”ஈழ மண்ணை வைத்து ஒரு படம்கூட எடுக்கவில்லை - பாலுமகேந்திரா!”
‘‘சங்கப் பாடல்களில் தலைவனைத் தேடிக் காத்திருக்கும் தலைவியின் ஒவ்வோர் இரவும் `நீள் இரவு’ - "நீளிரா'..."
”ஈழ மண்ணை வைத்து ஒரு படம்கூட எடுக்கவில்லை என ஆதங்கப்பட்டார் பாலுமகேந்திரா!”
இந்த ஊரில் என் காலடித்தடங்கள் படாத இடமே இல்லை. ஆனால் ஈழ மண்ணை வைத்து ஒரு படம்கூட நான் எடுக்கவில்லை. நீ அடுத்து என்ன வேண்டுமானாலும் செய். ‘நீளிரா.’ இதுதான் படத்தின் பெயர். இலங்கையில் 80-களில் நடக்கிற கதை. இலங்கையில் போர் நடந்துகொண்டிருக்கும் பின்னணியில் திருமணத்துக்குத் தயாராகும் ஒரு குடும்பம், அவர்களது வீட்டைச் சுற்றி நிகழும் சம்பவங்களால் பதற்றமாகும் அந்த இரவும், இரவைக் கடந்து திருமணம் எப்படி நடந்தது என்பதும்தான் கதைக்களம். இந்த ஸ்கிரிப்ட்டை ஒரு வாழ்க்கையாகத்தான் பார்த்தேன். என்னை முற்றாக பாதிக்காத எதையும் என்னால் தொட முடியாது.
‘வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா' என்பது எவ்வளவு பெரிய உண்மை. மனிதனை அன்பால் தொடுவதே இலக்கியமும் சினிமாவும் என்று நினைக்கிறேன். சினிமாவின் மொழி எப்போதும் எளிமையானது. அப்படியே ஓரு பெரும் பதைபதைப்போடு கடந்து போகும் இரவையும், சூழும் பொழுதையும், திருமணத்துக்குக் காத்திருக்கும் விடியலையும் உண்மைக்கு நெருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்.'' அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் சோமிதரன். ஈழத்தின் தலைசிறந்த ஆவணப்பட இயக்குநராகவும், சிறந்த பத்திரிகையாளராகவும் அறியப்பட்டவர்.
"நீளிரா'... படத்தின் பெயரே ஈர்க்கிறதே?" : ‘‘சங்கப் பாடல்களில் தலைவனைத் தேடிக் காத்திருக்கும் தலைவியின் ஒவ்வோர் இரவும் `நீள் இரவு’ எனக் குறிப்பிட்டு ஒரு வார்த்தை வரும். என்னை இந்த வார்த்தை பரவசப்படுத்தியது. இந்தக் கதைக்கும் பொருத்தமானதால் ‘நீளிரா' எனப் பெயர் அமைந்தது. ஹாலிவுட்டில் டொரான்டினோ இன்று பிரபலமான இயக்குநராக அறியப்படுகிறார். அவருடைய எல்லாப் படங்களுமே யூதர்களின் கதைகளிலிருந்து அமைந்த படங்களாகவே வெளிவருகின்றன. அதையும் வசீகரமான கமர்ஷியல் வடிவத்தில் அவரால் சொல்ல முடிகிறது. மக்கள் ஜனரஞ்சகமாகப் பார்ப்பதற்கு ஈழத்திலிருந்தும் படங்கள் வர முடியும். இது ஒரு திறப்புதான். புதிய காற்றுக்கு வழிவிடுவதுதான். இத்தனை நாளாக ஈழத்தின் கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சினிமாவாகக் கூடிவரவே இல்லை. ஈழத்திலிருந்து வந்த ஒருவன், ஈழத்தின் கதையை எடுப்பது இதுதான் முதல் தடவை என நினைக்கிறேன்.
