இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் காலமானார்.
வயது 84. கடந்த சில நாட்களாக கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா வயது 84. இன்று (10) அதிகாலையில் மரணமடைந்துள்ளார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா! தமிழ்த் திரைப்படங்களில் முதன்மையாகப் பணியாற்றிய இந்தியத் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியரும் நடிகருமாவார்.
1977-ஆம் ஆண்டில் 'பதினாறு வயதினிலே' திரைப்படத்தில் அறிமுகமான இவர், கிராமத்து வாழ்க்கையைத் தனது படங்களில் மிகவும் உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் காட்டியதற்காகப் புகழ்பெற்றவர். மக்கள் இவரை 'இயக்குநர் இமயம்' என்று அன்பாக அழைக்கின்றனர். இவருடைய திரைப்படங்களில் கதாபாத்திரங்கள் அதிக ஒப்பனை இல்லாமல், எளிய மனிதர்களாகவே தோன்றுவார்கள். 2017-ஆம் ஆண்டு வரை, இவர் 6 தேசியத் திரைப்பட விருதுகள், 4 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 6 தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதுகள், ஒரு நந்தி விருது ஆகிய விருதுகளை வென்றுள்ளார். இவர் தெலுங்கு, இந்தி மொழிப் படங்களையும் இயக்கியுள்ளார்.
திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக, 2004-ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான 'பத்மசிறீ' விருதை வழங்கிக் கௌரவித்தது. 2005-ஆம் ஆண்டில், சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. இவரது பல திரைப்படங்கள் சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமைகள் மற்றும் மூடநம்பிக்கைகளைத் தைரியமாகச் சாடின. தமிழ்த் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். இவர் 38 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், 25-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார்.
தேனி-அல்லிநகரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் அரங்கத்திற்குள் எடுக்கப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்களை வெளிப்புறப் படப்பிடிப்புப் பகுதிகளுக்குக் கொண்டு சென்றவர் என்ற பெருமைக்குரியவர். பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளைப் படம் பிடித்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர். ராதிகா, ராதா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா போன்ற பல ’ரா’ வரிசைக் கதாநாயகிகளை அறிமுகம் செய்தவர். இவர் பல படங்களில் நடித்துள்ளார்.
studioகளின் செயற்கை வெளிச்சத்திலிருந்து, கிராமத்து மண் வாசனைக்கும், இயற்கைக்கும் அழைத்துச் சென்ற பெருமை!
தமிழ் சினிமாவை studioகளின் செயற்கை வெளிச்சத்திலிருந்து, கிராமத்து மண் வாசனைக்கும், இயற்கைக்கும் அழைத்துச் சென்ற பெருமை இயக்குனர் இமயம் பாரதிராஜாவையே சாரும். இன்று (10 ஜூன் 2026) அவர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவர் திரையுலகில் நிகழ்த்திய புரட்சிகளும் சாதனைகளும் என்றும் அழியாதவை. பாரதிராஜா 1941 ஆம் ஆண்டு ஜூலை 17 அன்று தேனி மாவட்டத்தில் உள்ள அல்லிநகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னச்சாமி.
திரையுலகக் கனவோடு சென்னைக்கு வந்தவர், ஆரம்பத்தில் புட்டண்ணா கனகல் மற்றும் பி. புல்லையா போன்ற மூத்த இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, 1977 ஆம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். பாரதிராஜாவின் வருகைக்கு முன்பு வரை தமிழ் சினிமாக்கள் பெரும்பாலும் செட்களுக்குள்ளேயே (Indoor Studios) எடுக்கப்பட்டு வந்தன. நாடகத் தனமான வசனங்களும், மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் பிரதானமாக இருந்தன. அதை முழுமையாக உடைத்தெறிந்தவர் பாரதிராஜா.
