கிறது. பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் தமிழ் மக்களை புறக்கணிக்கின்றன. அவர்களால் தமிழ் மற்றும் தமிழ் மக்களை புரிந்து கொள்ள முடியாது. அவர்களால் அழிக்க முடியாத பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றை தமிழர்கள் வைத்திருக்கிறார்கள்.
பாஜகவின் எண்ணம்
டெல்லியில் இருந்து கொண்டே தமிழ்நாட்டை ஆளுவதற்கு பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஒரு கூட்டாளி தேவைப்படுகிறது. அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியிடம் இருந்து உத்தரவுகளை பெற்று செயல்படுகிற ஒரு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டும். டொனால்டு டிரம்பு சொல்வதை கேட்கக் கூடியவராக இந்திய பிரதமர் இருப்பது போல், மோடி, அமித் ஷா கூறுவதை கேட்டு நிறைவேற்றக் கூடிய ஒரு தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லிக்கு தேவை.
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்ஸும் அடிப்படையிலேயே தமிழினத்திற்கு எதிரானவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் நாடாளுமன்றத்தில் உங்கள் குரலை ஒடுக்க நினைத்த அவர்கள் திட்டத்தை தவிடுபொடியாக்கினோம். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிற திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள், தமிழ் மீதான தாக்குதலை தடுத்துக் கொண்டிருக்கின்றனர். பாஜக -ஆர் எஸ் எஸ்ஸால் தமிழ் மக்களை, தமிழ் மொழியை ஒரு போதும் தொட முடியாது.
நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்குமான பாதையை பாஜக தடுத்துவிட்டது. சமூக நீதி, பெண்கள் பாதுகாப்பு என்றால் என்ன என்பதை தமிழ் மக்கள் நாட்டிற்கே எடுத்துக் காட்டி வருகின்றனர்.
சமூக நீதியை தமிழ் மண்ணில் நிலைநிறுத்த 6 வாக்குறுதிகளை நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.
1. ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 2000 நேரடியாக செலுத்தப்படும்.
2. வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ. 2000 செலுத்தப்படும்.
3. கல்லூரி மாணவ, மாணவிகள் கணக்குகளில் மாதந்தோறும் ரூ. 2000 வரவு வைக்கப்படும்.
4. குடும்பங்களை மேம்படுத்த ரூ. 2,500 கொடுக்கப்படும்.
5. 300 நாட்களுக்குள் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு, குரூப் சி, டி பணிகளில் 60% உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
6. முதன்முறையாக சொத்து வாங்கும் பெண்களுக்கு பத்திரபதிவு இலவசமாக செய்து தரப்படும்.
தமிழ்நாடு தேர்தலில் மக்கள் செய்ய வேண்டியது என்ன?
தமிழ் மக்களையும், தமிழர் வரலாற்றையும் பாதுகாக்க, பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் இந்த தேர்தலில் தமிழ் மண்ணில் தோற்கடிக்க வேண்டும். அமித் ஷாவும், மோடியும் டெல்லியிலிருந்து தமிழ்நாட்டை ஆள வேண்டுமெனவும், தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டுமெனவும் விரும்புகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம்.
பாஜகவின் முகமூடி தான் அதிமுக. பாஜகவால் ஆட்டி வைக்கப்படும் ஒரு கட்சியாகவே அது இருக்கிறது. எனவே மக்கள் அனைவரும் இந்தியா கூட்டணியில் இருக்கிற காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். பெரியாரின் சமூக நீதி உள்ளிட்ட கொள்கைகளை அவர்கள் அழிக்க பார்க்கின்றனர். ஆனால் தமிழ் மண்ணை, தமிழ் கலாச்சாரத்தை பாதுகாக்க நான் எப்போதும் துணை நிற்பேன்” என்றார்.