லயோலாவில் படித்த பிறகு, பாலுமகேந்திரா சாரிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது நான் எடுத்துக்கொண்டிருந்த ஆவணப்படத்தைப் பார்த்தவர், ‘இந்த ஊரில் என் காலடித்தடங்கள் படாத இடமே இல்லை. ஆனால் ஈழ மண்ணை வைத்து ஒரு படம்கூட நான் எடுக்கவில்லை. நீ அடுத்து என்ன வேண்டுமானாலும் செய். ஆனால் உன் முதல் படமாக ஈழத்தின் கதையை எடு' என்றார். தான் எடுக்கவில்லையே என்ற ஆற்றாமையும் ஆதங்கமும் அவரிடம் இருந்தன. அதனால் ஈழத்துக் கதையை எடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தேன். மதுரையிலிருந்து வந்தவர் மதுரையைக் குறித்து ஒரு கதையைச் சொல்ல முடியும் என்றால், ஈழத்திலிருந்து ஒரு கதை சொல்ல முடியாதா என்பதுதான் என் கேள்வி. இந்தப் படம் வரும்போது அது இன்னும் பல கதைகளுக்கான கதவைத் திறக்கும் என நம்புகிறேன்.''
"ஈழத்துக் கதையை த்ரில்லர் வடிவில் எடுப்பதுதான் ஆச்சர்யமளிக்கிறது..." ‘‘நிறைய ஓடிடி தளங்களில், `சர்வைவல் த்ரில்லர்’ என்ற வகை சிறப்பாகக் கையாளப் படுகிறது. மக்கள் ஒரு சூழலில் எப்படிச் சிக்கிக்கொள்கிறார்கள். அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதைப் பார்க்க மக்கள் எப்போதும் விரும்புகி றார்கள். என் கதையும் அதே மாதிரி கதைதான். சந்தோஷமாக ஒரு கல்யாணத்துக்குத் தயாராகிற வேளையில் திடீரென அமைந்துவிட்ட ஒரு போர்ச் சூழலில் அந்தத் திருமணம் எப்படி நடந்தது என்பதிலும் அத்தனை த்ரில் இருக்கிறது.
போர் என்றால் அதற்குள்ளே ஒரே ரத்தமும், சதையும், ஓலங்களும் மட்டுமே இருக்கும் என்பது பலருக்கும் எண்ணமாக இருக்கிறது. விடாது இருக்கிற போர்ச் சூழலிலும் காதல் இருந்திருக்கிறது. மேலே குண்டு போட்டுக் கொண்டிருக்கும்போது, பங்கருக்குள் பதுங்கும்போது நமக்குப் பிடித்த பெண்ணும் அதில் பதுங்க வரும். மேலே குண்டுகள் பொழிந்துகொண்டிருக்கும்போதே இங்கே காதல் மலரும். போர் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அப்படி மாறியதற்குள் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கைக்குள்ளும் காதல், அன்பு, மகிழ்ச்சி, கொண்டாட்டம் எல்லாமே இருக்கின்றன. அதைத்தான் இதில் சொல்ல நினைக்கிறேன். நான் இங்கே போரின் சரி, பிழைகளுக்குள் போகவே இல்லை. நூறு வருஷ தமிழ் சினிமாவில் ஈழத்தின் சினிமா வரவேயில்லை. இந்தப் படத்தை நான் எடுக்க வேண்டும் என்பது என் கனவு மட்டுமல்ல, ஈழ சினிமா ஆர்வலர்களுக்கான கனவு. என் கதையை யாரும் எடுக்கவில்லை, நான் எடுக்கிறேன்.''
``இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இந்தப் படத்தைத் தயாரித்தது எப்படி?’’
‘‘அவர் எனது நீண்டகால நண்பர். அவரோடு பல படங்கள் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். ‘இறைவி'யில் நடித்தும் இருக்கிறேன். அவர்தான் ‘நீங்கள் ஏன் ஒரு படத்தை இயக்கவில்லை?' என கேட்டுக் கொண்டேயிருந்தார். பத்திரிகை யாளராகத் திறம்படப் பணி புரிந்தவன், ஒரு திரைப்படத்தையும் திறம்படச் சொல்லிவிட முடியும் எனத் தோன்றியது. கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் கார்த்திகேயன், கல்யாண் இவர்கள்தான் இதைச் சாத்தியமாக்கினார்கள். இதில் நவீன் சந்திரா, சனத், ரூபா கொடுவாயூர், கபிலா, விது, சிது குமரேசன், வின்சென்ட், ரோஹித் கோகடே ஆகியோரும் நடிக்கிறார்கள். என் கற்பனையில் இருந்த முகங்களைத் தேடுவதில் கறாராக இருந்தேன். இதில் நடித்திருக்கிற கபிலா, மலையாளத்தின் பிரபலமான கொடியாட்டம் டான்ஸர். இதில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்.''