கேமராவைத் தூக்கிக்கொண்டு கிராமங்களுக்குச் ( outdoor shooting)சென்றார். தமிழ் சினிமாவை இயற்கை ஒளியிலும் (Natural Light), நிஜமான மனிதர்களுக்கு இடையிலும் எடுக்க முடியும் என்று நிரூபித்தார். நாயகர்களை ஒப்பனை (Makeup) இல்லாமல் எளிய மனிதர்களாகவும், கதாநாயகிகளை மாநிறத்துடனும் (Dusky looking) திரையில் காட்டி புதுமை படைத்தார்.
உண்மையான மனிதர்கள், அவர்களின் வாழ்வியல், திருவிழாக்கள், கிராமத்து வன்மம் மற்றும் எளிய காதல் என எதார்த்தத்தை திரையில் கொண்டு வந்தார்.
பெண் சிசுக்கொலைக்கு எதிரான கருத்தம்மா, சாதியக் கொடுமைகளைச் சாடிய வேதம் புதிது போன்ற படங்கள் மூலம் சமூகப் புரட்சியை ஏற்படுத்தினார். 16 வயதினிலே, (1977), கிழக்கே போகும் ரயில்(1978), சிகப்பு ரோஜாக்கள்(1978), அலைகள் ஓய்வதில்லை(1981), முதல் மரியாதை(1985), வேதம் புதிது(1985) ஆகியன பாரதிராஜாவின் திரைப்பயணத்தில் மைல்கல்லாக அமைந்த சில திரைப்படங்கள்.
திரையுலகிற்குப் புதிய திறமைகளைக் கண்டறிந்து அறிமுகப்படுத்துவதில் பாரதிராஜா ஒரு "பல்கலைக்கழகம்" போலச் செயல்பட்டார். அவரால் அறிமுகமாகி, இன்று உச்சத்தில் இருக்கும் பலர். கார்த்திக், பிரபு, பாக்யராஜ் (உதவி இயக்குனராகவும்), நிழல்கள் ரவி, சுதாகர், ரஞ்சித் போன்ற நடிகர்களும் ஸ்ரீதேவி (நாயகியாக 16 வயதினிலே), ராதிகா, ரதி, விஜயசாந்தி, ராதா, ரேவதி, ரஞ்சனி, கஸ்தூரி, பிரியா ராமன் போன்ற நடிகைகளும் அடுங்குவார்கள்.
இசைஞானி இளையராஜாவின் ஆரம்பகால வெற்றிப் பயணத்திற்குப் பாரதிராஜாவின் படங்கள் மிகப்பெரிய தூணாக இருந்தன. இவர்களின் கூட்டணி தமிழ் சினிமாவின் பொற்காலம் எனவே சொல்லவேண்டும். அவரது அசாத்திய திறமைக்காக இந்திய அரசிடமிருந்தும், தமிழக அரசிடமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்:
பத்மஸ்ரீ விருது (2004) – இந்தியாவின் உயரிய குடிமகன் விருதுகளில் ஒன்று.
6 தேசிய திரைப்பட விருதுகள் – சிறந்த பிராந்தியத் திரைப்படம், சிறந்த சமூகத் திரைப்படம் போன்ற பிரிவுகளில் பெற்றுள்ளார். தமிழ்நாடு மாநில அரசு விருதுகள் – பலமுறை சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படத்திற்கான விருதுகளை வென்றுள்ளார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜா என்பது வெறும் பெயரல்ல; அது தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம். இன்று நாம் பார்க்கும் எதார்த்தமான, மண் வாசனை வீசும் திரைப்படங்களுக்கு அடித்தளமிட்டவர் அவரே. வயது முதிர்ந்த நிலையிலும், தற்போதும் சில திரைப்படங்களில் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து (எ.கா: திருச்சிற்றம்பலம்) சினிமாவுடனான தனது பிணைப்பைத் தொடர்ந்து வந்துள்ளார்.
தமிழ் திரையுலகம் இருக்கும் வரை அவரது பெயர் "இமயம்" போல் உயர்ந்து நின்றுகொண்டே இருக்கும்!