``இசை எப்படி அமைந்தது?’’
‘‘இதற்கு இளையராஜா மிகவும் பொருத்தமானவராக இருப்பார். முதல் படத்தில் அவரிடம் பேசி எப்படிப் பெறுவது என்பதில் பெரிய தயக்கம் இருந்தது. இதற்கு மியூசிக் அமைத்தவர் கே. அவரிடம் ஒரு ராஜா சார் குடிகொண்டிருந்தார். ‘ராஜா சாரிடம் போக விரும்பினேன். அதைச் செய்து கொடுங்கள்' எனச் சொல்லிவிட்டேன். இது எனக்கு மிகவும் பர்சனலான கதை. அதைப் புரிந்துகொண்டு கே. பணியாற்றியிருக்கிறார்.
போர், அரசியல், ஈழம் தெரியாதவர்கள்கூட இந்தப் படத்தை ரசிக்குமாறு அமைந்திருக்கிறது. இதில் ஒரு சின்னப் பையன் வருவான். அந்தச் சின்னப் பையன் நான்தான். ஈழத்தில் பல இரவுகள் இப்படி த்ரில்லராகத்தான் அமையும். பூனா இன்ஸ்டிட்யூட்டில் படித்த பிரதீபன் ஈழத்தைச் சேர்ந்தவன். அவனே இந்தக் கதையைப் புரிந்து உயிரும் உணர்வுமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறான். ஒரு பெண்ணால் இதைச் சரியாகப் புரிந்துகொண்டு எடிட் செய்ய முடியும் என்று நினைக்கும்போதே ராதா அமைந்தார். ‘பேட் கேர்ள்' எடிட்டரும் இவர்தான்.''
``சினிமா ஆர்வம் வந்தது எப்படி?’’
‘‘நான் மட்டக்களப்பில் படித்தேன். ஒவ்வொரு நாளும் பாலுமகேந்திரா அவர்களின் வீட்டைக் கடந்துதான் போவேன். அந்த வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள். அரிதாக அவரின் உறவினர்கள் அங்கே தட்டுப்படுவார்கள். ஊரிலும் வெளியிலும் அப்போது எனக்குத் தெரிந்த ஒரே இயக்குநர் அவர்தான். பாலு சாரை மனப்பூர்வமாக இதயத்தில் ஏந்தியிருக்கிறேன். மேலும் என் அனுபவ வாழ்க்கையில் சொல்ல நிறைய இருக்கிறது. அவையும் திரைக்கு வர விரும்புகிறேன். பாலு சாருக்கு ‘பை சைக்கிள் தீவ்ஸ்' போட்டுக் காண்பித்த பாதிரியார் மில்லர்தான் எனக்கும் படங்கள் திரையிட்டுக் காட்டியிருக்கிறார். அப்போதெல்லாம் சென்னை எனக்குத் தொலைதூரத்தில் இருந்தது. எங்கள் ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் போவதற்கே நாலு செக்போஸ்ட்டுகளைக் கடக்க வேண்டியிருக்கும். தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது என் ஊர் இதில் வராதா என நினைத்திருக்கிறேன். என் ஊர் தெரிய வேண்டும். நான் பேசுகிற தமிழ் பேச வேண்டும். என் வாழ்க்கை தெரிய வேண்டும் என நினைத்தது ‘நீளிரா' படத்தில் நடந்திருக்கிறது. இதில் என் உழைப்புக்கு மரியாதை கிடைக்கும் என நம்புகிறேன்.''
- ஈழத் தமிழ் இயக்குனர் சோமீதரன்


